Breaking News :

Sunday, April 14
.

அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில், திருக்காரவாசல்


திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில்.

 

காலையில் வணங்கவேண்டிய காலை கால பைரவர், மதியம் வணங்க வேண்டிய உச்சிக்கால பைரவர், அர்த்த ஜாமத்தில் வணங்க வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி விசேஷமானது. சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். அதுவும் மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் உங்களைச் சேரும் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

 

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர்:

ஒரு சமயம் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்தபோது குருட்டுப் பெண்ணொருத்தி, பக்கத்தில் உள்ள 'வெள்ளையாறு' என்னுமிடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கும்பாபிஷேகத்தின் போது கூட்டத்தினர் எழுப்பிய குரலொலி கேட்டுத் தன்னால் பார்க்கமுடியவில்லையே என்று உருக்கமுடன் பிரார்த்திக்க, இறைவன் அப்பெண்ணுக்குக் கண்பார்வை தந்து, அப்பார்வையும் நம் பார்வையைப்போல் சதாரணமாக இல்லாமல் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமாறு ஒளிதந்து அருளும் புரிந்து, அவளும் பார்த்து மகிழுமாறு செய்தாராம். இதனால் இறைவனுக்குக் 'கண்ணாயிரநாதர்' என்று பெயர் வந்தது.

 

இத்தலத்தில் இறைவன் கபால முனிவருக்குக் காட்சி தந்தார் என்பதும் பதஞ்சலிக்கு ஏழுவகைத் தாண்டவங்களையும் காட்டினார் என்பதும் தொன்நம்பிக்கைகள். தாசி ஒருத்திக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி தந்தார். ஆதலின் இங்குப் பெருமானுக்கு 'காட்சி தந்த நாயனார்' என்றும் பெயராம். 1000 கண்கள் உடைய இத்தலத்து ஈசனை வணங்கினால் இதுபோல் 1000 பலன்கள் உண்டு என்பது நிதர்சனமான உண்மை!

பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமானின் பெயர் 'காறாயில் மகாதேவர்' என்று குறிக்கப்பெற்றுள்ளது.

 

சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கரிசலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அதையே கண் நோய்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வர கண் சம்மந்தமான நோய்கள் நீங்கும். சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் பாவங்களும், சாபங்களும் விலகும் என்பது நம்பிக்கை!

 

திருக்காரவாசல் கைலாசநாயகி:

 

கைலாசநாதர் என்ற பெயரில் சிவபெருமானை பல கோயில்களில் நீங்கள் தரிசனம் செய்திருப்பீர்கள். ஆனால் திருக்காரவாசலில் காட்சி தரும் தேவியின் பெயர் என்ன தெரியுமா? கைலாச நாயகி. ஆமாம். பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக கைலாயத்திலிருந்து இங்கே பறந்து வந்தவள் இந்த நாயகி. அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள தூணில், இறக்கைகளுடன் கைலாசநாயகி பூமியின் மேல் நிற்கும் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

இத்தலத்தில் கைலாசநாயகி, நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும் வகையில் சன்னதி அமைப்புகள் உள்ளன.அம்பாள் கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத் தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “ஞான தெட்சிணாமூர்த்தியாக” அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோயில் இதுதானோ என்று தோன்றுகிறது.

 

திருக்காரவாசல் ஆதிவிடங்கர் வரலாறு:

 

ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். “வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?” என இந்திரன் கேட்க,”தாங்கள் பூஜை செய்து வரும் விடங்க இலிங்கத்தைப் பரிசாகத் தாருங்கள்” என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த இலிங்கத்தை தர மனமில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப் போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைத் தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் “செங்கழுநீர் பூவின் வாசம் உடைய” உண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார்.

