Breaking News :

Friday, April 19
.

திருமணம்: சிறுகதை


​கட்டிலில் படுத்தபடி வாரப் பத்திரிக்கையில் மூழ்கியிருந்த திருமலைசாமி, தலையைத் தூக்கி கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி 10.30.

 “இன்னுமா வேலை முடியலை இவளுக்கு?” மனைவியை மனசுக்குள் கரித்துக் கொட்டி விட்டு, மீண்டும் வாரப்பத்திரிக்கைக்குள் நுழைந்தான்.

​தன் கணவன் தனக்காக படுக்கையறையில் காத்துக்கொண்டிருப்பான் என்பதற்காக அவசர அவசரமாய்பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு, மறுநாள் காலைச்சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு, கையில் பால் டம்ளருடன் பெட்ரூமிற்குள் புகுந்தாள் சாந்தா.

​ “ஏன் சாந்தா இவ்வளவு நேரம்?” எரிச்சலுடன் கேட்டான்திருமலைசாமி.

​ “பின்னே?...வேலையெல்லாம் முடிச்சிட்டுத்தானே வரணும்?” சலிப்போடு சொன்னாள்.

​ “ஆமாம் பதிலுக்கு மட்டும் கொறைச்சலில்லை!...அதுசெரி…தம்பி வெங்கடேசு வந்திட்டானா?”

​ “ம்.…வந்தாச்சு...சாப்பிட்டாச்சு...வழக்கம் போல் பாயையும்தலையணையையும் எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்குப்போயாச்சு” என்றாள் சாந்தா.

​ “ஆமாம்…உன் கிட்டே ஒண்ணு கேட்கணும்னுநெனச்ச்சிட்டிருந்தேன்…நேத்திக்கு தரகர் வந்து பொண்ணைப்பத்திச் சொன்னப்ப நீ சரியாவே பிடி குடுத்துப்பேசலையாமே?....பாவம் அந்த தரகர்…என் கிட்ட வந்து சொல்லிரொம்ப வருத்தப்பட்டார்!...ஏன் சாந்தா?...ஏன் அப்படிநடந்துக்கிட்டே?” சட்டென்று சீரியஸானான் திருமலைசாமி.

​ “ம்ம்…உண்மையான காரணத்தை நான்சொல்றேன்!...ஆனா நீங்க என்னைத் தப்பா நெனைச்சிடக்கூடாது” பீடிகை போட்டாள் சாந்தா.
Also read :தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories
​ “அட சொல்லு சாந்தா…என்னைப் பொறுத்த வரை நீசொல்றது என்னிக்குமே சரியாய்த்தான் இருக்கும்”
​கணவனின் அந்த சான்றுரையைக் கேட்ட்தும் குளிர்ந்துபோன சாந்தா மெதுவாக அவனை நெருங்கி, உரசியபடி, கட்டிலில் அமர்ந்தாள்.

​அந்த உரசலில் சூடாகிப் போனான் திருமலைசாமி,
​ “அதாவது…நாம சீக்கிரமே உங்க தம்பிக்கு கல்யாணம்பண்ணி வெச்சோம்ன்னா…வர்றவ அவனை உடனேகிளப்பிக்கிட்டு…தனிக் குடித்தனம் போயிடுவா”

​ “அது இயல்புதானே?...அதிலென்ன தப்பு?” சாதாரணமாய்ச்சொன்னான் திருமலைசாமி.

​ “என்ன தப்பா?...அவங்க அப்படிப் போயிட்டா அவனோடசம்பளம் மொத்தமும் அங்கே…அவ கைக்குப்போயிடுமல்ல?...ஞாபகம் வெச்சுக்கங்க…உங்க தம்பி வேலைபார்க்கறது ஐ.டி.கம்பெனில…அவன் வாங்கறது உங்க சம்பளம்மாதிரி மூணு மடங்கு” சாந்தா முகம் கொஞ்சம் கொஞ்சமாய்தந்திரமுகியாய் மாற ஆரம்பித்தது.

​அவள் தன் சம்பார்த்தனையைக் குறைத்து கூறி விட்ட்தால்மனம் நொந்து போன திருமலைசாமி, “அதுக்கென்னடி இப்போ?” எரிந்து விழுந்தான்.

