Breaking News :

Sunday, April 20
.

ஐயப்பனின் பெயர்கள்?


ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.

இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... யாரைக் காண.. சுவாமியைக் காண... என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்!.. வாழ்வில் வளம் பெறுவோம்!
ஐயப்பனின் வேறு பெயர்கள்:

ஐயப்ப சுவாமிக்கு சரண கோஷமிட்டு சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.

18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்கள் என்னவென்றால்,

💫 மணிகண்டன்
💫 பூதநாதன்
💫 பூலோகநாதன்
💫 தர்மசாஸ்தா
💫 ஹரிஹரசுதன்
💫 ஹரிஹரன்
💫 கலியுகவரதன்
💫 கருணாசாகர்
💫 லக்ஷ்மண பிராணதத்தா
💫 பந்தளவாசன்
💫 பம்பாவாசன்
💫 ராஜசேகரன்
💫 எருமேலிவாசன்
💫 சபரி
💫 சபரீஷ்
💫 சபரீஷ்வரன்
💫 சபரி கிரீஷ்
💫 சாஸ்தா
💫 வீரமணி

இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும். கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரிநாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.