(இச்சிறுகதையை அவதியுறும் ஆயிரமாயிரம் சகோதரிகளுக்கு அர்பணிக்கிறேன்)
அவளுக்கும் அந்தப் பிரச்சனை வந்துச்சு. எல்லாப்பெண்களுக்கும் 45 வயதுக்குமேல் வாட்டியெடுக்கும் மாசாமாசம்வரும் உதிரப்போக்கு பிரச்சனை . மாசத்துக்கு ஒருவாட்டின்றது ரெண்டுவாட்டி ஆச்சு.
மூணுநாளுன்றது அஞ்சுநாள் ஆறுநாள் ஆச்சு. உயிர்போகும் வலி ரத்தசோகை எப்பவுமே தீட்டாகி ஒக்காந்துருக்குற மாதிரி ஆகிப்போச்சு. பொம்பளை புள்ளைகளும் இல்ல ரெண்டுமே பையன்கள். சொல்லவும் முடியல மெல்லவும் முடியல. அந்தகஸ்ட்டத்தோட சமைக்கவும் செஞ்சா.
நெலம ரொம்ப மோசமாப்போச்சு கட்டுக்குள் இல்ல.செலநாள் தீட்டுஇல்லதநாளுகள்ளயே அங்க அங்க உதிரத்துளிகள் சிந்த ஆரம்பிச்சது. பொது எடங்களுக்குப்போகமுடியல. அசிங்கமாப்போச்சு. ஆசுப்பத்திரில டாக்ட்டரம்மாவப்போய் பாத்தா.
அவங்கசொன்னாங்க வேற வழியில்ல கர்ப்பபைய எடுக்கனும்ன்னு இல்லாட்டி உசுறுக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாக இதுல அவளுக்கு சக்கரைவியாதி வேற இருந்துச்சு. அவங்களோட ஆஸ்பத்திரில இருந்த டாக்ட்டரம்மா நானே ஆப்பரேசன் பண்ணுவேன்னு சொன்னாங்க
ஆனா இவளுக்குப்பயமா இருந்துச்சு நகரத்துல இருந்து தூரத்துல அந்த ஆஸ்பத்திரி இருந்ததுனால ஏதாவது எமெர்ஜென்சின்னா ஒண்ணும் பண்ணமுடியாது அதுனால அவ பயந்தா.
ஆனா வலியும் உசுறபுடுங்குச்சு எப்பப்பாத்தாலும் வலி அடிவயத்துல உசுற எடுத்துச்சு.தினம் உசுறுபோய் வரும் வாய்விட்டு அழுகுறமாதிரி ஆயிடும். தனியா கண்ணீர் விட்டுக் கதறுவா பிள்ளைக பாக்கக்கூடாதுன்னு
எல்லாச்சாமியையும் பெண் தெய்வங்களையும் கும்புட்டா. பாவம் அவங்க என்ன செய்யமுடியும் .
அவளுக்கு ஒரே நம்பிக்கை அவளோட காதல் கணவன் தான்.
அவன் தான் நம்பிக்கை குடுத்தான். பயப்படாத சரிபண்ணிடலாம். அவன் நேர பெரிய டாக்டரைப்போய்ப்பார்த்தான் அவரும் சர்ஜன் தான் பிரச்சனைய விளக்கிச் சொன்னான். அங்க ஆப்பரேசன் செய்ய மனைவி பயப்படுறதையும் சொல்லி கெஞ்சினான். நகரத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கி அனுப்ப கைல கால்ல விழுகாதகொறையா க்கெஞ்சினான்
ஒருவழியா அவரு ஒத்துக்கிட்டு அனுப்புனாரு. அங்க கைனகாலஜிஸ்ட்ட போய் பாத்தாங்க அப்ப அவங்க டெஸ்ட் பண்ணிட்டுச்சொன்னாங்க. ஆப்பரேசன் பண்ணனும்ன்னா ஹீமோ
குளோபின் 12க்கு மேல இருக்கணும்
ஆனா இப்ப 5 தான் இருக்கு .இது ஆபத்து சுகர் வேற 200 இருக்கு அத நாங்க ஊசிபோட்டுக் கொறச்சி டுவோம் , ஆனா ஹீமோகுளோபின் நீங்கதான் சரிபண்ணனும்னாங்க.
