சிலர் ராஜவம்சத்திலே பிறந்து ராஜவம்சத்திலே வாழ்க்கைப்பட்டு ராஜக்குமாரர்களையே பெற்றெடுத்தாலும் அவர்கள் வாழ்க்கை ஒருபோதும் சுகமாய் இருந்ததில்லை. நமக்கு சரியெனப்படுவது அடுத்தவருக்கு தப்பாக படும். நாம் கொண்டாடும் ஒரு விசயம் இன்னொருவருக்கு அருவருப்பாய் தெரியும்.
என்னதான் வீரதீர பராக்கிரமாசாலிகளை பெற்றெடுத்திருந்தாலும் கணவனல்லாமல் மற்றவருக்கு குழந்தை பெற்றவள், அதிலும் ஒருபிள்ளையை கல்யாணத்துக்கு முந்தியே பெற்று அதை ஆற்றில் விட்ட கல்மனசுக்காரின்னு குந்தி தேவியை ஏளனத்தோடு கடந்து செல்வோர் பல உண்டு... காரணமில்லாமல் காரியமில்லை.. புராணங்களுக்கு மட்டுமில்லை.
நம்ம வாழ்க்கைக்கும் பொருந்தும் காரணமில்லாத ஒரு காரியத்தில் எந்த அனுபவத்தையும் நாம் பெற்றுவிட முடியாது.. ராஜமாதான்னு மதிப்பான உயரத்தில் இருந்தாலும் சராசரி பெண் அனுபவித்த விசயங்களைக்கூட குந்திதேவி அடைந்ததாய் தெரியவில்லை. இனி குந்தி தேவி பத்தி பார்க்கலாம்.
யாதவ குலத்தில் வந்த சூரசேனான்ற சிற்றரசுக்கு ராஜாவான சூரசேனாவின் மகளாக பிறந்தார்.
அங்கு அவரது பெயர் பிருதா. சூரசேனா தனது நண்பனான குந்திபோஜனுக்கு தனது மகளை தத்து கொடுத்தார். குந்திபோஜன் பிருதாவை குந்தியாக்கினார். குந்தி போஜனின் இன்னொரு மகன் கிருஷ்ணரின் தந்தை வாசுதேவன்.
பருவ வயதுக்கு வந்த குந்திதேவி அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினாலும் எதிலும் பற்றில்லாமலும், பொறுமையுடன் இருப்பதை கண்டு வளர்ப்பு பெற்றோர் பெருமை பட்டாங்க. ஒருமுறை தனது அரண்மனைக்கு வந்த துர்வாசர் முனிவருக்கு பணிவிடை செய்யும் பொறுப்பினை குந்தி தேவியிடம் ஒப்படைத்தார்.
துர்வாசர் மிகுந்த கோபக்காரர். அதனால், யாரையும் நம்பாமல் தந்தை தனக்களித்த பொறுப்பை திறம்பட குந்திதேவி செய்தார். துர்வாசர் குந்திதேவியின் சேவையில் மகிழ்ந்து, குந்தியை பாராட்டும் விதமாக மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுக்கிறார். யாரை மனதில் நினைத்து இந்த மந்திரம் சொன்னாலும் உனக்கு அவர் சாயலில் மகன் பிறப்பான் என்று சொல்லிச் செல்கிறார்.
அந்த மந்திரத்தினை சோதித்து பார்க்க மனது அடம்பிடித்தது. இது தவறுன்னு அறிவு சொன்னது. தினத்துக்கும் மனதும், புத்தியும் சண்டையிட்டு கடைசியில் மனசு வென்றது. யாரை நினைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில், வெயில் சுட்டெரிக்க இயல்புக்கு திரும்பியவருக்கு திடீரென்று ஒரு எண்ணம், வானத்தில் மேலே நின்று கொண்டிருந்த சூரியனைப் பார்த்து முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உச்சரித்துவிட்டார். குந்திதேவியே! எதிர்பாராதது நடந்தது. சூரிய அம்சத்துடன் கர்ணன் பிறந்தான்.
