தட்சிண அகோபிலம்’ என்றழைக்கப்படும் கீழப்பாவூர் ஷேத்திரத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஸ்ரீநரசிம்மர் விசித்திர வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இங்கு தவம் புரிந்த காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷன் முனிவர் முதலானோருக்கு ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் ஸ்ரீநரசிம்மர் அவதார சொரூபத்தில் காட்சியளித்தார்.
பின்னர், ரிஷிகளுக்கு காட்சியளித்த இந்த இடத்திலேயே நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.
வேறெங்கும் காணமுடியாத இந்தச் சிறப்பை பிற்காலத்தில் ஞானிகள் மூலம் அறிந்த மன்னர்கள், கோயில் அமைத்து ஸ்ரீநரசிம்மரை வழிபடத் தொடங்கினர்.
தலபுராணரீதியாக கிருதயுகத்தைச் சேர்ந்த இவ்வாலயம், கல் திருப்பணிரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த ஆலயத்தில் மேற்கு பார்த்த தனி சந்நிதியில் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார்.
மிகச்சிறிய கருவறையில் சுமார் 2.5 அடி உயர கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் (சித்ரார்த்தம்) எழுந்தருளியுள்ளார். திரிபங்க நிலையில் இரணியனை மடியில் கிடத்தி வதம் புரியும் திருக்கோலத்தில் மகா உக்ரமூர்த்தியாக ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.
தலையில் கிரீடத்துடனும் தலைக்கு மேல் வெண்கொற்றக்குடையுடனும் கம்பீரமாக வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மரை சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் எழுந்தருளி வரும் இந்த ஸ்ரீநரசிம்மரை தரிசனம் செய்வோருக்கு, போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பஞ்சபூதங்களால் ஏற்படும் தோஷங்களும் விலகும்.