Breaking News :

Sunday, February 25
.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடு


முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம்,​​ ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும்.​ பெரும் புலவர் நக்கீரர்,​​ முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படை,​​ முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.முருகன் அருள் பெற்ற புலவர்,​​ மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும்.​ இதனால்,​​ திருமுருகாற்றுப் படைக்குப் ‘புலவர் ஆற்றுப் படை’ என்ற வேறு பெயரும் உண்டு.​’இயற்கை அழகே முருகன்’ என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.​ அதனால் முருகப் பெருமானின் அழகைக் ‘கை புனைந்து இயற்றாக் கவின் பெரு வனப்பு’ ​ என்று கொண்டாடுவார்.​ ​பழந்தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்,​​ முருகப் பெருமானை ‘சேயோன்’ என்ற பெயரால் அழைக்கிறது.​ ‘சேயோன் மேய மைவரை உலகம்’​ என்பது தொல்காப்பிய சூத்திரத்தில் காணப்பெறும் தொடராகும்.​ ​ ‘சேயோன்’ என்பதற்கு ‘இளையவன்’ என்ற பொருளும் உண்டு.​ இளமை எங்குள்ளதோ அங்கே அழகும் கொஞ்சி விளையாடும்.​ ‘மைவரை உலகம்’ என்றால் ‘மழை மேகம் சூழ்ந்த மலைப் பகுதி’ என்பது பொருள்.​ மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை என்று கூறுகிறது தொல்காப்பியம்.​ ஆம்!​ குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் நின்று அருள் பாலிப்பான்.​’ஆற்றுப் படை’ என்பதே ‘ஆறுபடை’ எனத் திரிந்துவிட்டது என்றொரு கருத்துண்டு.​

 

முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்.

 

திருச்செந்தூரில் தொடங்கி திருத்தணியில் முடியும் வரைபடம் இங்கே காட்டப்பட்டுள்ளது. உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் இதே வழித்தடத்திலோ அல்லது திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்கலாம்.

 

உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரத்தை கொடுத்துள்ளேன். ஆனால், விசேஷ நாட்களில் தரிசன நேரம் மாறுபடலாம். ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமானை வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளாவன:-

 

திருப்பரங்குன்றம்

 

‘முதல் படை வீடு’ என்ற பெருமையைப் பெறுகின்றது,​​ மதுரை மாநகரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம்.​ சூரபத்மனை அழித்து,​​ தேவர்களைப் பாதுகாத்தார் முருகப் பெருமான்.​ அவருக்கு தன் மகள் தேவசேனாவை மணம் முடிக்க விரும்பினான் இந்திரன்.​ முருகப் பெருமான் -​ தேவசேனா திருமணம் நிகழ்ந்த திருத்தலமே முதலாம் படை வீடாகிய திருப்பரங்குன்றம்.​திருப்பரங்குன்றத்தில் மலையைக் குடைந்து கர்ப்ப கிரஹம் அமைக்கப் பெற்றுள்ளது.

 

திருச்செந்தூர்

 

சூரபத் ​மனை முரு​கப் பெரு​மான் அழித்த திருத்தலமே​​ இரண்​டாம் படை வீடான திருச்​செந்​தூர்.​ நெல்லை மாவட்​டத்​தில் மிகச் சிறந்த முரு​கன் தல​மாக,​​ கடற்​கரைக் கோயிலாகத் திகழ்கின்றது இவ்வாலயம்.​ ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி விழா,​​ மிகவும் சிறப்பாக நிகழ்கின்றது.​ திருமலை நாயக்க மன்னரின் காரியக்காரர் வடமையப்பப் பிள்ளை என்பவர்,​​ திருச்செந்தூர் முருகப் பெருமானின் பக்தராக விளங்கியவர்;​ இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவரென்று வரலாறு சொல்கிறது.​ஊமையாக இருந்த குமர குருபரர்,​​ செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று,​​ பாடும் திறனும் பெற்று ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’,​ ‘மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்.​டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து,​​ அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.

