உலகையே காத்தருளும் சிவபெருமான் எப்போதும் யோகநிலையில் இருக்க கூடியவர். அவரின் கழுத்தில் அணிகலனாக இருக்க கூடிய நாகம் அந்த சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி அதிலிருந்து சாப நிவர்த்தி பெற வழிபட்ட கோவில் தான் தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் “திருப்பாம்புரம் கோவில்”. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றியும், மனிதர்களின் எத்தகைய தோஷங்களை இக்கோவில் போக்குகிறது.
தல வரலாறு :
சோழர்கள் எழுப்பிய தேவாரத் திருத்தலங்களில் 59 வதாக இருக்கிறது திருப்பாம்புரம் கோவில். சைவம் வளர்த்த நால்வரில் “திருஞானசம்பந்தர்” இத்தல ஈசன் மீது பாடலியற்றியுள்ளார். புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார். ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு “சர்பபுரி” என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை “பாம்புரநாதர்” என்றும் “சேஷபுரீஸ்வரர்” மற்றும் “சர்பேஸ்வரர்” என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூறுகின்றனர். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கோவில்பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் இதற்கு காரணம் இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனின் சக்தியே என பக்தர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு அதிசயமாக இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டியதில்லை என கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.
சர்ப்பதோஷம் அல்லது “நாகதோஷத்தால்” பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.
கோவில் நடை திறப்பு நேரம் : வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7.30 லிருந்து மதியம் 12.30 வரையிலும் மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
கோவிலின் அலுவலக தொலைபேசி எண்: +91-435-2469555, +91-944-3943665, +91-944-3047302.
கோவில் முகவரி:
ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோவில்,
மாரியம்மன் கோவில் தெரு,
திருப்பாம்புரம்,
திருவாரூர் மாவட்டம்
தமிழ் நாடு – 612203
கோவில் அமைவிடம்:
இந்த திருப்பாம்புரம் கோவில் கும்பகோணம்- காரைக்கால் நெடுஞ் சாலையில் இருக்கும் கொல்லுமாங்குடி எனும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவில் கற்கத்தி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல சிறு பேருந்து மற்றும் வாடகை கார் வசதிகளும் உள்ளன.