பெண்புத்தியாச்சே! பட்டபின் புத்தி வந்தது விளைவினை நினைத்து அழுதாள். ஊரார் என்ன பேசுவர்?! திருமணத்திற்கு முன்னால் பிறந்த இந்த குழந்தையை என்ன செய்ய? மந்திரம் சொன்னதால் குழந்தை பிறந்தது என சொன்னால் யாராவது நம்புவார்களா? என பலவாறாய் குழம்பினாள் குந்தி, பிறகு ஊரார் அவச்சொல்லுக்கு பயந்து கர்ணனை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டாள்..
பிறகு, அதுப்போன்றதொரு தவறு மீண்டும் நிகழாதவாறு கண்ணியம் காத்தாள். குந்திபோஜன் குந்திக்கு திருமண வயது வந்ததை எண்ணி சுயவரம் நடத்த, அதில் குந்தி தேவி பாண்டுவை கணவனாக தேர்ந்தெடுத்து மணந்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றாள். அதன்பிறகு, மாத்ரி என்ற இன்னொரு பெண்ணை பாண்டு திருமணம் செய்து கொள்ள, அவளை தனது சகோதரியாகவே பாவித்து அவளை ஏற்றுக்கொள்கிறாள். ஒருமுறை பாண்டு வேட்டைக்குச் சென்றபோது, இரைக்கு வைத்து எய்த அம்பு, குறிதவறி, மனைவியோடு உடலுறவில் இருந்த கிண்டாமான்ற முனிவர்மீது பட்டது. புணர்தலில் ஈடுப்பட்டிருந்த கிண்டாமா என்ற முனிவரை தாக்குகிறது.
முனிவர், இறக்கும் நிலையில் மனைவியுடன் உறவு கொண்டால் உனக்கு மரணம் நிகழும் என பாண்டுவிற்கு சாபமிட்டு இறந்துவிடுகிறார் . இதனால் வருந்திய பாண்டு தனக்கு வாரிசு கிடைக்காது என எண்ணிய பாண்டு, அதனால், ராஜ்ஜிய பொறுப்பு வேண்டாம் எனச்சொல்லி நாட்டை விட்டே வெளியேறுகிறார். உடன் குந்தியும் மாத்ரியும் காட்டிற்கு சென்றாகள்.
மனைவிகளுடன் உடலுறவு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தான் பாண்டு. உடலுறவு கொள்ளாததற்கு காரணம் கேட்க, முனிவர் கொடுத்த சாபத்தினை மனைவிகளிடம் சொல்லி தனக்கு வாரிசு இருக்காது என வேதனைப்படுகிறார் பாண்டு. தனக்கு வாரிசு இல்லைன்ற கணவரின் கவலையை போக்க எண்ணிய குந்தி தேவி, துர்வாச முனிவர் தனக்கு அளித்த மந்திரத்தை பத்தி சொல்ல, அதைக்கேட்டு மகிழ்ந்த பாண்டு, வாரிசை பெறும்படி கேட்கிறார்.
உடன் எமதர்மனை நினைத்து தருமரையும்,, வாயுவை நினைத்து பீமனையும் இந்திரனை நினைத்து அர்ஜுனையும் பெற்றெடுக்கிறாள். தனக்கு அளித்த மந்திரத்தை மார்தியுடன் பகிர அவரும் நகுலன் சகாதேவன் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார். ஒரு கட்டத்தில் முனிவரின் சாபத்தை மறந்து பாண்டு மார்டியுடன் உறவு கொள்ள, பாண்டு இறக்கிறார். பாண்டுவோடு மார்தியும் உடன்கட்டை ஏறுகிறாள். ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்திதேவிக்கு வந்தது.