​ “இங்க பாருங்க!...நான் சொல்றதை கொஞ்சம் நல்லாக்கேட்டுக்கங்க!...நமக்கு இருக்கறது ரெண்டும்பொட்டைப்புள்ளைக!....அதுக நாளைக்கே “திடு…திப்”ன்னுவயசுக்கு வந்து கலியாணத்துக்கு நின்னா நாம எங்க போறதுகாசுக்கு?...நீங்க சம்பாதிக்கறதை வெச்சு அதுகளுக்குகலியாணம் பண்றதுன்னா…ரெண்டும் கெழவி ஆனதுக்குப்பின்னாடிதான் நடக்கும்!”
​ திருமலைசாமி குறுக்கீடு இல்லாமல் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருக்க சாந்தா தொடர்ந்தாள்.

“அதான்…இன்னும்நாலஞ்சு வருஷம் உங்க தம்பி கலியாணத்தைத் தள்ளிப்போடுவோம்!...இப்ப அவன் தன்னோட சம்பளத்தை அப்படியேகொண்டாந்து என் கிட்டேதான் கொடுக்கறான்!...அதுல நான்சீட்டுப் போட்டிருக்கேன்!...நாலு வருஷத்துல பெரிய தொகைநம்ம கைக்கு வந்திடும்!...அதுல முக்கால்வாசியை எடுத்து நம்மபொண்ணுக கலியாணத்துக்குன்னு போட்டு வெச்சிட்டு.,…மீதியிருக்கற கால்வாசில உங்க தம்பிக்கு சிம்பிளா ஒருகலியாணத்தைப் பண்ணி வெச்சிடுவோம்” தன் வஞ்சகஎண்ணத்தைச் சொல்லி முடித்தாள் சாந்தா.

​ “வேண்டாம்டி!...இப்பவே அவனுக்கு முப்பத்தி ரெண்டுஆயிடுச்சு!....இன்னும் நாலஞ்சு வருஷம்ன்னா ஊர்ல உலகத்துலநாலு பேரு என்ன பேசுவாங்க?...அண்ணன்காரன் தம்பியைக்கண்டுக்காம விட்டுட்டான்னு என்னையல்ல கேவலமாபேசுவாங்க?” தன் அச்சத்தைச் சொன்னான் திருமலைசாமி.

​ “அய்யோ…நீங்க கொஞ்சம் பேசாமஇருக்கீங்களா?...அதான்….“அஞ்சு வருஷம் கழிச்சுப்பண்ணிடலாம்!”னு சொல்றேனில்ல?”

​ “ஏய்…அவனும் மனுஷன்தானே?...அவனுக்கும் உணர்ச்சிகள்இருக்குமல்ல?...எத்தனை நாளைக்குத்தான் ஒரு ஆம்பளைஉணர்ச்சிகளை அடக்கிட்டு இருக்க முடியும்?”

​ “கடவுளே!...”என்று மேலே பார்த்துச் சொன்ன சாந்தா, “இங்க பாருங்க…உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…அதனாலநீங்க உங்க வேலையைப் பார்த்திட்டு சும்மா கிடங்க!...உங்கதம்பி கலியாணம்…என் வேலை!...அதை நான் பார்த்துக்கறேன்!” என்று சொல்லியபடி படுத்திருந்த கணவன் நெஞ்சின் மேல் தன்தலையை வைத்துக் கொண்டாள்.  அவளின் அந்த நெருக்கம்தந்த கிறக்கத்தில் தன் தம்பியையும், அவன் எதிர்காலத்தையும்மறந்தே போனான் திருமலைசாமி.

​ “பொண்ணுக ரெண்டும் தூங்கியாச்சா சாந்தா?” அவள்காதருகே தன் வாயைக் கொண்டு சென்று, கிசுகிசுப்பாய்க்கேட்டான்.
​ “உம்…ரெண்டும் ஹால்ல படுத்துத் தூங்குதுக” என்றாள்அவனை வரவேற்கும் குரலில்.