அத அதிகப்படுத்த ஆட்டோட மண்ணீரல் முருங்கைக்கீரை அத்திக்காய் இதெல்லாம் உதவும்ன்னு சொன்னாங்க. 15 நாளுக்கப்புறம் இதசெஞ்சிட்டு வந்து பாக்கச்சொன்னாங்க. அவர் அன்னில இருந்து லீவுபோட்டாரு .
அந்த ஊருல இருந்த கறிக்கடையில எல்லாம் சொல்லிவைச்சாரு மண்ணீரலுக்கு. அதேமாதிரி பக்கத்து கிராமத்துல இருந்து வாற ஒரு பாட்டிசொல்லிச்சி அத்திக்காய் சுண்டக்காய் முருங்கக்கீரை தினம் கொண்டாந்து குடுக்குறேன்னு
அன்னில இருந்து அதுதான் அவளுக்குச்சாப்பாடு. தினம் மண்ணீரல் இரண்டு சுண்டைக்காய் அத்திக்காய் முருங்கக்கீரை சூப்புன்னு பக்கத்துல இருந்து வம்பு பண்ணிச் சாப்புடச் சொன்னாரு . சமையல் எல்லாம் அவரே கவனிச்சிக்கிட்டாரு. சொல்லக்கூடாது உதிரம் படிந்த அவளோட ஆடைகளை க்கூட தொவச்சாரு. அப்ப வாசிங்மிசிசினெல்லாம் இல்ல அவுங்க வீட்டுல.
அவரு அந்த வேலைகளைச்செய்யும்போது அவளுக்குக்கண் கலங்கும் அவர இந்த வேலையெல்லாம் செய்ய வைச்சிப்புட்டமே
என்ன மன்னிச்சிருங்கன்னு அழுவா. அவர்சொல்லுவாரு நீ இப்ப என்னோட மக மாதிரி நான் ஒனக்கு அம்மா மாதிரி இத இப்ப உனக்கு வேற யாரும் செய்யமுடியாதுநான் தான் செய்யனும் இத்தன வருசம் நீ எனக்காக என்னென்ன செஞ்சிருக்க இது என் கடைமை இதசெஞ்சாத்தான் நான் மனுசன்ன்னு சொன்னாரு.அவ அழுதுட்டா
15 நாளாச்சி மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு நகரத்துக்குக்கூட்டிட்டுப்போனாரு. அங்க அவளைச்செக் பண்ணுன டாக்டர் ஆச்சர்யப்பட்டுப்போனாங்க ஏன்னா ஹீமோகுளோபின் 13 சக்கரை 100 எப்புடிங்க இதுன்னு கேட்டாங்க .
எப்படியோ இப்ப ஆப்பரேசன் பண்ணலாமான்னு கேட்டாரு. அவங்க சொன்னாங்க எதுக்கும் ஒரு யூனிட் ரத்தம் கொடுக்கனும்ன்னு.உடனே அவர் சொன்னாரு என் சம்சாரத்துக்கு நான் தாறேன் நான் தராம வேற யார் குடுப்பான்னு. சொல்லி உடனே குடுத்துட்டு வந்தாரு.
அப்ப டாக்டர் சொன்னாங்க இது ஓபன் சர்ஜரி இல்ல. மயக்கம் குடுத்துட்டு பிரசவப் பாதையிலயே இன்ஸ்ட்ருமெண்ட் விட்டு கர்ப்பபையை துண்டு துண்டாக் கட்பண்ணி எடுத்துடுவோம் வெளிய காயம் இருக்காது ஆனா உள்ள காயம் ஆறனுமுன்னா சுகர் கண்ரோல்ல இருக்கனும்.
கூட பெண்கள் யாரும் வந்துருக்காங்களா தொணைக்கின்னு கேட்டாங்க அப்ப அவரு சொன்னாரு எல்லாம் நான் பாத்துக்கிறேன்னாரு. அவங்க ஆச்சரியமாப்பாத்தாங்க.
