ஆசிரியர் : சாரு நிவேதிதா
பக்கங்கள் : 90
விலை : 120
பதிப்பகம் : எழுத்து பிரசுரம்
சாரு நிவேதிதா. எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சினையைப் பற்றி கட்டுரைகளாக எழுதும் இவர் எழுதிய சிறுகதைகள் தான் இந்த புத்தகம். சிறுகதைகள் என்று சொல்வதை விட இதை மற்றும் ஒரு கட்டுரையாக தான் பார்க்க முடிகிறது. அவ்வளவுக்கு அவ்வளவு அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து தான் கதையை உருவாக்கி இருக்கிறார்.
கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவரை சுற்றி இருக்கும் நபர்களைத் தான் நினைவுபடுத்துகின்றன. சாருவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் யார் யார் என்பது நிச்சயம் சுலபமாக தெரிந்துவிடும். ஆனாலும் எப்பொழுதும் போல் அவ்வப்பொழுது கூறும் பிரச்சினைகளை பற்றி இந்த கதைகளிலும் கூறி இருக்கிறார். அதிலும் தனக்கே உரித்தான நையாண்டி பாணியில் கூறியிருப்பது இந்த சிறுகதைகளை மேலும் அழகு படுத்துகிறது. அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த கதைகளில் அவர் பயன்படுத்தி இருக்கும் அதிவீர பாண்டியன், பெருந்தேவி, ஆழ்வார், கிருஷ்ண பரமாத்மா, பெருமாள், மீரா என்று வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரையும் அவரை சுற்றி இருப்பவர்களையும் தான் ஞாபகப்படுத்துகின்றன. முதலில் வரும் சில கதைகளில் அதிவீரனும் பெருந்தேவியும் தொடர்ச்சியாக வருகின்றனர். ஆட்டுக்கால் சூப் என்ற சிறுகதையில் வாடகை வீட்டில் சுற்றிலும் இறைச்சி உண்ணாதவர்கள் (யார் என்று உங்களுக்கே தெரியும்) இருக்கும் பொழுது ஒரே ஒரு குடும்பம் மட்டும் இறைச்சி உண்பதால் ஏற்படும் பிரச்சினையை பற்றி விளக்கியிருக்கிறார்.
பொதுவாக இந்தியர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்று கூறுகிறார். விளையாட்டாக ஒரு விஷயத்தை கூறினால் கூட அதை விபரீதமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள் இந்தியர்கள். அவர்களை கிண்டல் செய்தால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதைத்தான் "tell him not to kill me" என்ற சிறுகதையில் விவரித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் விருந்திருக்கு செல்லும் அவர் அங்கு மதுபானம் இல்லை என்பதை அறிந்து பக்கத்தில் இருக்கும் பாருக்கு செல்கிறார்.
அவர் சென்று வந்ததை அறிந்து கொண்ட அரசியல்வாதி "என்ன பாருக்கு போய் வந்தாயிற்றா? எத்தனை பெக்" என்று கேட்டிருக்கிறார். இவரும் விளையாட்டாக "தங்கள் உளவுத்துறை பிரமாதமாக வேலை செய்கிறது" என்று கூற அதை விபரீதமாக எடுத்துக் கொண்டு அந்த அரசியல்வாதி இவரின் நட்பை முறித்துக் கொண்டு விட்டார்.
கோடம்பாக்கம் என்ற சிறுகதையில் சினிமாவில் தான் பணியாற்றிய அனுபவங்களை பற்றி விவரிக்கிறார். u turn என்ற ஆங்கில படத்தை தமிழுக்கு ஏற்றார் போல அமைக்க முயற்சி நடந்ததை பற்றி விவரிக்கிறார். அந்தக் கதையில் இருந்த முரண்களையும் அது திரையில் வந்தால் தனக்கு ஏற்படும் கெட்ட பெயரையும் பற்றி கூறுகிறார். மேலும் அந்தக் கதை விவாதத்தின் போது நடந்த சில திடுக்கிடும் தகவல்களையும் கூறுகிறார்.
தான் எழுதிய எல்லா புத்தகங்களிலும் விவாதித்து இருக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தான். இதிலும் அதுபோன்ற ஒரு கதை உள்ளது." ஒரு பியர் என்ன விலை". இதில் அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து விசாரித்தால் தான் நான் ஒரு ரசிகன் என்றும் நீங்கள் எழுதிய கதையில் வரும் பார் எங்கு உள்ளது என்றும் அங்கு ஒரு பீரின் விலை என்ன என்றும் கேள்விகள் கேட்டிருப்பார் ஒருத்தர். இதை கதையாக எழுதியுள்ள சாரு எழுத்தாளனுக்கு போன் பண்ணி பப்புக்கு போகும் வழி பியர் விலை எல்லாம் சொல்லும் அவல நிலைக்கு ஆளானதை கூறுகிறார்.