“அண்ணி…அண்ணி” என்று அழைத்தவாறே வீட்டிற்குள்நுழைந்த வெங்கடேஷ், எதிரில் வந்த அண்ணியிடம் கவரைநீட்டினான்.  “இந்தாங்க அண்ணி…இந்த மாத சம்பளம்”

வாங்கிக் கொண்ட சாந்தா, “தம்பீ…வீட்டுல செலவு வர வரரொம்ப அதிகமாயிட்டே போகுது தம்பி!...உங்க ரெண்டு பேரோடசம்பளமும் முழுக்க முழுக்க செலவாயிடுது தம்பி…ஒருஅஞ்சோ…பத்தோ…சேமிக்கலாம்!னு நெனச்சா முடியவேமாட்டேங்குது தம்பி” என்றாள் போலி வருத்தத்துடன்.
“சேமிப்பைப் பத்தியெல்லாம் பிற்பாடு யோசிக்கலாம்...நீங்கதாராளமா இருப்பதை செலவு பண்ணுங்க அண்ணி” சாதாரணமாய்ச் சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டான் வெங்கடேஷ்.

ஒரு மாதத்திற்குப் பின்,
“ஆனாலும் இது ரொம்ப அநியாயம் சாந்தா!....தம்பியேஅந்தப் பெண்ணைப் பிடிக்குது!ன்னு சொன்ன பிறகும்…நீ ஏன்அந்தப் பெண்ணை வேண்டாம்!னு சொல்றே?” லேசானகோபத்தோடு கேட்டான் திருமலைசாமி.

“ம்ம்….எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கலை…அவ்வளவுதான்” சற்றும் தயங்காமல் சொல்லி விட்டு, அங்கிருந்தநகர முற்பட்டவளின் தோளைப் பற்றித் திருப்பினான்திருமலைசாமி.

“இல்லை சாந்தா…இனிமேலும் நான் பொறுக்கமாட்டேன்…இந்தக் கலியாணத்தை நான் உடனே நடத்தப்போறேன்!...நடத்திக் காட்டப் போறேன்” சவால் விடுவது போலச்சொன்னான்.

இதுநாள் வரையில் தன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதகணவன் இன்று சவால் விடும் அளவிற்கு மாறி விட்டதைக் கண்டுஉள்ளுக்குள் அச்சமுற்ற சாந்தா, தனது இறுதி அஸ்திரத்தைஎடுத்து வீசினாள்.
அதிர்ந்து போனான் திருமலைசாமி. “ஏண்டி…இப்படியெல்லாம் பேசறே?...இப்ப நான் என்னசொல்லிட்டேன்?...உனக்கு அந்தப் பெண்ணைப்பிடிக்கலைன்னா வேண்டாம்!...விட்டுடலாம்…வேற பெண்ணைப்பார்த்திட்டாப் போச்சு”

தன் கோபத்தை மொத்தமாய்த் தூக்கியெறிந்து விட்டுதடாலென்று சரண்டர் ஆனான்.

“இங்க பாருங்க!...அன்னிக்கு சொன்னதைத்தான்இன்னிக்கும் சொல்றேன்…உங்க தம்பி சம்பளம் மொத்த்த்தையும்அப்படியே பேங்குல போட்டுட்டு இருக்கேன்!...எதுக்கு?...நம்மபொண்ணுக கலியாணத்துக்குத்தான்!...நல்ல தொகைசேர்ப்பதற்கு எப்படியும் இன்னும் மூணு…நாலு வருஷம் ஆகும்…அதுக்கப்புறம் பார்க்கலாம்” மிகவும் எளிதாய்ச் சொன்னாள்சாந்தா.

“அடிப்பாவி…மூணு நாலு வருஷம்ங்கறது ரொம்ப தூரம்டி”
அவள் பதிலேதும் பேசாமல் கடுமையான முறைப்பைக்காட்ட, தலையில் கையை வைத்துக் கொண்டு  அமர்ந்தான்திருமலைசாமி.
அவர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை, எதையோ எடுப்பதற்காக அந்த அறைக்கு வந்த வெங்கடேஷ்கதவருகே வரும் போதே கேட்டு விட,
உறைந்து போனான்.  “கடவுளே!...அண்ணியா இப்படி?...என்அம்மாவிற்குப் பிறகு இந்த அண்ணியைத்தானே அம்மாவாய்நெனைச்சிட்டிருந்தேன்!...ச்சே….கேவலம் என் சம்பளம்தான்அவங்களோட குறியா?...அவங்க என் மேல் காட்டற பாசமும்பரிவும் பணத்துக்காகத்தானா?...அப்ப…இந்த உலகத்துலஎல்லோருமே சுயநலவாதிகள்தானே?” தன் உடலின் மொத்தசக்தியும் வெளியேறியது போல் தளர்ந்து போனான்.  
தான் அங்கே வந்த சுவடே தெரியாமல் திரும்பினான் கனத்தஇதயத்தோடு.

