Breaking News :

Sunday, September 08
.

குருவாயூரப்பன் கோவிலில் குண்டுமணி வழிபாடு ஏன்?


கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் தரிசனம் செய்யும் போது குண்டுமணி வழிபாடு செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஒரு பெரிய உருளியில் குண்டு மணியை கொட்டி வைத்திருப்பார்கள். அதனை நாம் அள்ளி நமது வழிபாடுகளை சொல்லி வணங்கி விட்டு மீண்டும் அந்த குண்டுமணியை அதே உருளியில் போட்டு விட வேண்டும். இதன் பின்னணி என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி ஒருவர் இருந்தாராம். அவருக்கு குழந்தை கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாம். குழந்தை கண்ணனை தரிசிக்கும் போது அவருக்கு ஏதாவது காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தன் வீட்டிற்கு அருகில் உள்ள குண்டுமணி மரங்களிலிருந்து விழும் குண்டுமணிகளை எல்லாம் சேகரித்து வந்தாராம். அவரது நீண்ட நாள் சேகரிப்பின் காரணமாக பெருகிய குண்டுமணிகளை எல்லாம் நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு ஒரு நாள் கண்ணனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் கோவிலை நோக்கி புறப்பட்டாராம். அவரிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 41 நாட்கள் நடந்தே வந்து கோவில் சன்னதியை அடைந்தாராம்.

அந்த வயதான பெண்மணி கோவிலை அடைந்த நேரம் கோவிலெங்கும் ஒரே பரபரப்பாக காணப்பட்டதாம். அன்றைய தினத்தில்தான் அரசர் ஒருவர் கோவிலுக்கு காணிக்கையாக யானை ஒன்றை கொடுப்பதற்காக தன் பரிவாரங்களுடன் வருகை தந்திருந்தாராம். இந்த வயதான பெண்மணியோ மெதுவாக நடந்து சன்னதியை அடைய நினைத்தாராம். அவ்வாறு சன்னதியை நோக்கி நடக்கும் போது அந்த அரசரின் கீழ் இருந்த வேலையாட்கள் கோவிலில் இருந்த ஆட்களை ஒழுங்குபடுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு ஈடுபட்டிருந்தார்களாம். அவ்வாறு அவர்கள் ஒழுங்குபடுத்தும் பணியை  செய்யும் போது கூட்ட நெரிசலில் வேலையாட்களால் வயதான பெண்மணி கீழே தள்ளிவிடப்பட்டாராம்.

அப்பெண்மணி கீழே விழுந்ததில் அவர் சேகரித்து கொண்டு வந்திருந்த குண்டுமணிகள் எல்லாம் கீழே கொட்டி சிதறி விட்டதாம்.
குண்டுமணிகள் சிதறிய அதே நேரத்தில் அரசர் காணிக்கையாக கொடுக்க வந்த யானைக்கு மதம் பிடித்து விட்டதாம். மதம் கொண்ட யானை அங்குமிங்கும்  ஓடி கோவில் உடைமைகளை எல்லாம் நாசப்படுத்த தொடங்கியதாம். அரசனும் அவரது வேலையாட்களும் யானையை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லையாம். இறுதியாக அரசன் வந்து குருவாயூரப்பனிடமே சரணடைந்து காப்பாற்றுங்கள் என வேண்டிக் கொண்டாராம். அப்போது வானத்தில் அசிரீரியாக ஒரு குரல் கேட்டதாம். நீங்கள் அனைவரும் எனது பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் செய்த செயல்களால் எனக்கு காணிக்கையாக கொடுக்க  எனது பக்தை கொண்டு வந்த குண்டுமணிகள் எல்லாம் கீழே கொட்டி விட்டது என அசரீரி குரல் ஒலித்ததாம்.

தன் தவறை உணர்ந்த அரசனும், அவரது வேலையாட்களும் கீழே கொட்டி கிடந்த குண்டுமணியை எல்லாம் ஒவ்வொன்றாக சேகரித்து அந்த வயதான பெண்மணியிடம்  கொடுத்தார்களாம். அந்த வயதான பெண்மணி குண்டுமணிகளை எடுத்துச் சென்று குழந்தை கண்ணனின்  பாதத்தில் வைத்து  பூஜை செய்ய, ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த யானையின் மதம் அடங்கியதாம்.

இன்றும் கூட அந்த அரசரின் நினைவாக குருவாயூரப்பன் கோவிலில் யானைகள் தானமாக வழங்குவது வழக்கம். அதேபோல அந்த வயதான மூதாட்டியின் நினைவாக பெரிய உருளியில் குண்டுமணிகளை கொட்டி வைத்து குண்டுமணி வழிபாடு செய்வதும் வழக்கம். அவ்வாறு குண்டுமணி வழிபாடு செய்யும்போது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கண்ணனே குழந்தையாக வருவார் என்பதும், தங்களது நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும் என்பதும் பக்தர்களின் நீண்ட நாள் நம்பிக்கை. நாம் இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் போது நாம் என்ன பொருட்களை செலுத்துகிறோம் என்பது முக்கியமல்ல, நாம் செலுத்தும் காணிக்கையை எவ்வளவு உள்ளன்போடு நாம் செலுத்துகிறோம் என்பதை பொறுத்தே இறைவன் அகம் மகிழ்கிறார்.

உருளியில் உள்ள குண்டுமணிகளை கையில் அள்ளி நம் மனதில் உள்ள வேண்டுதலை மனம் உருக வேண்டிவிட்டு திரும்பும் போது குருவாயூரப்பன் அருளால் நினைத்தது நிறைவேறும்! மேலும் இக்கோவிலில் முதன்முதலாக குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வும் பிரசித்தி பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல கோவிலில் வழிபடும் போது கை நீட்டமாக ஒரு ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு கைநீட்டம் வழங்கப்படுவதன் மூலமாக வருடம் முழுவதும் செல்வம்  பெருகும்  என்பதும்  ஐதீகம்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.