Breaking News :

Friday, October 04
.

அருள்மிகு தாணுமாலயன் கோவில், சுசீந்திரம்


சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இடம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயஸ்வாமி ஆலயம்” தான்.

ஸ்தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள ஸ்தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.

அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.

பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கெளதம முனியின்  சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.

“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று. ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமாளை வணங்கிச் செல்லுவதாகக் கதை.
கன்னியாகுமரி அம்பிகை ஸ்தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர்.

பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர்.

முன்பே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என ப்ரம்ம தேவர் சாபமிட்டிருந்தார்.

ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார்.

திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்பிகை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.

கோயிலின் பரப்பளவு – 5,400 சதுர அடி
அரச கோபுரத்தின் உயரம் – 134.5 அடி

அங்குள்ள கல்வெட்டு ஒன்றினால், இவ்வாலயம் 1881-ல் திருப்பணிகள் துடங்கி 1888-ல் குடமுழுக்கு நடந்ததாக அறிகிறோம். இவ்வாலயம் பாண்டியர் காலக் கலை, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை “விக்னேஸ்வரி” என அழைக்கிறார்கள்.

இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர். இவைகள் வேறெங்கும் காணமுடியாத காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள ஹனுமனின் சிற்பமும் உள்ளது. இந்த ஹனுமன், கேட்போருக்குக் கேட்டதைக் கேட்டபடி தருபவர்.

நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு லிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.
கலைநயம் கூறும் சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.

இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.

பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.

சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, ஸ்ரீராமபிரானின் கருவறைக்கு எதிரில் ஹனுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம். 1929-ல் இப்பொழுது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள லிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார்.
லிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம்.

பண்டிகை திருநாள்
அறம் வளர்த்த அம்மனுக்கும் தாணுமாலயப் பெருமானுக்கும் மாசி மாதம் திருக்கல்யாணம் நடக்கும் – 9 நாள்.

சித்திரை தெப்பத்திருவிழா – 1 நாள்
ஆவணி பெருநாள் திருவிழா – 9 நாள்
மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்

நடை திறக்கும் நேரம்
காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.