Breaking News :

Wednesday, October 16
.

கந்த சஷ்டி கவசத்தின் வரலாறு?


முருகப்பெருமான் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம்தான். இதனைப் படித்தால் அனைத்துப் பேறுகளும் கிடைக்கும் வகையில் தேவராய சுவாமிகள் அருளியுள்ளார். தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாடிய விதத்தை இந்தப் பதிவில் காண்போம்.

பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு தேவராயர் ஒருசமயம் சென்றபோது மலையை சுற்றி கிரிவலம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மண்டபங்களில் பலரும் பலவிதமான நோய்களால் துன்புறுவதைக் கண்டு வருந்தியுள்ளார்.

அவர்கள் அனைவரும் நலமடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக்கொண்ட தேவராயர், முருகப்பெருமானை நினைத்து உள்ளம் உருக வேண்டியுள்ளார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பழநி முருகர், “உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என ஆசி வழங்கி மறைந்துள்ளார்.

பழநி ஆண்டவரைக் கண்ட தேவராயர் பரவசத்துடன், ‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’ என ஆடிப்பாடி மகிழ்ந்தார். முருகன் திருவருளை வியந்து போற்றி பாடல் ஒன்றை உடனடியாகப் பாடி வழங்கினார். அதுவே 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற மந்திரம் ஆகும்.

கந்த சஷ்டி கவசம் பாடப்பட்ட ஊர்:

 தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார். தற்போது அனைவராலும் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது எனவும், சென்னி மலையில் பாடப்பட்டது எனவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஆயினும், கந்த சஷ்டி கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநி மலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்ற பாடல் வரியை அடிப்படையாகக் கொண்டு இக்கவசம் பழநியில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தின் பலன்கள்: முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.

தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனதிலும், உடலிலும் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு உகந்த நாட்கள், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், ‘நடக்காது’ என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும்.

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் முறை: கந்த சஷ்டி கவசத்தை 36 முறை ஓத வேண்டும் என்றால் சுமார் 17,000 வரிகள், 70,000 வார்த்தைகள் ஒரு நாளைக்கு சொல்ல வேண்டும். இதை சொல்லி முடிக்க 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். இப்படி 36 முறை ஒரு நாளில்  கந்த சஷ்டிகவசத்தை பாராயணம் செய்தால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கூட முன்கூட்டியே உணர்ந்து அறியும் திறன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.