Breaking News :

Wednesday, October 16
.

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை


திருச்சாத்தமங்கை  தற்போது சீயாத்தமங்கை என்று வழங்குகிறது.

இறைவன் பெயர் அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர்

இறைவி பெயர் மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி

பதிகம் திருஞானசம்பந்தர் - 1

எப்படிப் போவது நன்னிலம் - திருப்புகலூர், திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகல் தாண்டியவுடன் நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் "கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருப்புகலூரில் இருந்து சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ளது.

நாகப்பட்டினம் - நாகூர் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்தும் ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கி.மீ.

தொலைவில் இத்தலம் உள்ளது. ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு "அயவந்தி" என்றும் பெயர். திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.

ஆலய முகவரி அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
சீயாத்தமங்கை
சீயாத்தமங்கை அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609702

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்தமங்கை…

நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கை…

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்தமங்கை…

குளிர்ச்சி பொந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சாத்தமங்கை…

திருநீலநக்க நாயனார் போற்றி வழிபடும் அயவந்தி என்னும் திருக்கோயில்…
திருநீலநக்கருடைய பிறந்த ஊர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை…

என்று, சம்பந்தர் தனது பதிகத்தில் இந்த ஊரைப் பலவாறாகச் சிறப்பித்துள்ளார்.

கோவில் அமைப்பு : இத்தலம் இக்காலம் சீயாத்தமங்கை என்று வழங்கப் பெறுகின்றது. ஊரின் பெயர் சாத்தமங்கை. இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய இவ்வாலயம் சுவாமி அம்பாள் சந்நிதிகள் இரண்டிற்கும் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.

கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் திர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஒரு பகுதி சந்திர தீர்த்தம் என்றும், மற்றொரு பகுதி சூரிய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தீர்த்தக் குளத்தின் கரையில் சித்திவிநாயகர் சந்நிதியைக் காணலாம். சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது.

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான மூற்றவெளி உள்ளது. வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில் உள்ள சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்திலுள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியே விநாயகர், லிங்கத் திருமேனிகள் உள்ளன.

உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபையில் அம்பலக்கூத்தர் அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார். சனீசுவரன், காகத்தின் மேல் ஒரு காலை ஊன்றியவாறு நின்ற கோலத்தில் உள்ளார்.

மூலவர் கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிற்பக் கலைத்திறனுடன் அமைந்துள்ளது. கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் ஆகிய இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கெளரி லீலை உருவத் திருமேனி பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

வெளி மண்டபத் தூண் ஒன்றிலுள்ள ஆஞ்சனேயர் வாலில் மணியுடன் காணப்படுகிறார். அருகிலுள்ள மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் காணத்தக்கது.

அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படிகளேறிச் சென்றால் கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் திருசாத்தமங்கை. சிவத்தொண்டாற்றிய திருநீலநக்க நாயனார், அவரது மனைவியின் உருவச்சிலைகள் மகா மண்டபத்தில் உள்ளன. திருநீலநக்கர் தன் மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் வழிபடுவது வழக்கம். திருநீலநக்கர் ஒருமுறை மனைவியோடு திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்திப் பூச்சியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றிட, மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர் கடுஞ்சினங் கொண்டார்.

அதனை தகாத செயலாகக் கருதி, மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கனவில் இறைவன் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர இதர பகுதிகள் முழுதும் லிங்கத் திருமேனியில் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். விடிந்தும் ஆலயத்துக்கு ஓடிவந்த நீலநக்கர் இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கிய அதேநேரம் மனைவிக்காக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார்.

மங்கையர்க்கரசியாரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.
திருநள்ளாறு தலத்தில் இறைவனை வணங்கிய பிறகு திருஞானசம்பந்தர் திருசாத்தமங்கை எழுந்தருளினார். திருநீலநக்க நாயனார் நகரை அலங்கரித்து சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார். பின்னர் இருவரும் அயவந்தி ஆலயத்தை அடைந்து இறைவனை வழிபட்டு நீலநக்கர் இல்லம் திரும்பி திருவமுதுண்டு தங்கினர். மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்ற சம்பந்தர் பதிகம் பாடினார். பதிகத்தின் 2 -வது மற்றும் 11வது திருக்கடைக் காப்பிலும் திருநீலதக்க நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை, நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கை, மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை, குளிர்ச்சி பெருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கை, திருநீலநக்க நாயனார் போற்றி வழிபடும் அயவந்தி என்னும் திருக்கோயில், திருநீலநக்கருடைய பிறந்த ஊர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்று பலவாறாக இத்தலத்தைச் சிறப்பித்து தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதிகளையும் மனமொத்த தம்பதிகளாக மகிழ்ச்சியாக சேர்ந்து வாழவைக்கும் தலம் திருச்சாத்தமங்கை. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த திருநீலநக்க நாயனாரையும் மனைவி மங்கையர்க்கரசியையும் இத்தல இறைவன் சேர்த்துவைத்து அருள்புரிந்தது இத் தலத்தில்தான். காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் இது 81-வது தலம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.