Breaking News :

Sunday, September 08
.

எட்டு கணபதி மூர்த்திகள்...!


மனிதன் வாழ்க்கையின் எட்டு நிலைகளைக் குறிக்கும் எட்டு கணபதி மூர்த்திகளின் சக்திகளை ஒரு சேரப் பெற்ற ஸ்ரீவரத கணபதி மூர்த்தியை வழிபட்டு எந்நிலையிலும் மாறாத லட்சுமி கடாட்ச சக்திகளை கைக்கொள்ள உதவுவது இத்திருத்தலத்தின் மற்றோர் சிறப்பம்சமாகும்.

ஸ்ரீவரத கணபதி

தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தி. குறிப்பாக 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி.  இவர் அளிக்கும் செல்வம் நிரந்தரம் பெறும். எடுத்த காரியத்தை நடத்தும் மூர்த்தி இவரே.

பல்லாலேஸ்வர கணபதி

வாழ்க்கையில் உள்ள மேடு பள்ளங்களை அறிந்து வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற அருள்புரியும் கணபதி மூர்த்தி. சகட யோக ஜாதகக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே.

மகா கணபதி

இளமை இருக்கும் வரை மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சுவது கிடையாது,. ஆனால், ஒரு சிறு நோய் நொடியில் விழுந்து விட்டால் கூட மரண பயத்தால் மிரண்டு விடுபவர்களே பெரும்பான்மையினர். இறுதிக் கால வாழ்வு மரண பயத்தால் நசித்து விடாமல் இருக்க அருள்புரியும் மூர்த்தி இவரே.
மயூரேஸ்வர கணபதி.

கார், பஸ் போன்ற வாகனங்கள் தயாரிப்பவர்களும், உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் வணங்க வேண்டிய மூர்த்தி. அடிக்கடி விமானப் பயணங்கள் மேற்கொள்வோர் வழிபட வேண்டிய அனுகிரக மூர்த்தி இவரே.

சித்தி விநாயகர்

கன்னிப் பெண்கள் வணங்க வேண்டிய மூர்த்தி. தங்களுக்கு வரப் போகும் கணவன்மார்கள் பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும் என்று கன்னிப் பெண்கள் நினைப்பது இயற்கையே. ஆனால், பணம் படைத்தவனை விட நல்ல மனம் படைத்தவனே மேல் என்று உத்தம வழிகாட்டும் மூர்த்தி இவரே.

சிந்தாமணி விநாயகர்

தங்களையும் அறியாமல் பலரும் நான்காம் பிறையை தரிசனம் செய்து விடுவதுண்டு. நான்காம் பிறையைப் பார்த்தால் வீண் பழி நேரும் என்று கிருஷ்ண பரமாத்மாவே தன்னுடைய அனுபவத்தால் நமக்குப் பாடம் புகட்டி உள்ளார். இவ்வாறு தவறிப் போய் நான்காம் பிறையை தரிசனம் செய்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே சிந்தாமணி விநாயகர்.

மூன்றாம் பிறை அன்றுதான் சிந்தாமணி விநாயகர் அற்புதமான சிந்தாமணி என்ற ஆபரணத்தை தரித்தார். அதனால் பக்தர்கள் இவரை வணங்குவதால் மூன்றாம் பிறையை தரிசனம் பெற்ற பலன் கிட்டும். உலகிலுள்ள அனைத்து நவரத்தினங்களின் சக்தியை ஈர்க்கும் வல்லமை உடையதே விநாயகர் தரித்துள்ள சிந்தாமணி ஆகும். எனவே, சிந்தாமணி விநாயகரைப் பிரார்த்னை செய்து நவரத்தினங்களை அணிவதால் லட்சுமி கடாட்ச சக்திகள் ஸ்திரம் பெறும். நவரத்தினம் தன் சக்திக் கிரணங்களை விரயம் செய்யாது.

கிரிஜாத்மஜ கணபதி

குன்றிருக்கும் இடமெல்லாம் கணபதி குடியிருக்கும் இடம் என்ற சிறப்பைக் கொண்டவரே கிரிஜாத்மஜ கணபதி. மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுக்காத உயர் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் வணங்க வேண்டிய மூர்த்தி இவரே. தாயை குருவாக மதிப்பவர்களுக்கும், தாய் சொல்லைத் தட்டாத தனயன்களுக்கும் அருள்புரியும் மூர்த்தி.

விக்நேஸ்வர கணபதி மூர்த்தி

நற்காரியங்களில் ஏற்படும் இடர்களைக் களைந்து இறுதி வெற்றியைத் தரும் மூர்த்தி. அரிஷ்ட யோகங்களிலிருந்து மீள அருள்புரியும் அண்ணல்.

மேற்கூறிய எட்டு கணபதி மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை ஒருங்கே நல்கும் ஸ்ரீவரத கணபதி மூர்த்தியைப் போல 32 கணபதி மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை ஒன்று திரட்டி வழங்கும் மூர்த்திகளும் உண்டு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.