Breaking News :

Saturday, March 02
.

இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில்  சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது.
விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசூரை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை சென்றும் திருவெண்ணெய்நல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தலத்தில் முருகர், ஷண்முக சுப்பிரமணியர் என்று பெயருடன் தன் தேவியர் இருவருடன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார்.

உள்சுற்றில் பெரிய மருத மரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் திருமணத்தடை நீக்கும் தலம் என்ற சிறப்பைப் பெற்றவையாகும். அத்தகைய அமைப்பு அமைந்துள்ள இத்தலத்தில், நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்துச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால், இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்துகொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15, 16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

கயிலையில், உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை சிவபெருமான் உபதேசிக்கும்போது, அதை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டார். இதையறிந்த சிவன், முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர், ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து, பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப்பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து மருதீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அநேக திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.