Breaking News :

Tuesday, June 25
.

கொல்லூர் மூகாம்பிகை கோயில் அரிய தகவல்கள்!


மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள்.

1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள்.
3. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

4. கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.
5. அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.
6. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.
7. மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.
8. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.
9. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.
10. மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.
11. கொல்லூர் கோவில் பூசாரிகளை புரோகிதர்கள் என்றே அழைக்கின்றனர். கோவிலின் அனைத்து தேவைகளும், சேவைகளும் இவர்களாலேயே நடைபெறுகிறது.
12. இந்த ஆலயத்தின் பூஜை முறைகள் சிருங்கேரி மடத்தை அனுசரித்துள்ளது.
13. சுயம்புலிங்கத்தின் ரேகையின் விசேஷம் என்னவென்றால் இது நெற்றிக்கு இடுகின்ற கீற்று சந்தனம் போன்று இருப்பதும் லிங்கத்தின் உச்சியை வலப்புறம் பெரிதாகவும் இடப்புறம் சிறிதாகவும் பிரிக்கின்ற அழகே ஆகும்.
14. சிறிய உட்பிரகாரத்தைக் கொண்ட ஆலயமான தேவியின் திருச்சன்னத்தியில் அடுத்து வருகின்ற பக்தர்களும் தரிசிக்க ‘வேகமாக போங்கள்’என்று சொல்லும் போது சில பக்தர்களுக்கு தாங்கள் தொலைத்தூரத்தில் இருந்து வந்து மிக சொற்பமான நேரம் அம்மனை தரிசிக்கின்றோமே என்ற மனவருத்தம் அடைகின்றனர்.
15. அம்மனைத்தரிசிக்க வரு பவர்கள் இயன்ற வரை ஒரு நாளாவது முழுதாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.
16. பக்தர்கள் தங்கள் கோத்திரம், குடும்பத்தில் உள்ள அனைவருடைய நட்சத்திரம், பெயர்கள் ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து கொள்வது மற்ற ஆலயங்களில் இல்லாத ஒன்றாகும்.
17. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன.
18. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது.
19. மூகாம்பிகையை பூஜிக்க பிரம்மச்சாரிகள் அனுமதிக் கப்படுவதில்லை
20. அக்னி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.
21. இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான்.
22. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.
23. மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியை பாடுகிறார்கள்.
24. மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள்.
25. அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம்.
26. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.
27. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்.
28. மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஜம்’. நான்கு முறை இடம் பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்கு தரும் என்பதை குறிக்கிறது.
29. மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.
30. பூர்வ புண்ணியம் மேலோங் கப் பெற்றவர்கள் மற்றும் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கிய வர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
31. மூகாம்பிகை கருவறைக்குள் நுழையும் ஆண்கள் மேல் சட்டை அணிந்திருக்கக்கூடாது என்ற கேரள வழக்கம் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
32. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம், அன்று ஆதி சங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் கூட சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
33. அன்னைக்குப் போரில் உதவிபுரியப் படைக்கப்பட்ட வீரபத்திரர், இந்த சேத்திரத்திற்கு ரட்சாதிகாரியாக வழிபடப்படுகிறார்.
34. மூகாம்பிகா ஆலயத்தில் தினசரி மதியம் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் அன்னதானம் உண்டு.
35. சத்ருவை அழித்த அன்னையின் சக்தி இங்கு மிகுந்திருப்பதால், சத்ருக்களால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு ஏராளமானவர்கள் சண்டிஹோமம் செய்கிறார்கள்.
36. மூகாம்பிகை ஆலயத்தில் 2 விதமான பூஜைகள் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலிபீட பூஜை. மற்றொன்று விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையாகும்.