ஒரு நண்டுக் கதை. பொதுவாக நாம் சிறுவயதில் கடையில் எதையாவது வாங்கி வந்தால் அதன் விலை 200 என்று அம்மாவிடம் கூறினால் '200 ரூபாய் ரொம்ப அதிகம் 50 ரூபாய் 60 ரூபாய் தான் வரும் இது' என்று நம்முடன் சண்டைக்கு வருவார். அதுபோன்று நண்டு வாங்க செல்லும் பெருமாள் 5 நண்டுகளின் விலை 500 என்று கேட்டு அதிர்ச்சி அடைகிறார். வேறொரு நபர் வந்து கேட்ட பொழுதும் அதே விலையை கூறுகிறார் கடைக்காரர். பின் பேரம் பேச ஆரம்பித்து 300 ரூபாய்க்கு வாங்கி செல்கிறார்.
இரண்டாம் நபர் வந்து 350 க்கு வாங்கிக் கொண்டு போகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்தவர் தானும் சென்று 350 ரூபாய் கொடுத்து 6 நண்டுகளை வாங்கிக் கொள்கிறார். வீட்டிற்கு வந்து தன் மனைவி மீராவிடம் "எவ்வளவு இருக்கும் சொல்லேன் பார்ப்போம்" என்று கேட்கிறார். அவளும் சிறிது யோசித்து "ஐம்பது ரூபாய்" என்கிறார். இவரும் சமாளித்து "எவன் கொடுப்பான் ஐம்பது ரூபாய்க்கு? 100 ரூபாய்!" என்று கூறியவுடன் அன்று முழுவதும் சண்டை ஏற்பட்டதை எழுதியுள்ளார்.
பிணவறைக் காப்பாளன். இதில் உள்ள கதைகளிலேயே மிகவும் சிறப்பான கதை இந்த கதை தான். மொத்தம் ஐந்து கதைகளை ஒரே சிறுகதை ஆக்கி கொடுத்திருப்பார். அரசியலில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவர் நின்றதால் ஏற்பட்ட கொலையைப் பற்றி ஒரு கதை, இலங்கையில் நடந்த போரை ஒட்டி ஒரு கதை, பிணவறைக் காப்பாளனாக இருக்கும் கதிரவனை பற்றி ஒரு கதை, இளம் வயது பெண் தனக்கு அனுப்பும் மெசேஜ்கள் பற்றி ஒரு கதை, அரசியலில் சிறுவயதிலேயே சாதித்த தமிழரசன் பற்றி ஒரு கதை என்று ஒரே சிறுகதையில் 5 சிறு சிறு கதைகளை பொருத்தி மிக அழகாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு கதை தான் இந்த பிணவறைக் காப்பாளன். நேரம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி. புத்தகத்தின் தலைப்பில் அமைந்த இந்த கதையும் ஒரு சிறந்த கதை தான். ஆறு மாதங்களாக ஒன்றாக சுற்றி அலைந்த ஒரு நபரை மறந்து போகிறார் எழுத்தாளர். பின் அவரிடம் இருந்து தொடர் அழைப்புகளால் மீண்டும் ஞாபகம் வருகிறது. அவரும் வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என்று முடிவு செய்து செல்கிறார். ஆனால் அங்கு சென்று குடித்துப் பார்த்தால் எல்லாம் தண்ணீர் சுவையில் இருக்கின்றன. எங்கே தான் பயங்கர குடிகாரனாய் விட்டோமோ? கிட்னி பழுதாகி விட்டதோ? என்று பல எண்ண ஓட்டங்கள் அவர் மனதில் எழுகின்றன.
அதன் பிறகுதான் அவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. அந்த நபரின் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் எந்த அறைக்கு செல்லவும் அனுமதி உண்டு. அவர்கள் ஏதும் மதுவை அருந்தி விட்டு தண்ணீரை மாற்றி இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் இவை எல்லாம் நடப்பதற்கு முன்பு அந்த நண்பரின் மகள் 'சாருவை எனக்கு தெரியும்' என்று நண்பர் கூறுவதை நம்ப மறுக்கிறாள். அப்படியானால் சாருவிடம் கேட்டு எனக்கு பிடித்த ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி தாருங்கள் என்பதுடன் கதை முடிகிறது. கடைசியில் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் முடிந்த சிறுகதை இது.
மேலும் பல சம்பவங்களைப் பற்றி கதைகளாக தொகுத்து அளித்திருக்கிறார் சாரு நிவேதிதா. சாருவை தொடர்ந்து வாசிப்பவர்கள் வாசிப்பதற்கு மற்றும் ஒரு புத்தகம். மற்றவர்கள் நேரமிருந்தால் வசிக்கலாம்.