Breaking News :

Friday, October 04
.

கேட்ட வரம் தரும் அகோரமூர்த்தி கோயில்


சிவபெருமானுக்கு ஈசானம், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன.

இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி.இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன்,சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.அவனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார்.

அப்போது அந்த அசுரன்,சிவபெருமானின் சூலாயுதத்தை கேட்டான்.அதைக் கேட்டதும் சிவபெருமான்,கொஞ்சம் கூட தாமதிக்கமல் உடனடியாக அந்த சூலாயுதத்தை அசுரனிடம் தந்து அருளுகிறார்.

சூலாயுதத்தை பெற்ற அசுரன் தேவர்களையும்,பொது மக்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.

அசுரனுடைய துன்பத்தை பொறுக்க முடியாத தேவர்கள்,சிவபெருமானிடம் முறையிடுகின்றனர்.இதனையடுத்து சிவபெருமான்,நந்திதேவரை அழைத்து இது சம்பந்தமாக விசாரித்து வருமாறு அனுப்பினார்.

அசுரனிடம் சென்ற நந்தி தேவர்,தேவர்களையும் பொது மக்களையும் துன்புறுத்துவது குறித்து கேட்டார்.அதற்கு அந்த அசுரன் கோபம் கொண்டு தனது சூலாயுதத்தால் நந்திதேவரின் ஒரு பக்க கொம்பை முறித்ததுடன்,உடலில் பல்வேறு இடங்களிலும் குத்தி காயப்படுத்தினான்.அந்த காயத்தோடு சிவபெருமானிடம் நந்திதேவர் சென்றார்.

ரத்தத்தோடு தன் முன் நின்ற நந்திதேவரை பார்த்த சிவபெருமான் சினம் கொண்டு தனது ஐந்தாவது முகத்தில் இருந்து தீப் பிழம்பாக வெடித்து அகோர மூர்த்தியாக தோன்றுகிறார்.

சிவபெருமானுடைய கோபத்தைக் கண்ட அசுரன்,ஈசனிடம் சரணாகதி அடைகிறான்.சினம் குறைந்த அகோரமூர்த்தி,அசுரனை மன்னித்து அருளுகிறார்.

அப்போது அசுரன் அவரிடம்,தங்களை வந்து வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
இதனை ஏற்ற அவர்,அழகிய முகம் கொண்ட அகோரமூர்த்தி சுவாமியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.

அவருடைய திருவுருவத்தில் கபாலம்,மண்டை ஓடு மாலை, ஈட்டி, எண்ணிலடங்கா விஷ ஜந்துக்கள் உள்ளன.அதோடு இங்கே அஷ்ட(எட்டு) பைரவர்கள் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.இவர்களை வணங்கினால் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்பது நம்பிக்கை யாகும்.

இந்தக் கோவிலில் அசுரனால் குத்துப்பட்ட நந்திதேவர்,சுவேதாரண்யேஸ்வரர் சன்னிதி முன்பு எழுந்தருளியிருக்கிறார்.மிகவும் விசேஷ சக்தி கொண்ட இவரை பிரதோஷ தினங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என சுவேதாரண்யேஸ்வரர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுரனால் குத்துப்பட்ட நந்திக்கு,சிவபெருமான் அனுக்கிரகம் செய்ததால்,அகோரமூர்த்தி சன்னிதியில் காயம் இல்லாத நந்தி பகவான் அவரது காலடியில் இருப்பதை காணலாம்.

அதே போல் அசுரனும் சரணாகதி ஆகி காலடியில் இருப்பதையும் காணலாம்.அகோர மூர்த்தி சுவாமி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இரவு தோன்றியதால்,ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஐந்தாம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம்.

மேலும் சிவனுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
 
அமைவிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்காட்டில் இக்கோவில் அமைந்துள்ளது.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.