மதிப்புரை:
சில மாதங்களுக்கு முன் தான் நான் பட்டுக்கோட்டை அவர்களின் எழுத்திற்கு அறிமுகம் ஆனேன். முதல் முறையாக பெரிய நூலகத்தில் அமர்ந்து வாசித்த மறக்க முடியாத அனுபவம் அது. சிறுகதை ஆகட்டும் நாவல் ஆகட்டும் இவரின் எழுத்துநடை என்னை எப்போதும் ஈர்த்துள்ளது. இவரின் கதாபாத்திரங்கள் அவ்வளவு ஆழமாகவும் எதார்த்தமாகவும் இருக்கும். சரி இந்த கதைக்கு வருவோம்!
இது ஒரு க்ரைம் த்ரில்லர். ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில் ஒரு திரில்லர் எழுத வேண்டும் என்பது எல்லோருக்குமே ஆசை இருக்கும். அந்த வகையில் பரத்- சுசிலா என்ற காதலர்கள் இந்த கதையில் ப்ரைவேட் டிடெக்டிவாக வருகிறார்கள். மற்ற டிடெக்டிவ் கதைகளில் இருந்து இங்கேயே மாறுபடுகிறார் பட்டுக்கோட்டை அவர்கள். ஒரு காதல் ஜோடி டிடெக்டிவாக வருவதை தான் சொல்கிறேன். பரத் ஜாலியான இளைஞனாகவும், சுசிலா கண்டிப்பான காதலியாகவும் வருகிறார்கள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல இருவரும் வேலையில் சிறப்பாக செயல்படுவர். கோகுல்ராஜ் என்கிற பிரபலமான பில்டரின் அழகான மனைவி மாயா கொல்லப்படுகிறாள். அவளை செய்தவர் யார், என்ன நோக்கம் என்பதை நோக்கியே நகர்கிறது இந்த கதை.
கோகுல்ராஜ் - மாயாவுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம். கோகுல்ராஜ் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது, மாயாவின் முன்னால் காதலன், மாயாவின் தங்கை கோகுல்ராஜூக்கு சப்போர்ட் செய்வது, நடிகர் சக்சேனாவுக்கு மாயா மீது காதல் என கதை விருவிருப்பாக நகர்கிறது.
மற்ற எழுத்தாளர்கள் போல விறுவிறுவென கொண்டு சென்று டக்கென கதையை முடிக்காமல் பொறுமையாக கதாப்பாத்திரங்களை வடிவமைத்து கதையை நகர்த்துவதே இவரது சிறப்பு.
55 அத்தியாயம் கொண்ட இந்த தொடர்கதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் அருமையாக சென்றது👌. இவரது எழுத்துக்களை இன்னும் வாசிக்க ஆர்வமாக உள்ளேன். சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது கூட சுவாரசியம் தான், அப்படி இவர் கதையில் ஒரு இடத்தில் பதில் சொல்லாமல் சென்றது கூட அருமை.
அனைவரும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் எழுத்துக்களை வாசியுங்கள். இந்த கதை 'நோஷன் ப்ரஸ்' என்ற செயலியில் வாசிக்கக் கிடைக்கிறது.
Pic credits: @google @notionpresstamizh