 

இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற இலிங்கங்களையும் முசுகுந்தனுக்குப் பரிசாக தந்து விடுகிறார். ஏழு இலிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன. அவை

 

திருவாரூரில் வீதி விடங்கர்,

திருநள்ளாறில் நகர விடங்கர்,

நாகப்பட்டினத்தில் சுந்தர விடங்கர்,

திருக்குவளையில் அவனி விடங்கர்,

திருவாய்மூரில் நீலவிடங்கர்,

வேதாரண்யத்தில் புவனி விடங்கர்,

திருக்காரவாசலில் ஆதி விடங்கர் என அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் சிவபெருமான் “குக்குட நடனம்” ஆடித் தரிசனம் தருகிறார். “விடங்கம்” என்றால் “சிற்பியின் உளி இல்லாமல்” என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்‘ தானே உருவான இயற்கை வடிவங்களை “சுயம்பு” அல்லது “விடங்கம்” என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 விடங்கங்கள், சப்தவிடங்கத் தலங்கள் எனப்படுகிறது.

 

திருக்காரவாசல் தியாகராஜர் சன்னதி:

 

கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தேவேந்திரனால் உருவாக்கப்பட்டவர் இந்த தியாகராஜர். இங்கு தியாகராஜசபை தரிசிக்கத்தக்கது. பெருமான் ஆதிவிடங்கர். சபை உயரத்தில் அழகான பிரபையுடன் காட்சி தருகிறது. ஆதிவிடங்கன் ஆசனம் - வீரசிங்காசனம், நடனம் - குக்குட நடனம்.

ஆதிவிடங்கர் ஆடும் திருநடனம் குக்குடநடனம் எனப்படுகின்றது. இது போருக்குச் செல்லும் கோழியானது இடமும் வலமும் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துப் பார்த்து முன்னேறியும் சற்று நிதானித்தும் சுழன்றும் தாக்குவது போல் ஆடும் நடனமாதலின் குக்குட நடனம் எனப்பட்டது. வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது.நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நடராஜர், தியாகராஜர் அபிஷேகங்கள் முறையாக நடைபெறுகின்றன.

திருக்காரவாசல் திருத்தலப் பதிகங்கள்

 

"தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே ஆய நல்லன்பர்க் கணியானே சேயானே சீர் திகழுந் திருக் காறாயில் மேயானே என்பவர்மேல் வினை மேவாவே" (சம்பந்தர்)

 

"செங்கமலை வாணியுறை காறாயில் ஆயிரங்கண் சிவன் செம்பாதி அங்கமதில் தங்கி உயிர் அத்தனையும் சுகானு பவமாரச் சந்தி கங்குல் பகல் எனும் மூன்று காலத்தும் பொதுச் சிறப்பிற் கடைக் கணித்து மங்களத்தைச் செய்தருளும் கைலாச நாயகியை வாழ்த்தி வாழ்வாம்." (தலபுராணம்)

 

"நாட்டுமொரு நூறாயிலன்பர் தமை நோக்கியருள் செய் திருக்காறாயில் மேலோர் கடைப்பிடியே." (அருட்பா).

 

இந்த தியாகராஜர் சன்னதியில் வெள்ளிப்பேழையில் மரகதலிங்கம் உள்ளது. நாடொறும் காலையில் இச்சந்நிதியில் அபிஷேகம் மரகதலிங்கத்திற்கு வழிபாடு நைடெபறும்போது மக்கள் பலரும் வந்து வழிபடுகிறார்கள். தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

திருக்காரவாசல் குடமுழுக்கு

 

திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசல் கண்ணாயிரநாதா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 2, 2024 அன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, ஜனவரி 29-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல் நாள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள், வெள்ளிக்கிழமை காலை ஆறாவது கால பூஜையுடன் நிறைவடைந்தது. தொடா்ந்து பூா்ணாஹூதி நடைபெற்றது.

பின்னா், சிவாச்சாரியா்கள் புனித நீா் கடங்களை, ஊா்வலமாக எடுத்து வந்து, கோயில் கோபுரங்களுக்கு கொண்டு சென்றனா். அங்கு, கோயில் விமானங்கள் மற்றும் கோபுரங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.பின்னா், சிவாச்சாரியா்கள் புனித நீா் கடங்களை, ஊா்வலமாக எடுத்து வந்து, கோயில் கோபுரங்களுக்கு கொண்டு சென்றனா். 

 

அமைவிடம்:

 

அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில், திருக்காரவாசல்- 610202, திருவாரூர் மாவட்டம்.

 

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில்.

website average bounce rate
.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.