Breaking News :

Saturday, March 22
.

பணப் பிரச்சனை தீர முருகனுக்கு செவ்வாய் கிழமையில்?


செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.

கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும், செவ்வாய் கிழமையில் சேர்ந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபடுவது இன்னும் விசேஷமானது.
முருகனை தினசரி நம் வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி-தெய்வானையுடன் நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சுவாமி படத்திற்கு முன்னால் "ஓம் சரவணபவ" என்ற எழுத்தினை அரிசி மாவால் எழுதி கோலமிட வேண்டும்.

முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் தினசரி 6 விளக்குகள் ஏற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக பழங்கள் கற்கண்டு, உலர்திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து, முருகனை பூக்களால் அலங்கரித்து தீப தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம்.

முருகப் பெருமானுக்கு உகந்த மலர்களான முல்லை, சாமந்தி, ரோஜா முதலிய பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பு. சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

இந்த பூஜையில் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை மூன்று முறை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு, அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி, கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே, ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.

ஏறுமயில் லேறி விளையாடுமுக மொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும்முக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.

இந்த இரண்டு முருகப்பெருமானின் பாடல்களையும் பாட வேண்டும். உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் படிப்பது நல்லது. படிக்க முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் ஒலிக்கச் செய்து காதால் கேட்பதும் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் திருமணம் தடை உள்ளவர்களும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம் தோறும் வரும் சஷ்டியிலும் முருகனை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நமக்கு பலனை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.