மறு நாள், அலுவலக வேலையில் மூழ்கியிருந்த போதும், அவ்வப்போது அண்ணியின் வார்த்தைகள் ஞாபகத்தில் வந்துவந்து போக, நொந்து போன மனத்துடன் யாரிடமும் இயல்பாகப்பேசாமல் இறுக்க முகத்தோடு இருந்தான் வெங்கடேஷ்.

மதிய உணவு இடைவேளையின் போது, அனைவரும் எழுந்துசென்ற பின்னரும் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான்வெங்கடேஷ்.  “அண்ணி மட்டும்தான் அப்படியா?...இல்லைஅண்ணாவும் அதே போல்தானா?” நெருடலான கேள்விஉள்ளுக்குள் குடையும் போது, அவனது மொபைல் அதிர்ந்தது.

எடுத்துப் பார்த்தான்.  ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு.
“வெங்கடேஷ் சாரா?”

“ஆமாம்”

“சார்…உங்க அண்ணனுக்கு ஃபாக்டரில வேலைசெஞ்சிட்டிருக்கும் போது திடீர்னு நெஞ்சு வலி வந்திடுச்சு!...சிவாஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க!...நீங்க உடனேஅங்க போங்க சார்” தான் யார் என்றே சொல்லாமல் தகவலைமட்டும் சொல்லி விட்டு இணைப்பைக் கட் செய்தான் ஒருபுத்திசாலி.

பதட்டத்துடன் எழுந்து, மேனேஜரிடம் சொல்லிக் கொண்டுசிவா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தான்.

அங்கே அவன் கண்டது தன் அண்ணனின் உயிரற்றஉடலைத்தான்.  “அய்யோ…அண்ணா…என்னை அனாதையாவிட்டுப் போயிட்டியே?....அம்மா…அப்பா இல்லாத என்னைஅந்தக் குறையும் தெரியாத மாதிரி வளர்த்தியே?...இப்போநட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டியே?”
கதறினான்.

தன்னை வந்து கட்டிக் கொண்டு அழுத அண்ணனின் இரண்டுபெண் பிள்ளைகளையும் பார்த்து துக்கம் வெடிக்க, அதுஆஸ்பத்திரி என்று கூடப் பார்க்காமல் தரையில் உட்கார்ந்துபெண் பிள்ளை போல் உரத்த குரலில் கத்தி அழுதான்வெங்கடேஷ்.

சிறிது நேரத்திலேயே சுதாரித்துக் கொண்டு, எதிர்காலத்தைச் சந்திக்கும் மனத்திடத்தை ஏற்படுத்திக் கொண்டுஎழுந்தான்.
அண்ணனின் இறுதிச் சடங்குகளை எந்திரகதியில் செய்துமுடித்தான்.
ஆறு மாதங்கள் கடந்தும் கூட அந்தப் பெரிய இழப்பின்அதிர்வுகள் அந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் போகாமலேஇருந்தன.
மொட்டை மாடியில் தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தவெங்கடேஷ், அண்ணி காபி டிரேயுடன் வருவதைப் பார்த்ததும்பேச்சை நிறுத்திக் கொண்டான்.

காபியைக் கொடுத்து விட்டு அண்ணி தயங்கித் தயங்கி நிற்க, “என்ன அண்ணி?...என் கிட்டே ஏதாவது சொல்லணுமா?” கேட்டான்.

“தம்பி…நாளைக்கு சாயந்திரம் ஆபீஸிலிருந்து கொஞ்சம்சீக்கிரமே வந்தீங்கன்னா…தரகர் கூடப் போய் அந்தப்பொண்ணைப் பார்த்திட்டு வந்திடலாம்” சாந்தா சன்னக் குரலில்சொல்ல,
“ம்ஹும்…நாளைக்கெல்லாம் முடியாதுங்க அண்ணி…ஆபீஸ்ல ஆடிட் போயிட்டிருக்கு…நகர முடியாத சூழ்நிலை” என்றான் வெங்கடேஷ்.
அவள் சங்கடமாய்த் தலையைத் தூக்கி அவனைப் பார்க்க, “இன்னொரு நாளைக்கு போகலாம் அண்ணி…நானேசொல்றேன்”
அவன் கறாராய்ச் சொல்ல, அமைதியாய் மொட்டை மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினாள் சாந்தா.  

