வெற்றிகளை குவிக்கும் கௌமாரி!
தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான்.
மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர், குமாரர் என வணங்கப்படுகிறார். அகங்காரத்திற்கு தேவதையாக இவர் கூறப்படுகிறார்.
அகங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’ என்று வழிபடுகிறோம். வீரத்தை இவளே அருள வேண்டும்.
இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம், போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள்.
இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள்.
அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்ய, நலம் பெறலாம்.
ஞான குருவாய் ஓம் எனும் பிரணவத்தை உபதேசித்து ஒப்பிலாத் தெய்வமானான். மாதா பார்வதி தேவியின் திருக்கரத்திலிருந்து சக்தி வேலை வாங்கி அதைக் கொண்டு சூரனை இரு கூறாக்கியவன்.இந்த தமிழ்க் கடவுளின் சக்தியே கௌமாரி எனப்படும் சஷ்டி தேவியாவாள்.
ஸ்வயம்புமனுவின் புதல்வன் நிஷிதன் என்பவனுக்குப் பிறந்த குழந்தைகள் உடனே இறந்தன.
அவனை இந்த சஷ்டிதேவி என வழங்கப்படும் கௌமாரி உபாசனை காப்பாற்றியது. இவள் குழந்தைகளைப் பிழைக்க வைத்து அவனிடம் கொடுத்தருளினாள்.
அப்போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையையும், வறுமையில் உழல்பவர்களுக்கு செல்வத்தையும். தன் கர்மாக்களை சரியாகச் செய்வார்க்கு அதன் பலன்களையும் தான் அளிப்பதாகவும் கௌமாரிதேவி உறுதியளித்ததாக புராணம் கூறுகிறது.
புத்திரப்பேற்றை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தி கௌமாரிதேவி ஆவாள்
இந்த கௌமாரியை வழிபட பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மனதில் புத்துணர்வும் தெம்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அறிவு பிரகாசிக்கும்.
மந்திரம்:
ஓம் கௌம் கௌமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நம:
கௌமாரி காயத்ரி:
ஓம் சிகி வாஹனாய
வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
.
ஓம் சிகித்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.
மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங் களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என் முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.