37. திருப்பதி, திருவண்ணாமலை தலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ள விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கொல்லூர் மூகாம்பிகைக்கும் நிறைய சேவை செய்துள்ளார். மூகாம்பிகைக்கு தங்கத்தால் முகக்கவசம் செய்து கொடுத்தது அவர்தான்.
38. கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில் 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.
39. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பக்தர்கள் 64 விதமான, வித்தியாசமான பூஜைகள், சேவைகளில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
40. தினமும் இத்தலத்தில் சண்டிஹோமம் நடத்தப் படுகிறது. கட்டணம் ரூ.8 ஆயிரம்.
41. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 7 முக்தி தலங்களில் கொல்லூர் மூகாம் பிகை ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.
42) மூகாம்பிகை ஆலயத்துக்கு, “அறிவுக்கோவில்” என்ற பெயரும் உண்டு.
43. ஆண்கள் கால்சட்டை, பெர்முடாஸ், தொப்பி, லுங்கி போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்லூர் ஆலயத்துக்கு வரும் ஆண்களில் 90 சதவீதம் பேர் வேட்டி அணிந்தே வருகிறார்கள்.
44. கர்ப்பமான பெண்கள் 7 மாதம் கடந்த பிறகு ஆலயத்துக்குள் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
45. குழந்தை பெற்ற பெண்கள் 11 நாட்கள் கழித்தே ஆலயத்துக்கு வரவேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.
46. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்து இருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
47. கர்நாடகா முன்னாள் முதல்&மந்திரி குண்டுராவ் கொடுத்த வெள்ளி வாளும் இங்கு உள்ளது.
48. ஆடி, அஷ்டமி திதியில் வரும் ரோகிணி நட்சத்திரத்தன்று உற்சவத்திருமேனியை சுக்கில தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று நீராடுவார்கள்.
49. முதன் முறையாக திருக் கோவிலுக்கு வருபவர்கள் தாம் தங்கிய இல்லத்தின் அர்ச்சகருடன் சவுபர்னிகா ஆற்றுக்குச் சென்று அவர் கூறும் மந்திரங்களை கூறி ஆற்றில் நீராட வேண்டும். இதற்கு “சங்கல்பஸ்நானம்” என்று பெயர்.
50. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்பு உருவம் சுவரில் பதிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
51. கொல்லூரில் கடைகள் மிகமிக குறைவாகவே உள்ளன. இதனால் எல்லாக் கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. மதிய நேரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பரிசு பொருட்களை அந்த நேரத்தில் சென்று வாங்கலாம்.
52. கொல்லூர் ஆலயத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலை நேரத்தில் வருவதால் காலை நேர வழிபாட்டுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். ஆனால் மதியம் 3 மணிக்கு நடை திறந்த பிறகு பக்தர்கள் வருகை மிகமிக குறைவாகவே இருக்கும். அப்போது 10 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிடலாம்.
53. கொல்லூரில் தினமும் பக்தர்கள் எடைக்கு எடை பல்வேறு பொருட்களை தூலாபாரம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் வாழைத்தார்கள் தான் தூலாபாரம் கொடுக்கப்படுகிறது.
54. கொல்லூரில் பக்தர்கள் அம்மனை வழிபட 3 வித வரிசைகள் உள்ளன. 1. இலவச தரிசன வரிசை, 2. ரூ. 100 கட்டண வரிசை, 3. ரூ. 500 கட்டண வரிசை. ரூ. 500 கட்டண வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் செல்லலாம். இரண்டே நிமிடத்தில் அம்மனை பார்த்துவிடலாம்.
55. பிரதான நுழைவு வாயிலில் இரண்டு பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. மூகாம்பிகைக்கு பூஜைகள் நடக்கும் போது அந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த சத்தம் பிரமாண்டமாக இருக்கிறது.
56. கொல்லூர் தலத்தில் பக்தர்களுக்கு மதியமும், இரவும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
57. கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் சார்பில் 9 கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு ஏழைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.
58. உறவினர்கள் யாராவது மரணம் அடைந்து இருந்தால் பக்தர்கள் 11 நாட்களுக்கு இந்த ஆலயத்துக்குள் நுழையக்கூடாது.
59. போட்டோ எடுக்க ஆலயத்துக்குள் தடை விதித்துள்ளனர். ஆனால் செல்போனில் பலரும் படம் மற்றும் செல்பி எடுத்தபடி தான் உள்ளனர்.
60. கொல்லூர் ஆலயம் சார்பில் மிகப்பெரிய கோசாலை உள்ளது. அங்கு சுமார் 150 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.