மங்களாம்பிகை திருக்கோயில் வரலாறு:
கண்டியூர்:
சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலை கொய்த
அட்ட வீரட்டான தலங்களில் முதன்மை தலம்
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலம்,
சப்தஸ்தான தலம்
திருக்கண்டியூர்_வீரட்டானம் (ஆதிவில்வாரண்யம்)
பிரம்மசிரகண்டீஸ்வரர்
(ஆதி வில்வநாதர்)
மங்களாம்பிகை திருக்கோயில் வரலாறு:
திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும்.
மூலவர்:பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
அம்மன்:மங்களாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
புராண பெயர்:திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம்
ஊர்:கண்டியூர்,
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருநாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர்
#வழிபட்டோர் :
பிரம்மன், சூரியன், சதாசபர் என்ற மகரிஷி
#தேவாரப்பதிகம்:
"பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான் தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.
-திருநாவுக்கரசர்
#அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:
"மருவு லாவிடு மோதி குலைப்பவர்
சமர வேலெனு நீடு விழிச்சியர்
மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே
சலச மேவிய பாத நினைத்துமுன்
அருணை நாடதி லோது திருப்புகழ்
தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன்
அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உழவர் சாகர மோடி யொளித்திட
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே
திருவின் மாமர மார்ப ழனப்பதி
அயிலு சோறவை யாளு துறைப்பதி
திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.
அருணகிரிநாதர்
தல வரலாறு:
சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆகிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தான். எனவே, தானே படைப்புக் கடவுள் என செருக்குற்றான்.
அவன் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான், பைரவர் உருவம் கொண்டு அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, அவரது ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது.
தோஷம் நீங்க வேண்டி பைரவர் இத்தலத்துக்கு வந்தபோது, பிரம்மனின் தலை, கையைவிட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
#மற்றொரு புராணமாக:
பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.
#பிரதோஷ தலம்:
இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளஹஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார்.
அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், “தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்!’ என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.
பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது. சாப விமோசனம் பெறக் காரணமாக இருந்த ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் எழுந்தருளி இருக்கும் திவ்யதேச ஆலயம் சிவன் கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது.
#தலபெருமை:
தண்டபாணி சன்னதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில்(ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும். வழக்கமாக சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அருகில் சதாசப மகரிஷி உள்ளார். அம்பாள் மங்களாம்பிகை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்திலுள்ள வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியருடன் மயில் வாகனம் இல்லை. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, பிரயோகச் சக்கரம் வைத்திருக்கிறாள். நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். தவறு செய்து விட்டு வருந்துவோர், மன நிம்மதிக்காகவும், திருமண, புத்திர தோஷம் உள்ளோரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
#பிரம்மா, சரஸ்வதி:
பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
#கோவில் அமைப்பு:
மேற்கு நோக்கிய இக்கோவிலில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என உள்ளது. இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது.
மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் அடுத்து இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்களும் உள்ளனர். அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.
நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கு வடபுறத்தில் சப்தஸ்தான தலங்களைக் குறிக்கும் 7 லிங்கங்கள், பஞ்சபூத தலங்களைக் குறிக்கும் 5 லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன.
இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி காட்சி அளிக்கிறாள்.
பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக்கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாக உள்ளது.
#பொது தகவல்:
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது.
#மாப்பிள்ளை விருந்து:
சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை வேளையில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான (புனிதப்படுத்தும் அபிஷேகம்) சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.
#தல_சிறப்புக்கள்:
அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.
"சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.
பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.
சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
சப்த(ஏழு)ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.
மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.
பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.
இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.
#திருவையாறு சப்தஸ்தானம்:
திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது.
#பிரார்த்தனை
பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள்.
#நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
#திருவிழா:
சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வைகாசியில் பதிமூன்று நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகின்றது. நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி
#திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.
#வழிகாட்டி:
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள தலம். தஞ்சாவூரிலிருந்து 10 கீ மீ. திருவையாற்றிலிருந்து 3 கீ மீ தொலைவு. தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் நகர பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. நகரப்பேருந்துகள் நிரம்பவுள்ளன.