ஆடி மாதம் மகாலட்சுமி தாயாரை நெல்லிக்கனி பூஜை செய்தால்?

aadi-month-mahalakshmi-poojai
ஆடி மாதம் மகாலட்சுமி தாயாரை நெல்லிக்கனி பூஜை செய்தால்?

ஆடி மாதம் மகாலட்சுமி தாயாரை நெல்லிக்கனி வைத்து இப்படி பூஜை செய்தால் எவ்வளவு பணப்பிரச்சனையில் இருந்தாலும் மீண்டு செல்வ செழிப்புடன் வாழலாம்.

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக திகழ்வது பணம். பணம் இருந்தால் எந்த பொருட்களை வேண்டுமானாலும் நம்மால் வாங்க முடியும். எப்படி வேண்டுமானாலும் நம்மால் வாழ முடியும். அப்படிப்பட்ட பணவரவை அதிகரிப்பதற்கு மகாலட்சுமி தாயார் தான் நமக்கு துணை புரிவார். மகாலட்சுமி தாயாரை ஆடி மாதத்தில் வரக்கூடிய ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமாவது வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமி பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கனகதாரா மஹாலக்ஷ்மி பூஜை

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். எப்பேர்பட்ட ஏழ்மையான சூழ்நிலையில் இருந்தாலும் முழு மனதுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் அந்த ஏழ்மை நிலை மறைந்து பணவரவு ஏற்பட்டு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு நம்முடைய புராணங்களில் பல சான்றுகளும் கூறப்பட்டு இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சான்றாக தான் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் திகழ்கிறது. யாரொருவர் கனகதாரா ஸ்தோத்திரத்தை மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு கூறி வருகிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்றும் ஆதிசங்கரர் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட கனகதாரா ஸ்தோத்திரம் சமஸ்கிருதத்திலும் அதேசமயம் தமிழிலும் இருக்கிறது. எதில் படிக்க விருப்பம் இருக்கிறதோ அந்த மொழியில் படித்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யலாம்.

பெண் தெய்வங்களுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மகாலட்சுமி தாயாரை மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையில் நெல்லிக்கனியை வைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்து பூஜை செய்வதை தான் கனகதாரா மகாலட்சுமி பூஜை என்று கூறுகிறோம். இந்த பூஜையை தொடர்ச்சியாக 8 வெள்ளிக்கிழமையும் செய்யலாம். அப்படி தொடர்ச்சியாக செய்ய இயலாது என்னும் பட்சத்தில் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையாவது இந்த பூஜையை செய்ய வேண்டும்.

இந்த பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். இயலாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம். இந்த பூஜைக்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய நெல்லிக்கனி. கனகதாரா ஸ்தோத்திரத்தில் நெல்லிக்கனியை தானமாக தந்த மூதாட்டிக்கு ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடி செல்வ செழிப்புடன் வாழ வைத்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த கனகதாரா மகாலட்சுமி பூஜைக்கு நமக்கு நெல்லிக்கனி வேண்டும்.

கனகதாரா ஸ்தோத்திரத்தில் மொத்தம் 21 பத்திகள் இருக்கின்றன. அதற்கேற்றார் போல் 21 முழு நெல்லிக்கனியை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு காம்பு இருக்கும் பகுதியில் இருக்கக்கூடிய சதை பகுதியை மட்டும் நீக்கி சிறிய பள்ளம் போல் நோண்டி நெல்லிக்கனியை ஒரு அகல் விளக்கு போல் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு பஞ்சுத்திரி, தாமரைத் தண்டு திரி போன்ற திரிகளில் ஏதாவது ஒரு திரியை எடுத்து நெய்யில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் 21 நெல்லிக்கனியையும் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பிறகு நெய்யில் ஊற வைத்திருக்கும் திரியை எடுத்து நெல்லிக்கனியில் வைக்க வேண்டும். கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒரு பத்தி படித்து முடித்ததும் ஒரு நெல்லிக்கனி தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு பத்தி படித்து முடித்த பிறகு ஒவ்வொரு நெல்லிக்கனியாக தீபத்தையும் ஏற்றி 21 பத்திகள் நிறைவடைம்பொழுது 21 நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வைத்திருப்போம்.

இவ்வாறு ஏற்றி முடித்த பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வழிபட்டு அவருக்கு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். நெல்லிக்கனி கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் 21 மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம். பூஜை நிறைவடைந்த பிறகு மறுநாள் இந்த நெல்லிக்கனிகளை எடுத்து ஏதாவது ஒரு வகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவிளக்கை வைத்து வழிபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் பசுமாட்டிற்கு மாவிளக்கை தானமாக கொடுத்துவிடலாம்.

மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த கனகதாரா மகாலட்சுமி பூஜையை முழு மனதோடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலை முற்றிலும் நீங்கி பணவரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்