Breaking News :

Monday, September 16
.

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி


காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – அதிதீஸ்வரர்
அம்மன் – பெரியநாயகி, பிரகன் நாயகி
தல விருட்சம் – அகண்ட வில்வமரம்
தீர்த்தம் – சிவதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – வாணியம்மைபாடி
ஊர் – வாணியம்பாடி
மாவட்டம் – வேலூர்
மாநிலம் – தமிழ்நாடு

பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள்” எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார்.

வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர்.

எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள்.
(கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் “வாணியம்பாடி” ஆனது.

மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். இராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் எனப் புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு.

வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு இராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு இராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.

திருவிழா:
சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.

கோரிக்கைகள்:
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:
பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்,
வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி)
வேலூர் மாவட்டம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.