திருவிடைமருதூர் - மகாலிங்கமூர்த்தி சிவன் கோயில்

thiruvidai-maruthur-mahalinga-moorthy-sivan-temple
திருவிடைமருதூர் - மகாலிங்கமூர்த்தி சிவன் கோயில்

64 சிவ மூர்த்திகள் தலம்

மகாலிங்கமூர்த்தி (சிவன் தாமே லிங்கம் செய்து அந்த லிங்கத்தை சிவன் பூஜை செய்த தலம்)

பிரம்மஹத்தி_தோஷம்_நீக்கும்
திருவிடைமருதூர்.!!*
மூலவர்: மகாலிங்கேஸ்வரர்
அம்பாள் / தாயார் : பெருமுலையாள்
தலவிருட்சம் : மருதமரம்
தீர்த்தம் : காருண்யமிருதம் மற்றும் காவேரி
ஊர் : திருவிடைமருதூர்
அமைவிடம் : கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 வருடங்களுக்கு முன் சோழர்களால்  கட்டப்பட்டக் கோயில்.
இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி.
தாயார் பெருமுலையாள்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.

ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் ,
சேய்ஞலூர்-சண்டேசுரர், சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள்,
சிதம்பரம்-நடராஜர் ,
சீர்காழி- பைரவர்,
திருவாவடுதுறை - திருநந்தி
ஆகிய பரிவாரத் தலங்களுடன்அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரிதென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.
" பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ்
சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா
மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய்
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே "

-திருஞானசம்பந்தர்

தல வரலாறு:
உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார்.
உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி அளித்தார். முனிவர்கள் அனைவரும் தேவியிடம் சிவபெருமானையும் காண வேண்டும் எனக்கூறினர். முனிவர்களுக்காக  இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு  இரங்கி உமைக்கும்முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு  கொண்டு அம்பாள் " இறைவா, பிரம்மன்முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்றுவினவ
"உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே".

நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார்.
முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை  காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.

ஸ்ரீ மூகாம்பிகை
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே  இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே கொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள்சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில்  மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர்.

இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம்  முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும்  இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை  நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.

 ஆண்ட விநாயகர்
கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர்  சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக்கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல்  கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக  இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது  அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு  ஆண்ட விநாயகர் என்ற காரணப்பெயர் உண்டு.
 
பட்டினத்தார்
பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும்  உள்ள தொடர்பு நெருக்கமானது.பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல  பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒருநாட்டுக்கே  ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம்  தோறும் தரிசித்து வந்து இருவரும்திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார்  திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒரு நாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை, இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார்.

இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க,  இந்த திருவோடும்,நாயும் தம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி பத்திரகிரியார் ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.
பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.

அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மாட வீதியில் நாயடியார்  கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு  வந்தால் இன்றும் காணலாம்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம்,
காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன.
27நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு  திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர்,சொக்கநாதர்  ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம்  என்றும் அழைக்கப்படுகிறது.

வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.பட்டினத்தார், பத்திரகிரியார்,வரகுணபாண்டியன், அருணகிரிநாதர்,கருவூர்தேவர் ஆகியோர்  வழிபட்டு பெரும்பேறு பெற்றபெருமையுடையது.
அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை  வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின்உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம்  செய்வோர் எல்லா நலன்களும்பெறுவர்.

தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால்மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும்  நூற்றி எட்டு, இருபத்து நான்கு,பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர்பெரும் பயன் அடைவர்.இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதால் கிடைக்கும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
திருவையாறு போல் இங்கும் ஓம்கார பிரகாரம் உள்ளது.

திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது.
 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம் உள்ள தலம்.

இந்தியாவிலேயே அன்னை மூகாம்பிகை க்கு தனி கோயில் கொல்லூரிலும் இத்தலத்தில் மட்டுமே உள்ளது.
திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர் ஆகும்.

இத்தலத்தில் பிரம்மஹத்திக்கு தனி சன்னிதி உள்ளது. ஒருவருக்கு திருமணத்தடை காலம் தள்ளிக்கொண்டேபோகுதல், புத்தி சுவாதினம் இல்லாமல் இருத்தல், போதல், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல், உத்தியோகத் தடை உண்டாதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

ஒருவன் செய்யாத தவறை, செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாவங்களாகின்றன. முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல்,
திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல், கருகலைப்பு செய்பவர்கள் ஆகியோரையும் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் அண்டிவிடுகிறது. இந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிவாரணம் பெற, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள்.

திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள்...