Breaking News :

Sunday, September 08
.

பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்


புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிக மாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை பூஜித்து வந்த, சகோதரர்கள் இருவர் இந்த தலத்திற்கு வந்தனர். பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்று பெயர் கொண்ட அவர்கள், அசுரர்களாக இருப்பினும் சிவபெருமானின் பக்தர்களாக விளங்கினர்.

பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம், வழிபாட்டிற்காக காசியில் இருந்து புனித லிங்கம் எடுத்து வரும்படி கூறினான். அண்ணன் சொன்ன சொல்லை தட்டாமல் தம்பி காசிக்கு சென்றான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிரஞ்சீவி வந்து சேரவில்லை. இதனால் பெருஞ்சீவி மண்ணால் சிவலிங்கம் ஒன்றைச் செய்து, உரிய நேரத்தில் சிவ வழிபாடு செய்து முடித்தான்.

இந்த நிலையில் பூஜை முடிந்து வந்த சிரஞ்சீவி, ஏற்கனவே மண்ணால் ஆன லிங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அண்ணன் ஏற்கனவே பூஜையை முடித்து விட்டதை அறிந்த சிரஞ்சீவி, ‘நான் கொண்டு வந்த லிங்கத்தையும் வைத்து வழிபடுங்கள்’ என்றான்.
பெருஞ்சீவி, ‘தம்பி! ஈசனுக்குரிய பூஜை காலம் முடிந்து விட்டது. எனவே நீ கொண்டு வந்த லிங்கத்தை வைத்து பூஜை செய்ய இயலாது’ என்றான். ஆனால் சிரஞ்சீவி விடுவதாக இல்லை. இதனால் கோபம் கொண்ட பெருஞ்சீவி, ‘நீ! லிங்கத்தை தாமதமாகக் கொண்டு வந்துள்ளாய். அதை விட இப்போது அடம்பிடிக்கிறாய். இது தவறு’ என்றான். இதையடுத்து அண்ணன்- தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தம்பி சிரஞ்சீவி, ‘நீ மண்ணால் செய்த இந்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன்’ என்று அண்ணனிடம் சபதம் செய்து விட்டு, கயிலாயநாதனை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். இதனைப்பார்த்த பெருஞ்சீவி கலங்கிப் போனான். இருப்பினும் தனது தம்பியைத் தடுப்பதற்காக, அவனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான்.

அண்ணன்- தம்பி இருவரின் தவத்தால், அவர்கள் இருக்கும் தலத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று நினைத்த திருமால், சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும், பெருஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பி வைத்தார்.

ஆதிசேஷன் பூலோகம் வந்து, பெருஞ்சீவி அமைத்த மண் லிங்கத்தை அசைக்கத் தொடங்கியது. கருடன் அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும், ஆதிசேஷன் அங்கிருந்து அகன்று விட்டது. கருடனும் தன் இருப்பிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்களுக்கு திருமால் காட்சியளித்தார்.

அப்போது அவர், ‘உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப்புரிந்து கொண்டு நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து ஈசனை வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இத்தலம் புகழ்ப்பெற்று திகழும். காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தையும் இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

அதன்படியே மண் லிங்கத்தின் பின்னால் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்தல சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை தரிசித்தனர். அந்த லிங்கத்திற்கு தினமும் ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தனர்.

அப்படி முதல் நாள் அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக சிவலிங்கத்தின் அருகில் பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பெருமை மிகுந்த இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை, ஜடாய்வர்ம வல்லவ சுந்தர பாண்டியன் என்பவர் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 13-ம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல இறைவனின் பெயர் கயிலாயநாதர், அம்மனின் திருநாமம் பிரசன்ன நாயகி என்பதாகும்.

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதுபோல, இக்கோவிலிலும் கிரிவலம் நடக்கிறது. அடிவாரத்தில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி, சுவாமியை தரிசித்தால் நன்மைகள் வந்து சேரும். பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்ப நதியில் நீராடி, தேரோடும் வீதிகளில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும் கயிலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும். அதேப் போல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பத்மபீடத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா, சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம், ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை முதல் சோமவாரம் சங்காபிஷேகம், நந்தி பகவானுக்கு பிரதோஷ நாட்களில் அபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், மகா சிவராத்திரி என பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தோஷம் நீக்கும் சிறப்பு பூஜை :

ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதி அன்றும் மாத சங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள், மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அம்மனுக்கும், சுவாமிக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்படுகிறார்கள். இவ்வாறு செய்வதால், சகல தோஷங்களும் நீங்கி சுப மங்கலம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமைவிடம் :
புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் வழியாக 30 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து புதுவயல் வழியாக 25 கிலோமீட்டர் தூரத்திலும், அறந்தாங்கியில் இருந்து தேனிப்பட்டி வழியாக 26 கிலோமீட்டர் தொலைவிலும் கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் நெடுங்குடியை அடையலாம். கோவில் அருகில் செல்லவும் நகரப் பேருந்துகள் உள்ளன.

சிவ  அஷ்டோத்தரம் எளிய தெய்வம் இனிய தெய்வம் நம் தகப்பன் ஒப்பற்ற தலைவன் ஈடு இணையற்றவன்

.மகேஸ்வரன் மலர்பாதங்களில் சரணடைந்து இன்று 21/8/24  புதன்கிழமை நமக்கு பேரின வாழ்வும் முக்தி சக்தி ,நோயற்ற வாழ்வு தந்து வாழும் நாள் வரை அவன் நாமமே சொல்லி வாழ அருள் புரிய வேண்டுவோம் !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.