Breaking News :

Sunday, September 15
.

காசியை விட புண்ணியம் தரும் ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம்!


ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.

காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், ஸ்ரீவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை கங்கையை விடவும் புனிதமானது.

இந்தத் தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே கயிலாயத்தில் சிவகணமாக இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து, ஸ்ரீவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு, ‘வாழவந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

துவாபர யுகம் முடிந்து, கலி யுகம் தொடங்கியதும் சரஸ்வதி நதிக்கரையில் தவம் இருந்த ஸர்வா என்ற முனிவர் துடித்துப் போனார். ‘கலி யுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ’ என்ற கவலை அவரை வருத்தியது. அப்போது ஸ்ரீவாஞ்சியம் என்ற வார்த்தை அசரீரியாக அங்கு ஒலித்தது. இதையடுத்து முனிவர் ஸ்ரீவாஞ்சியம் கோயிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது.

இதனால் முனிவர், ‘சிவாய நம ஸ்ரீவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். பக்தனின் குரல் கேட்டு வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை ஸ்ரீவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். ஈசன் கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது, ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது.

காசியில் வழங்கப்படுவது போல் ஸ்ரீவாஞ்சியத்திலும் காசிக் கயிறு எனும் கருப்பு கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது.

அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் பைரவருக்கு இத்தலத்தில் இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.

ஸ்ரீவாஞ்சியத்தின் தல விருட்சமாக விளங்குவது சந்தன மரமாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபரத்துடன் கம்பீரமாகக் கோயில் காட்சியளிக்கிறது. இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கை கரை விநாயகரை வழிபட வேண்டும்.

பின்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜனை வழிபட்டு பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். அதன் பிறகுதான் மூலவர் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையும் மங்களாம்பிகையையும் தரிசனம் செய்து வணங்க வேண்டும்.

இங்குள்ள குப்தகங்கை தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது. இது தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களை ஏற்பதாக ஐதீகம். குப்த கங்கை தீர்த்தம் தனது ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு காட்சி தருகிறது என்றால் இந்தத் தீர்த்தத்தின் மகிமையை வார்த்தைகளினால் அளவிட முடியாது.

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.