அவனோட வீட்டுக்கதவை யாரோ தட்டுற சத்தம் கேட்டுச்சு. அவன் எந்திச்சி கடிகாரத்தைப்பாத்தா மணி ராத்திரி 8.00 என்று
இந்த நேரத்துல யாரு வரப்போறா ன்னு ஊருக்கு வார கடைசி பஸ்ஸும் வந்து போயிடுச்சி இந்த ஊர்க்காரவுகன்னா ஒறவு மொறை சொல்லி அக்கா அண்ணன் மாமானு கூப்புட்டுத்தான் தட்டுவாக ஆனா அதுமதிரி இல்லையே ஏதோ கட்டையில கதவைத்தட்டுற மாதிரி இல்ல இருக்குன்னு சந்தேகப்பட்டுக்கிட்டே கதவைத் தொறந்தான் அவன்,
வெளிய நின்ன ரெண்டுபேர் இவன் முன்ன பின்னப் பாத்ததில்ல. அதுனால
“ யார் நீங்கன்னு ”கேட்டான்
அதுக்கு அவங்க ”இங்க சோணைங்கிறது யாருன்”னு கேட்டாங்க
இவன் சொன்னான் "ஏன் என்ன விசயம்"னு கேட்டான் அதுக்கு அவங்க
”நாங்க சொல்ற எடம் வரைக்கும் வாப்பா ஒரு சின்ன விசாரணை முடிச்சிட்டு அனுப்பிடுறோம்”னு சொன்னாங்க. இவனுக்கு ஒன்னும் புரியல. யார்கிட்ட என்ன விசாரணை ஏன் அங்க வரணும் நீங்களே சொல்லுங்கன்னு “
”மொத சோணை நீ தான”
”இல்ல அது என் தம்பி”
”அவனக்கூட்டிட்டுப்போய் ஒரு சின்ன விசாரணை பண்ணிட்டு அனுப்பிடுவோம் கூடவேணுமுன்னா நீயும் வா”
”என்னா ஏதுன்னு தெரியாம எப்புடி வாரது அதுவும் இந்த நேரத்துல”
”அதெல்லாம்தெரியாது பெரிய அய்யா கூட்டியாரச்சொன்னாரு”
இவன் போய் அவன் தம்பிய எழுப்பியாந்தான் அவன் கண்ணக்கசக்கிக்கிட்டே வந்தான்
அப்ப வந்தவர் சொன்னாரு
”வாப்பா ஒரு சின்ன விசாரணைதான் போய்ட்டுஒடனே வந்துரலாம்”
வாடா போய்ட்டு வந்துரலாம்னு சொல்லி இவன் சொன்னதும் அவனுமிவனும் சட்டைய மாட்டிக்கிட்டு அவங்க கூடப்போனாங்க
அங்க வந்ததும் வந்தவர் சொன்னார் ”நீ வெளிய இரு இவன மாத்திரம் உள்ளாற கூப்புட்டுப்போறோம்”னு
”இல்லை சார் நானும்வாறேன்னு” சொன்னான் இவன்
”இல்லப்பா நீ எதுக்கு நீ இங்கயே இரு அவன் போய்ட்டு அஞ்சு நிமிசத்துல வந்துருவான் கூப்புட்டுப்போகலாம்”னு
சொல்லிட்டு அவனை மட்டும் உள்ளாற கூப்புட்டுப்போனாங்க.
கொஞ்சநேரத்துல அவனோட அலறல் சத்தம் கேட்டுச்சு
இவன் உள்ளாற போகலாம்னா வெளிய நிக்கிறவர் இவனை உள்ளாற விடல
என்ன பண்ணுறதுன்னு தெரியல. ஊருக்குள்ள ஒருத்தர் தான் இது மாதிரி விசயங்களுக்கு வந்து பேசுறவர் அதுனால அவரைத்தேடி ஓடினான்
அங்க அவர்கிட்ட விசயத்தை எடுத்துச்சொன்னான் . ஆனா அவர்
”அது எதுனாச்சும் திருட்டுக்கேசா இருக்கும் பா அதுக்கெல்லாம் நான் வாரதில்ல” அப்படின்னாரு
“ஐயா அவன் அப்படிப்பட்ட ஆளில்ல அப்பாவி அதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டான் ஒங்களுக்கே தெரியும்ல என்னா ஏதுன்னாவது கேட்டுச்சொல்லுங்க அதுபோதும்” நு கெஞ்சினான்
சரின்னு அவரும் அவனை வண்டில ஏத்திக்கிட்டு அங்க போனாரு
இவன வெளிய இருக்கச்சொல்லிட்டு உள்ளாற போய் பேசிட்டு வந்தாரு
“ நான் சொல்லல அது திருட்டுக்கேசுதானாம் நேத்து பக்கத்து ஊரில கடைய ஒடைச்சி திருட்டு நடந்திருக்கு அந்தப் பக்கமா போனவர் பாத்துட்டு திருடன எட்டிப்பிடிச்சிருக்காரு அவன் இவரைக் கீழ தள்ளிட்டு ஓடிட்டானாம் ஆனா அவன் சட்டை பாதி கிழிஞ்சி இவர் கையில மாட்டிக்கிச்சாம் அதைக்கொண்டுபோய் குடுத்திருக்கார் சாட்சியா அங்க இவர் சொன்னதுதான்