“ஆபீஸ்ல ஆடிட் நடக்குது”ன்னு ஏண்டா வெங்கடேஷ் பொய்சொன்னே?...” நண்பன் கேட்க
“அந்த பொண்ணு பார்க்கற நிகழ்ச்சியை அவாய்ட்பண்ணத்தான்”
“அவங்க கடமையைச் செய்ய விடாம ஏண்டா அழிச்சாட்டியம்பண்றே?...ஒழுங்கா மரியாதையா நாளைக்கு அவங்க கூடப்போயி அந்தப் பொண்ணைப் பார்த்திட்டு வா” நண்பன்செல்லமாய் அதட்டினான்.

மெலிதாய்ச் சிரித்த வெங்கடேஷ், “டேய்…நான் என்மனசுக்குள்ளார தீர்மானமா ஒரு முடிவு பண்ணிவெச்சிருக்கேன்…அதாவது வாழ்க்கைல கல்யாணமேபண்ணிக்கப் போறதில்லை!ங்கற முடிவு” என்றான்.

படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்த சாந்தாவின்காதுகளில் அது விழ, நின்று கூர்ந்து கவனித்தாள்.

“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா…என்அண்ணனோட ரெண்டு பெண் பிள்ளைகளுக்கும் யாருடாஆதரவு?...அதுகளுக்கு என்னை விட்டா யார்இருக்காங்க?...நாளைக்கு அதுக பெருசாகி…வயசுக்கு வந்து…கல்யாணத்துக்கு நின்னா….முன்னாடி நின்னு செய்யறதுக்குயாருடா இருக்காங்க?...என்னோட அண்ணி பாவம்டா…படிக்காதவங்க…உலகம் புரியாதவங்க….அவங்களால வெளியபோயி காசு பணமெல்லாம் சம்பாதிக்க முடியாது!...ஆகஎன்னோட வருமானம்தான் இனி இந்தக் குடும்பத்துக்கான ஒரேவருமானம்!...அண்ணி சொல்றாங்க என்பதற்காக நானும்கல்யாணம் பண்ணிக்கிட்டா…வரப் போறவ என்னோட சம்பளம்மொத்தத்தையும் அவளே உரிமை கொண்டாடஆரம்பிச்சிட்டாள்ன்னா…அண்ணி எங்க போவாங்க?...”உருக்கமாய்ச் சொன்னான் வெங்கடேஷ்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் சாந்தா.

“சரிடா…அதுக்காக நீ ஏண்டா கல்யாணம் பண்ணிக்காமஉன்னோட வாழ்க்கையைக் கெடுத்துக்கறே?” நண்பன்கேட்டான்.

“அண்ணன் பொண்ணுக ரெண்டையும் வளர்த்து, கல்யாணம்பண்ணிக் கொடுத்து…அதுகளுக்கு நல்ல வாழ்க்கையைஅமைச்சுக் கொடுக்கறதுதான் இனிமே என்னோட வாழ்க்கையின்குறிக்கோளே”
ஆணித்தரமாய்ச் சொன்னான் வெங்கடேஷ்.

“டேய்…இதெல்லாம் பேச்சுக்கு நல்லா இருக்கும்டா…ஆனாநடைமுறைக்கு சாத்தியப்படாதுடா”
“கண்ணா…தவிர்க்க முடியாமல் சில இழப்புகள், வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள், நம்ப முடியாமல் சிலதுன்பங்கள், அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள், இத்தனையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை!...அதனால “அப்படி வாழமுடியுமா?..ன்னு யோசிக்கறதை விட…அப்படித்தான் வாழ்ந்துஆகணும்!ன்னு முடிவெடுத்திட்டா சாத்தியப்படாததெல்லாம்சாத்தியப்பட்டுவிடும்”
அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாந்தா பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டு வேகமாகப் படியிறங்கி, பூஜையறைக்குச் சென்று சாமி படங்களுக்கு முன் அழுகையைவெடித்தாள்.

அவள் கண்களுக்கு அங்கிருந்த சாமி படங்கள்அனைத்திலும் வெங்கடேஷின் முகமே தெரிந்தது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.