குருவாயூரப்பனை வணங்குவது ஏன்?
பதினெண் புராணங்களில் ஒன்றான ஶ்ரீநாரத புராணத்தில். "குருபவனபூர மகாத்மியம்" என்ற பகுதியில் ஶ்ரீகுருவாயூரப்பனின் திருக்கோயில் தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஆதியில் பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்தபோது அது, சரியில்லாமல் அமைந்ததாம். எனவே அவர் இறைவனைத் துதிக்க, #ஶ்ரீமந்_நாராயணர், தனது ஆத்ம வடிவான ஶ்ரீமந் நாராயணரின் விக்ரகத்தைப் பிரம்மாவிற்குக் கொடுத்தாராம். பிரம்மாவும் அதைப் பூசித்துத் தனது படைப்புத் தொழிலைச் செவ்வனே செய்தாராம்.
பின்னர் நவப்பிரஜாதிபதிகளில் ஒருவரான #சுதபஸ் என்பவர் புத்திரப்பேறில்லாததால், தன் மனைவி பிருஸ்னி என்பவளோடு பிரம்மாவை நோக்கித் தவமிருந்தனராம். அவர்களது தவத்தில் மனமகிழ்ந்தப் பிரம்மாவும், தான் வழிபட்டு வந்த குழந்தை உருவில் அமைந்த ஶ்ரீமந் நாராயணரின் விக்ரகத்தைக் கொடுத்து, 'இதை வழிபட்டு வந்தால் உங்களுக்குப் புத்திரப்பேறு கிட்டும்' எனக்கூறி மறைந்தார்.
அவ்விதமே அவர்கள் பூஜைகளைச் செய்துவர, அவர்களுக்கு மகாவிஷ்ணுவே "பிருஸ்னி கர்ப்பன்" என்ற பெயரில் அவதரித்தார். பின்னர் அத்தம்பதியரே மறுபிறவியில், *காசிபர்_ *அதிதியாகப் பிறந்தனர். இப்பிறவியிலும் அதே விக்ரகத்தை அவர்கள் பூஜை செய்துவர, அவர்களுக்கு வாமனராகத் திருமாலே அவதரித்தார்.
துவாபர யுகத்தில் அத்தம்பதியரே, *வசுதேவர்__ *தேவகியாகப் பிறந்து மகாவிஷ்ணுவே, தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்! என அவ்விக்ரகத்தைப் பூசித்து வந்தனர். அவர்களுக்குத் திருமால் எட்டாவது மகனாகக் கிருஷ்ணராகக் கம்சனின் சிறையில் அவதரித்தார். இவ்வாறு மூன்று யுகங்களிலும் மகாவிஷ்ணுவின் விக்ரகம் வழிபடப்பட்டு வந்தது. பின்னர் ஶ்ரீகண்ணபிரானும் அவ்விக்ரகத்தைப் பூசித்து வந்தார். பின்னர் தனது பரமபக்தரான உத்தவருக்கு அதை அளித்தார்.
ஶ்ரீகிருஷ்ணபகவான், தனது அவதாரத்தை முடித்துவிட்டு வைகுண்டத்திற்குச் செல்லும் முன்னர், 'உத்தவரே! இன்றிலிருந்து ஏழாவது நாள் *பெரும் பிரளயம். ஏற்பட்டு துவாரகை கடலில் மூழ்கும்! என்றார். இனி கலியுகம் பிறக்கவிருப்பதால். மக்கள் அதன் துன்பங்களை அனுபவிப்பர்; எங்கும் அதர்மமே மேலோங்கும்; பொய்மையே எங்கும் மேலோங்கும்; நல்லோர்கள் பாதிக்கப்படுவர்; அரக்கர்கள் கலியுகத்தில் இருக்கமாட்டார்கள்!என்றாலும்; அவர்களது உருவான கலியானது மனிதர்களின் உள்ளத்தில் புகுந்து, அவர்களை நேர்மையற்றவர்களாக, இறைநம்பிக்கை அற்றவர்களாகச் செய்யும்.