’அவனுக்கு 25 வயசிருக்கும் ஒல்லியா கருப்பா இருந்தான்னு சொல்லிருக்காரு’
அதைவைச்சி டெயிலர் கடையில போனப்பத்தான் அவன் சொல்லிருக்கான் அவனோட நோட்டப்பாத்து ஒன் தம்பி பேரை அதான் வந்து கூப்புட்டுப்போய் விசாரிக்கிறாங்க அதுல நான் ஒன்னும் பண்ணமுடியாது” நு சொன்னார்
இவன் ஒடனே வீட்டுக்கு போய் அவனோட பொட்டில தேடி அவன் தீவாளிக்கு எடுத்த சட்டைய எடுத்துட்டு நேர அங்க போனான். அங்க இருந்தவங்க கிட்ட இவன் சட்டையக்காட்டி
” அய்யா இவன் தீவாளிக்கு தைச்ச சட்டை இதுதான் அவன் தைச்சது இந்த ஒரே சட்டைதான் வேற எதுவும் அவன் தைக்கலன்னு” சொன்னான்
அங்க இருந்தவர்
”அப்ப இது யாரு சட்டைன்னு” ஒரு கிழிஞ்ச சட்டையக் காமிச்சாரு
அதைப்பாத்துட்டு இவன் சொன்னான்
“அய்யா அதுமாதிரி இவன் போடவே மாட்டான் அது சார்ட் சட் இவன் எப்பையுமே முழுசாத்தான் போடுவான்” நு சொல்லவும்
அங்க உள்ளாற இருந்த ஒருத்தனைக் கூட்டியாந்தாக அவன் கிட்ட
“ ஏய் நீ சொல்லு இவன் சொல்றது உண்மையா இது உள்ளாற இருக்குறவன் சட்டையா “ கேட்டாரு
அதுக்கு அவன்
”அய்யா நோட்டப்பாத்தப்ப சோணைன்னு பேர் இருந்துச்சு இன்னொரு சோணையும் என்கிட்டத் தைக்கிறவர் தான் அவரைக்கேட்டாத்தெரியும் அவர் இவங்க தெருவுக்குப்பக்கத்து தெருதான்” நு சொன்னான்
ஒடனே இவனைக்கூப்புட்டுக்கிட்டு அங்க போனாங்க. அங்க அந்த வீட்டுக்கதவைத்தட்ட அங்க இவன் தம்பி சைசிலேயே ஒருத்தன் வந்தான் அவன்கிட்ட சொல்லி அவனை இங்க கூட்டியாந்தாங்க
அவன் கிட்ட விசாரிச்சப்ப அவன் சொன்னான்
“ ஐயா நான் மூணுநாளா ஊரில் இல்ல. வேலை விசயமா வெளியூர் போயிருந்தேன் நான் டிரான்ஸ்போர்ட்ல தான் வேலை செய்யிறேன் கண்டக்டரா ரெண்டு நாளைக்கி முன்னாடி சென்னைக்கி டூட்டி போய்ட்டு இன்னிக்கி காலையிலதான் வந்தேன் அந்தச்சட்டைய எங்கம்மா ரெண்டு நாளைக்கி தொவைச்சிக் காயப் போட்டிருந்தாங் களாம் அது காணாமப்போச்சாம் என்கிட்ட சொன்னாங்க ஆனா அது என் சட்டைதான் நான் சென்னைக்கிப் போனத நீங்க விசாரிச்சிக்கலாம்”
நு சொன்னான்
அப்ப அவன் கிட்ட அங்க இருந்தவர் சொன்னார்
”உன் தம்பி என்ன கேட்டாலும் அடிச்சாலும் கத்துறானே தவிர ஒன்னும் பதிலே சொல்ல மாட்டீங்குறான் ரொம்ப அழுத்தக்காரனா இருக்குறானே வீட்டுலயும் அப்படித்தானான்னு” கேட்டார்
அதுக்கு இவன் சொன்னான்
“ அய்யா இவன் அப்படியில்ல பயந்தா அவனுக்குப் பேச்சு வராது பொதுவாவே திக்கிக்திக்கித்தான் பேசுவான் நீங்க வேற அவன அடிச்சிருக்கீங்க அப்ப அவனால பேசவே முடியாது பேச்சு சரியா வராத அவனைத்தான் போட்டு டார்ச்சர் பண்ணிருக்கீங்க”ன்னு சொல்லவும்
அங்க இருந்த பொறுப்பானவர் சொன்னார்
”களவாணியப்புடிச்சிட்டு வாங்கன்னா இப்புடி அப்பாவியப்புடிச்சிட்டு வந்திருகீங்க ”னு சொல்லிட்டு நீ இவனைக்கூப்புட்டுப்போப்பா
போய் ஒழுங்கா தேடி அக்கூயூஸ்டப்புடிக்கிற வழியப்பாருங்கன்னு சொன்னார்
அப்ப இவனோட தம்பி இவன் கிட்ட திக்கித் திக்கிக் கேட்டான்
”எல்லாரையும் இப்படித்தான் செய்வாங்களான்” னு
அதுக்கு இவன் சொன்னான் “ எல்லாரையும் இப்படிச் செய்ய மாட்டாங்க நாம ஏழைங்க அதான் இப்படி” நு
(பின் குறிப்பு இது ஒரு கற்பனைக்கதை)
நன்றி; அ.முத்துவிஜயன்