பாண்டவர்களை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு வந்தாள் குந்தி. அங்கு, யார் அரசர் என்ற போட்டி ஏற்பட்டது. ஒரு பக்கம் துரியோதனனும் இன்னொரு பக்கம் தருமரும், அடுத்த அரசர் பதவிக்கு போட்டியிட்டார்கள். திருதிராஸ்டிரர் தருமரை அரசனாக பதவியேற்கும்படி அழைக்க துரியோதனன் கோபம் கொள்கிறான். இங்கிருந்து மகாபாரத கதை சூடு பிடிக்கிறது..... இதன் பிறகே தன் மாமா சகுனியுடன் இணைந்து காயை நகர்த்த துவங்குகிறான் துரியோதனன்...
துரியோதனனால் பல துன்பத்திற்கு குந்திதேவியும், அவளது பிள்ளைகளும் ஆளாகின்றனர்.
மௌனம் கலகத்தை அகற்றும்ன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது. எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டாள் குந்திதேவி. ஒருமுறை பிள்ளைகளோடு தங்கியிருந்த அரக்கு மாளிகைக்கு துரியோதனன் தீயிட, அங்கிருந்து பிள்ளைகளோடு தப்பித்த குந்தி, 'ஏகசக்ரா' எனும் நகரில் வசிக்கலானாள். அங்கு வாழ்ந்த மக்கள், பகாசுரன் எனும் அசுரனது கொடுமைகளால் அவதிப்பட்டு வந்தனர். மகாத்மாக்கள் தங்களது துயரத்தை மறந்து, மற்றவர்களது துயரை துடைப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும். குந்தியும் அப்படித்தான்! தனக்கு தஞ்சம் கொடுத்த ஊராரை காப்பாற்ற தன் மகன் பீமனை பலிகொடுக்க துணிந்து பகாசுரனின் பசிக்கு அனுப்பினாள். ஆனால், விதி பீமன் பகாசுரனை வதம் செய்ய வைத்தது.
அர்ஜுனன் திரௌபதியை கொண்டுவந்து பிட்சை என்றபோது, ஐவரும் பகிர்ந்துக்கொள்ள சொல்லிவிட்டு, தான் பங்கிட சொன்னது ஒரு பெண்ணை என நினைத்து வருந்தி கொடுத்த வாக்கை திரும்ப பெறமுடியாத சூழலில் தவித்தாள். பின்னர், துர்வாசர், திரௌபதியின் பூர்வஜென்ம கதையினை சொல்லி, அவள் ஈசனிடம் வாங்கிய 5 மணக்க வேண்டும் என வாங்கிய வரத்தினை எடுத்து சொல்ல மனம் அமைதியானாள்.
சூதாட்டம், மருமகளின் துகிலுரிப்பை கேள்விப்பட்டு துடிதுடித்தாள், மகன்களுடன், வனவாசம் செல்ல கிளம்பியபோது, அவளின் முதுமையை எடுத்துச்சொல்லி அரண்மனையிலேயே இருக்க வைத்தனர் பாண்டவர்கள். ஆனாலும் கிருஷ்ணர் மூலமாய் தருமத்தின் படி நடக்கச்சொல்லி தருமருக்கு அடிக்கடி சொல்லி அனுப்பினாள்.
குருசேத்ர போரின்போது, தன்னால் கைவிடப்பட்ட குழந்தையான கர்ணன் கௌரவர்களுக்கு ஆதரவாகவும், பாண்டவர்களுக்கு எதிராகவும் களத்தில் நிற்க, அதனால் அவனை சந்திக்க செல்கிறாள் குந்திதேவி. உன்னை பெற்றெடுத்த தாய் நான்தான் எனக்கூறி, பாண்டவர்கள் பக்கம் வந்து விடுமாறு கர்ணனை அழைக்கிறார் குந்தி. என்னதான் நீங்கள் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் என்னை வேண்டாமென்று ஆற்றில் விட்டுவிட்டீர்கள்.