 

பழம் நீ ​(பழனி)

 

‘பழம் நீ’ என்பதே ‘பழனி’ எனத் திரிந்தது.​ மூன்றாம் படை வீடான பழனிக்கு,​​ ‘திரு ஆவினன் குடி’ என்பதே பழந்தமிழ்ப் பெயராகும்.​ இங்கு ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கு,​​ பல்வேறு காவடிகள் சுமந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர்.​ ​ இங்கு திருத்தேர் விழா,​​ திருக்கல்யாண விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ ஆடிக் கிருத்திகை விழா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.​ ​பழனி மலையில் பாதம் தேய நடந்து சென்று வழிபாடு செய்வதே சிறப்பு.​ இருப்பினும் முடியாதவர்களுக்காக விசேஷ வாகன வசதியை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.​ மலையுச்சியில் நவ பாஷனங்களால் உருவாக்கப்பட்ட ஞானப் பழமாக முருகப் பெருமான் விளங்குகின்றார்.​ இவருடைய எழிலின் நேர்த்தியைக் காணக் கண் கோடி வேண்டும்.​ பழனி முருகப் பெருமானைத் தங்கத் தேரில் வைத்து வழிபாடு செய்யும் எழில்மிகு காட்சியையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.​ வேண்டுதலாகப் பணம் கட்டி முருகப் பெருமான் பவனி வரும் தங்கத் தேரை இழுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.​ இங்கே கிரிவலமும் பௌர்ணமி நாளில் நிகழ்கின்றது.

 

சுவாமிமலை

 

பிரணவ மந்திரத்தின் உட்பொருளை,​​ தந்தை சிவபெருமானுக்கே உபதேசித்த தனயன் முருகப் பெருமான்.​ இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த நான்காம் படை வீடே சுவாமிமலை.​ ‘சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா’ என்று இந்த லீலையை வர்ணித்து மகிழ்ந்துள்ளார் அருணகிரிநாதர்.​ இந்தத் திருத்தலத்தை திருமுருகாற்றுப் படையும்,​​ சிலப்பதிகாரமும் ‘திரு ஏரகம்’ என்று குறிப்பிடுகின்றன.​ தஞ்சை மாவட்டத்தில்,​​ கும்பகோணம் அருகிலுள்ள ‘சுவாமி மலை’ முருகன் தலத்தில் எப்போதும் திருவிழாக் கோலம்தான்.​ இங்கும் ஆடிக் கிருத்திகை விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ வைகாசி விசாகப் பெருவிழா,​​ பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கின்றன.

 

திருத்தணிகை

 

‘சிக்​கல்’ என்ற திருத்தலத்தில் வேல் வாங்கி,​​ செந்தூரில் சூரபத்மாதி அவுணர்களை அழித்து,​​ சினம் அடங்கி அமைதி காண முருகப் பெருமான் திருக்கோயில் கொண்ட ஐந்தாம் படை வீடே திருத்தணி.​ போர் உணர்வு தணிந்ததால் இத்தலம் ‘செருத்தணி’ என்று முன்பு அழைக்கப் பெற்றதாகவும்,​​ ‘செருத்தணி’ என்பதே ‘திருத்தணி’ எனத் திரிந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.​ஆறுபடை வீடுகளில் படித் திருவிழா,​​ குறிப்பாக ஆடிக் கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நிகழும் திருத்தலம் திருத்தணியாகும்.​ திருப்புகழைப் பாடிப் பரவும் பக்தர்களின் பாக்கியமாக ஆடிக் கிருத்திகை அமைந்துள்ளது.​கிருத்திகை விரதம் இருந்து,​​ திருத்தணி முருகனைப் பக்தியுடன் படியேறி வழிபாடு செய்தால் சகல வளமும் நலமும் பெறலாம்.​ ​’வள்ளி’ என்ற குறவர் குலப் பெண்ணை மணம்புரிந்த திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் திருத்தணிக்கு உண்டு.’தேவசேனா’ என்ற தேவேந்திரன் திருமகளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான்,​​ ‘வள்ளி’ என்ற குறவர் மகளைத் திருத்தணியில் மணம் செய்து கொண்டான்.​ முருகப் பெருமானுக்கு ‘ஏற்றத் தாழ்வு’ என்பது இல்லை என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே வள்ளி-தெய்வயானை ​(தேவசேனா)​ திருமணமாகும்.​ ஆம்!​ பக்தர்களிடம் உயர்வு -தாழ்வு காட்டாத பரம்பொருளே முருகன்!​ முருகப் பெருமானின் இரு தார மணத்தின் நோக்கம் இதுதான்.

 

பழமுதிர் சோலை

 

‘பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’​ என்று தன் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்வார் பெரும்புலவர் நக்கீரர்.​ ‘அழகர் மலை’ என அழைக்கப் பெறும் ‘பழமுதிர்சோலை’ சைவ-வைணவ ஒருமைப்பாட்டின் சின்னம்!​ இந்தத் தலத்தில் கள்ளழகராகிய திருமாலும் கோயில் கொண்டுள்ளார்!​ அழகுக்கெல்லாம் அழகான முருகப் பெருமானும் குடி கொண்டிருக்கிறார்.​ ‘முருகு’ என்ற சொல்லுக்கே ‘அழகு’ எனும் பொருள் உண்டே!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.