இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேமம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. (திருமயம் - கீழச்சீவல்பட்டி - ராங்கியம் வழித்தடம்) இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்.
இக்கோயிலின் மூலவராக ஜெயங்கொண்ட சோளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். கோயிலின் முன்பாக கோயில் தீர்த்தமான சோழ தீர்த்தம் உள்ளது
கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன.
அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள தேவர்கள் சிவனை வழிபட வந்தனர். அப்போது யோக நிலையில் இருந்த அவரை எழுப்புவதற்காக மன்மதனை வேண்ட, மன்மதன் சிவன்மீது மலர்க்கணை தொடுத்தார். சிவன் தன் கண்களைத் திறந்து அவரைச் சாம்பலாக்கினார். ஆதலால் மூலவர் ஜெயங்கொண்ட சோளீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
மாலைசாத்தி வழிபாடு
சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடந்தும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணகந்தர், உற்சவ மூர்த்தி, வைரவர் ஆகிய ஏழு சுவாமிகளுக்கும் மாலை சாத்த வேண்டும். பலன் கிடைத்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மேற்கு நோக்கிய வைரவர்:
கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் (பைரவர்) இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.