ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது அனைவருடைய நம்பிக்கை. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணிகை தலத்திற்கு 27.கிலோ மீட்டர் தொலைவில் சிவன் தலம் பஞ்சாட்சரமலை அமைந்துள்ளது.
இம்மலை மிகவும் தொன்மையானது. இங்கு "அருள்மிகு மரகதேஷ்வரரும் அன்னை அருள்தரும் மரகதாம்பிகையும் சதாசிவ நிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்."
108 திவ்ய தேசத்தில் ஒன்றான ஸ்ரீ யோகநரசிம்மர் பெருமாள் இரண்யனை வதம் செய்து இரத்தவிரல்களை கழுவ திருகடிகை எனும் (தக்கான்குளம்) வருவதற்கு முன்பாக அவர் தம் முதல் காலடியை பஞ்சாட்சரமலையில் மலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை சோளிங்கர் பெரிய மலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் இன்றுவரை உள்ளன.
மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான கம்பீரமான ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திர திரிசூலத்தை காணலாம். இத்திரிசூலத்தை வணங்கி மலையேறினால்
ஐவிரல் ஆலமரத்தையும், ஆதிகங்கா தேவியையும் தரிசிக்கலாம்.
இந்த மலைப் பாதையின் மிகவும் தொன்மையான படிகட்டுகளை காணலாம். மிகவும் சிரமப்பட்டு தான் பாதையில் நடந்து சென்ற களைப்பெல்லாம் நீங்கிட
பஞ்சாட்சரமலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் தரிசிக்கலாம். பஞ்சாட்சரமலைமேல் சபைமீதுள்ள சிவலிங்கம் தான் மூலவர் கடவுள் ஆகும்.
இவர் கிழக்கு நோக்கி கம்பீரமான தலைபாகையுடன் எழுந்தருளியுள்ள அருள்மிகு மரகதேஷ்வரர் எனும் திருநாமம் கொண்டுள்ளார்.
இறைவி அருள்தரும் மரகதாம்பிகை எனும் பெயருடனும், உற்சவர் அருள்மிகு நடராஜர், சிவகாமியம்மை, மாணிக்கவாசகர் (ம)
சோமாஸ்கந்தமூர்த்தி எனும் பெயருடன் கொண்டுள்ளனர்.
இவர்களை பக்தர்களே அபிஷேகித்து, மலர்கள் சூட்டிப் பூஜை செய்யலாம். பக்தர்களுக்கு இடையில் எந்தப் பூசகர்களும் இல்லை. பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள்,
சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கலாம்.
அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். பரபிரம்மமே இறைவன் என்பதால் இத்தலம் கருவறை இன்றி இருக்கிறது. மேலும் இத்தல விருட்சமாக கருங்காலி மரம் அமைந்துள்ளது.
மகப்பேறு அற்றோர் இதில் தொட்டில் கட்டினால் மகப்பேறு அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இம்மலையில் ஒவ்வொரு பூஜையின் போதும் கருடன் வட்டமிடுவதை கணலாம். ஏழைகளின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். "மேலும் இந்த பஞ்சாட்சரமலைக்கு உத்திராட்சமலை, என பெயர் உண்டு.
இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. கதவுகள் இல்லாத கோவில் இது.
பஞ்சாட்சரமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. பஞ்சாட்சரமலை கிரிவலப் பாதையின் தூரம் 07.05 கிலோமீட்டர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் பில்லாஞ்சி என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை அடிவாரத்திற்க்கு
04 கிலோமீட்டர் தூரம்.
அடிவாரத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரம் சென்றால் மலை உச்சியை அடியலாம். இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை மக்கள் அனைவரும் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் தனிச்சிறப்பு ஆகும்.
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திராதரிசனம், மகரஜோதி,
தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், (ம) பிரதிமாத அம்மாவாசை, கிருத்திகை, சோமவார திங்கள் அபிஷேகம்
முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவிலில் சிறப்பு அபிஷேகமும் (ம) விழாக்கோலம் காணும். பாவங்கள் போக்கும் பஞ்சாட்சரமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை. இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது.
பஞ்சாட்சர மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம்,
ஆராதனை செய்தால், நற்பலன்கள் பெறலாம். "அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை' என்று சொல்வதுபோல், "படிக்கொரு லிங்கம் பஞ்சாட்சரமலை' என்பர்.
இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம், ஞானம் கைகூடும்,
திரிகால ஞானயோகம் கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை. வெயிலின் கடுமை குறையட்டும் என்று காத்திருந்து, மாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பஞ்சாட்சர மலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
வலம்வர சுமார் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி நேரம் ஆகலாம். மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி இல்லாததால், பௌர்ணமி இரவில் இம்மலை விழாக் கோலம் மலைசுற்றில் காண பெறுகிறது.
இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய், நல்லெண்ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா துணியில் பெரிய திரி தயார் செய்து பக்தர்களே சூடம் ஏற்றி, தீபம் ஏற்றுகிறார்கள். மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல் விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும்.
மேலும் தற்போது பஞ்சாட்சர மலைக்கோவிலுக்கு 80 கி.மீ.சுற்றுவட்டாரம் இல்லாத ஐம்பொன் நடராஜர், சிவகாமியம்மை, மாணிக்கவாசகர், (ம) சோமாஸ்கந்தர் சிலைகள் சோழர்கள் கால குறியீடு கொண்டு திருபணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஒருமுறை மலை ஏறி இறைவனை தரிசித்து வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.