பல இடத்தில் கூனிக்குறுகி நின்றபோது என்னை ஆதரித்து சிறு ராஜ்ஜியத்திற்கு அரசனாக்கி எனக்கு மதிப்பளித்தவன் துரியோதனன். அதனால், துணையாகவே நான் நிற்க விரும்புகிறேன் என சொல்லி அவளுடன் வரமறுக்க, தான் பெற்றெடுத்த பிள்ளைகளே எதிரெதிர் பக்கமாக நின்று போரிடுகிறார்களே என மனம் வருந்தினாள். தாயின் வருத்தத்தைக் கண்டு நெகிழ்ந்த கர்ணன், குந்திக்கு, அத்தனை பேருடனும் போரிட மாட்டேன். அர்ஜூனன் தான் என் இலக்கு, போர் முடியும்போது உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். போரில் ஐவரில் அர்ஜூனன் அல்லது கர்ணன் யாராவது ஒருவர் இறப்பர், இருப்பர் என சத்தியம் செய்ய, குந்தி ஏற்றுக்கொள்கிறாள். உச்சக்கட்டத்தில் குருச்சேத்திர போர் நடந்து கொண்டிருக்க அர்ஜுனனின் வில் தாக்கி கர்ணன் உயிரிழக்கிறார். பாண்டவர்கள் போரில் ஜெயிக்க ஹஸ்தினாபுரத்தின் அரசனாக தருமர் பதவி ஏற்கிறார். குந்திதேவி ராஜமாதாவானாள்.
தன்னுடைய நூறு மகன்களையும் குருச்சேத்திர போரில் பறிகொடுத்துவிட்டிருந்த திருதிராஸ்டிரர் காந்தாரியுடன், நாட்டை துறந்து காட்டில் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புகிறார். அவர்களுடன் செல்ல குந்திதேவி ஆயத்தமாகினாள். அவளைத் தடுத்து தங்களுடன் இருக்கச் சொல்லிய பிள்ளைகளிடம், தங்களது முடிவு இதுவானால்... எங்களை எதற்காக போரில் ஈடுபடத் தூண்டினீர்கள்? இப்படியொரு பேரழிவை நிகழ்த்தாமல் இருந்திருக்கலாமே?
இத்தனை சிரமங்களும் எதற்காக?! உயிரினும் மேலான உங்களைப் பிரிவதற்காகவா?'' என்று பீமன் கோபங்கொள்ள, நீங்கள் சத்திரிய தர்மத்தில் ஊன்றி இருக்கவும். அறத்தை நிலைநாட்டி நல்லாட்சியை அமைப்பதற்காகவும்தான் இத்தனை சிரமங்களும். எனக்கு அரச போகங்களில் பற்று இல்லை. தவத்தில் ஆழ்ந்து கணவனுடன் இணைய விரும்புகிறேன்’ என்று கூறி, காட்டிற்கு கிளம்பினாள். அங்கு, சில வருடங்கள் தவ வாழ்க்கை மேற்கொண்டவர்கள், திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் மூவரும் உயிர் துறக்கினறனர்.
அரச குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்ந்தாலும் துளியும் அவற்றில் பற்றில்லாமல் வாழவும், அறியாமல் செய்த தவறு மீண்டும் நேராமல் வாழ்ந்த விதமும், கணவனுக்காக எதையும் செய்யும் திடமும், புகுந்த வீட்டினர் தப்பே செய்தாலும் விட்டுக்கொடுக்காத மனதும், பிள்ளைகளுக்கு நன்னெறி ஊட்டி வளர்க்கும் கடமையையும் குந்திதேவியை பார்த்து எல்லோரும் கத்துக்கனும்.இல்லறத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஆசையையும் அகங்காரத்தையும் விலக்கி வாழ்வில் நலம் பெற, இன்றைய பெண்களுக்கு குந்திதேவியின் கதை ஒரு பாடம்தான்.