திருப்பழனம் ‘ஆபத்சகாயேஸ்வரர்’!
ஆராவமுதனான நாராயணன், பாற்கடல் ஈந்த அமிர்தத்தை அள்ளி எடுத்து சகல தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் ஈந்தார்.
கௌசிக மகரிஷி, மாந்தர்களுக்கும் உதவுமே என தாம் பெற்ற அமிர்தத்தை கைமேற்கனியாகப் பெற்று பூவுலகுக்கு நகர்ந்தார்.
அசுரர்கள், அவரிடமிருந்த அமிர்தத்தை பறிப்பாரோ என்றெண்ணிய ஈசன், ஐயனாரையும், மாகாளியையும் துணைக்கு உடன் அனுப்பினார்.
அமிர்தம் ஏந்தி வந்த மகரிஷி, சிருங்காரமாக ஒளிரும் கதலிவனம் என்ற அந்த பூலோகத் தலத்தில் தம் திருவடி பதித்தார்.
மக்கள் கூடி நின்று வணங்கி வரவேற்றனர். மாமுனிவர் குடில் அமைத்தவுடன் அகமகிழ்ந்து தொண்டு புரிந்தனர். சதாகாலமும் சதாசிவனை நினைத்தவர் ஓரிடத்தில் மகாதேவனை இருத்த பேருவகை கொண்டார்.
ஈசனின் லிங்கத் திருமேனிக்குள் அமிர்தத்தை அரூபமாக அடக்கி, அருகே வருவோரை ஆற்றுப்படுத்த பெருங்கருணை கொண்டார்.
அமிர்தத் திரட்சியை ஒன்றாக்கி வில்வ தளங்களால் அர்ச்சிக்க, வில்வத்தின் வாசம் மகேசனை ஈர்த்தது. முக்கண் நாயகனான ஈசன் மூவிலைகளுக்குள் அருவமாகப் பரவினார்.
சட்டென்று புறத்திலும் நெடும் பனையாக வளர்ந்தார். கதலிவனத்தை கயிலைநாதன் பேரன்பால் மூழ்கடித்தார்.
கௌசிக முனிவர் அகத்தில் கண்ட அரனை புறத்தில் பார்த்து தன் வயம் இழந்தார். ஈசனோடு ஈசனாகக் கலந்து களிப்புற்றுத் திளைத்தார்.
சுசரிதன் எனும் பாலகன் கௌதம நதி தீரத்தில் அமர்ந்து வேதகானம் செய்தான். கானத்தில் லயித்தவனின் வாழ்வில் வேதநாயகனான மகேசன் விளையாடல் புரியத் தொடங்கினார்.
பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பான பந்தத்தில் கட்டுண்டு இருந்தவனை பிறவிக் கட்டிலிருந்து அறுத்தெறிந்து தம்மோடு இணைத்துக் கொள்ள இசைந்தார். பெற்றோர்கள் அடுத்தடுத்து சிவலோகப் பிராப்தியுற்றனர்.
தம் மகனின் பக்தி வலிமை தந்தையையும், தாயையும் உன்னத இடத்தில் அமர்த்தியது. ஆளில்லா அடர்ந்த கானகத்தில் தனியே விடப் பட்டவனுக்கு அனாத ரட்சகனாக இருந்தார், ஈசன். அகமும், புறமும் எந்தப்பற்றும் இல்லாது பற்றற்றவனாய் திரிந்தான் சுசரிதன்.
ஈசன் இன்னும் ஒரு படி மேலேறி மெல்லிய நூலாக இருந்த உயிர்பற்றையும் அறுத்தெறிய அவா கொண்டார். சுசரிதன், கதலிவனமான பழங்கள் மண்டிக் கிடக்கும், கௌசிக மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புண்ணியத் தலமான திருப்பழனம் வந்தடைந்தான்.
அந்தி நெருங்கி இருள் கவ்வும் நேரம் அது. வழிக் களைப்பால் கண்கள் சொருக கோயிலின் வாயிலில் தன்னை மறந்து உறங்கினான். அவன் கனவில் பெரிய எருமையும் கருத்த உருவோடு எமதர்மன் பாய்ந்தோடி வந்தான்.
‘இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்’ என்று கூறி பேரிரைச்சலோடு நகர்ந்தான். சுசரிதன் விதிர்த்தெழுந்தான். உடல் நடுக்கமுற்றிருந்தது.
‘மரணம் தன்னைக் கவ்வுமோ, எண்ணற்ற பிறவிகள் எடுக்க வேண்டி வருமோ... இத்தனை நாள் பக்தியை எமன் சுருக்கிட்டு எடுத்துக் கொள்வானோ... பழனப்பிரானே’ என்று தனியாக அமர்ந்து கதறினான்.
சட்டென ஒரு அசரீரி ஒலித்தது. ‘திருவையாறை அடைந்து ஐயாறப்பனை சரணுற, உயிர் பிழைத்துக் கொள்வாய்’ என்றார் ஈசன்.
சுசரிதன் கண்களில் நீர் பொங்க ஆனந்தமாக திருவையாறு அடைந்தான். காலசம்ஹார மூர்த்தியாக கிளர்ந்தெழுந்த பரமன் எமனை தம் காலால் அழுத்தியிருக்கும் கோலம் கண்டு நெக்குருகினான். ஈசன் அவனுக்கு ஞானம் அளித்து ஆட்கொண்டார்.
எமன் நெருங்க முடியாத மிக உயர்ந்த நிலையை அளித்தார். அந்த ஆட்கொண்டேஸ்வரர் இன்றும் திருவையாறில் சந்நதி கொண்டிருக்கிறார். பழனப்பிரான், மரண பயம் அறுத்து சகாயம் செய்ததால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமம் சூடினார்.
தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ. தொலைவில் திருப்பழனம் உள்ளது...