மறுநாள் ஆப்பரேசன் காலை 9.00 மணிக்கி ஆனா நைட்டுபூராம் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுச்சு. ஆசுப்பத்திரிய சுத்திஒரே வெள்ளம் வண்டி எதுவும் போகவர முடியல. விடிஞ்சும் மழை நிக்கல ஆப்பரேசன் நடக்குமான்னு தெரியல . அப்ப அந்த டாக்ட்டரம்மா போன் பண்ணினாங்க நான் எப்புடியாச்சும் வந்துடுவேன் ஆப்பரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு ஆனா 930 வரை வரல.
பத்துமணிக்கு முழுசா நனைஞ்சு வந்தாங்க அவங்க வந்த கார் வெள்ளத்துல இழுத்துட்டுப்போச்சாம் அதுல இருந்து தப்பிச்சி வந்தாங்களாம் உசிறகைல புடிச்சிட்டு ஏன்னா இன்னிக்கி விட்டா ஆப்பரேசன் திரும்ப ஒருமாசம் தள்ளிப்போகுமாம். அவரு அவங்களைக்கையெடுத்துக்கும்புட்டாரு
அவளுக்கு ஆப்பரேசன் டிரஸ் போட்டுவிட்டாங்க. அவளை ஸ்ட்ரெச்சரில படுக்கவைச்சாங்க
ஆப்பரேசன் தியேட்டருக்கு வெளில அவரோட கையப்புடிச்சி அழுதா. நான் பொழைச்சிக்கி
வேனாங்கன்னு. அவர் கைய இறுக்கமா அழுத்திச்சொன்னாரு நீ நல்லாயிடுவ .பயப்படாத நீ நல்லா வெளிய வாரவரைக்கும் நான் வேண்டிட்டே இருப்பேன் ந்னு சொல்லி அந்தப் பக்கமாத்திரும்பிகண்ணத்தொடச்சிக்கிட்டாரு.
அப்ப டாக்டரம்மா வந்தாங்க அவங்ககிட்ட அவரு சொன்னாரு என் தேவதை இவ இவளப்பத்திரமா திருப்பிக்குடுத்துருங்க இவதான் என்னோட உலகம்ன்னு
அவங்க அவர் கையப்புடிச்சி நிச்சயமா நீங்களும் வேண்டிக்கங்க எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் இருக்கார் அவரைன்னு சொல்லிட்டு உள்ளார போனாங்க
அவளை உள்ளாரகொண்டுபோனாங்க அங்க நெனவிருக்குறவரைக்கும் அவரையும் புள்ளைகளையும் நெனச்சிட்டே இருந்தா. நெனவு தப்புச்சு
முழிச்சிப்பாக்கையில அவ வார்டுல இருந்தா அவரு சாமிபடத்துக்குமுன்னாடி கண்ணீரோட வேண்டிக்கிட்டு இருந்தாரு
அப்ப அந்தடாக்ட்டரம்மா வந்தாங்க உன் தேவதையைநான்உனக்குத்திருப்பிக்கொடுத்துட்டேன் இனிமே உங்க பொறுப்புன்னு சொல்லி சிரிச்சாங்க அவர் கையெடுத்துக்கும்புட்டார் அவளும் கும்புட்டா.
கண்ணு நல்லா முழிச்சி அவரக்கூப்புட்டா அவரு திரும்பிப்பாக்கையில அவருமொகத்துல அவ்வளவு சந்தோசம் மெதுவா வந்து தலையத்தடவிக்குடுத்தாரு அப்ப அவரு சொன்னாரு சாமிக்கி நன்றி சொல்லுன்னு
அவ சொன்னா என் சாமி இதுதான்னு அவரு கையப்புடிச்சிச் சொன்னா . கண்களில் நீர்வழிய.... அவர் அவளோட நெத்தில குனிஞ்சி முத்தம் கொடுத்தார்.
எனக்கு உலகமே நீதான்னு அப்ப அவரோட கண்ணீர்த்துளிஅவநெஞ்சிலசூடாவிழுந்துச்சு.......அவகேட்டா இப்பயும் என்னக் காதலிக்கி றாயான்னு அவருசொன்னாரு இனிமேத்தான் அதிகமான்னு... கண்கலங்க
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்