உத்தவரே! மக்களை அக்கலியுகத்தின் கொடுமைகளிலிருந்துக் காக்க, கடலில் மூழ்விடும் இந்த விக்ரகத்தை குருவான வியாழ பகவானும், வாயுவும் கண்டெடுத்து, பூலோகத்தில் தகுந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்; கருடன் வட்டமிட்டு, அவருக்கு வழிகாட்டும்! என்றார் ஶ்ரீகிருஷ்ணர்.
#ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா கூறியவாறே அவர் வைகுண்டம் சென்ற பின்னர், துவாரகை பெரும் ஆழிப்பேரலையால் சமுத்திரத்தில் மூழ்கியது.
ஶ்ரீமந் நாராயணரின் விக்ரகமோ, அலைகளின் சீற்றத்தால் அலைப்புண்டது. இதைக்கண்ட குருபகவானும், ( வியாழன், பிரகஸ்பதி) வாயுபகவானும் இணைந்து , வாயுவின் சக்தியால் அலைகளை விலக்கி, விக்ரகத்தை மீட்டனர். பின்னர் பகவானின் விருப்பப்படி, விக்ரகத்தைப் பிரதிஷ்டைச் செய்ய பூமியெங்கும் தகுந்த இடத்தைத் தேடியலைந்தார்.
பரசுராமர் உருவாக்கிய கேரள மண்ணிற்கு வந்த குருபகவானும், வாயுவும், அவ்விடத்தின் இயற்கை அழகையும், செழிப்பையும், அமைதியையும் கண்டு அங்கேயே பிரதிஷ்டை செய்ய நினைத்தார். பகவானின் திருவுள்ளப்படியே கருடபகவானும் வட்டமிட்டு , வழிகாட்ட , ஶ்ரீமந் நாராயணரின் விக்ரகத்தைக் குருவும், வாயுவும் இணைந்து பிரதிஷ்டைச் செய்தனர்.
இவ்வாறு #குருவும்__வாயுவும் இணைந்து பிரதிஷ்டைச் செய்ததால் அவ்விடம் #குருவாயூர் எனப்பட்டது; இறைவன் #குருவாயூரப்பன் எனப்பட்டார். அவ்விக்ரகம் குழந்தை உருவில் இருந்ததால் காலப்போக்கில் மக்கள் அதைக் கிருஷ்ணரின் விக்ரகம் என்றே நினைத்தனர். கலியுகத்தின் கொடுமைகள் தீர, நல்லன யாவும் நடக்கக் குருவாயூரப்பனை வழிபடுதல் மிகுந்தப் பலனைத் தரும்.
பரமாத்மாவிடம் சரணாகதி
தமிழர்களின் முல்லை நிலத்தின் இறைவனே! காக்கும் கடவுளே! மாயோனே! கலியுகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் கொடிய நோய்களிலிருந்து மக்களைக் காத்திடுவாய் பரந்தாமனே. உனது பக்தர்களுக்குக் கொடிய தொற்று நோய்கள் ஏற்படாமல் காத்தருளுவது உன் கடனன்றோ பரந்தாமா. நெடுமாலே! பாற்டல் வாசா! அருள்புரிவாய் கண்ணா! மணிவண்ணா! கிருஷ்ணா! கோபாலா! காத்தருள்வாய் கேசவா. உன் பக்தர்களை கொடிய நோய்கள் தாக்காமல் காத்தருள வேண்டும் பரம்பொருளே. உனையன்றி வேறு யாரிடம் நாங்கள் சரண் புகுவோம் பரந்தாமா? உன் பக்தர்களைக் காப்பது உன் கடன் பரம்பொருளே.
இம்மைக்கும், மறுமைக்கும் உன் பாத கமலங்களே காப்பு பரம்பொருளே குருவாயூரப்பனே. திருமாலுக்கு உகந்தப் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீகுருவாயூரப்பனை மனதார சரணடைவோம்.
ஶ்ரீகுருவாயூரப்பா_சரணம்.
__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.