தினம் தினம் பலரை பெருந்தொற்று காவு வாங்குவது நடந்துகொண்டுதானிருக்கிறது.. முகநூலில் யார்படத்தையாவது பார்த்தாலே அடிவயிறு கலங்குகிறது... அது பிறந்தநாள் வாழ்த்தாக இருக்கவேண்டும் என மனம் வேண்டிக்கொள்கிறது... பல அப்படியே இருப்பதில் மகிழ்ந்தாலும் சில நம்மை உலுக்கிவிடுகின்றது
நாள் தோறும் உறவினர்களுக்காக வேண்டிக்கொள்ளப்போடும் பதிவுகள் மனம் கசிகின்றது
புதிதாகச்சுவற்றில் எழும் இரங்கல் சுவரொட்டிகள் இதயத்தை உலுக்குகின்றன.
சென்ற வாரம் வெளியே சென்றிருந்தபோது காலை 9 மணிக்குத்தான் நான் பார்த்தசுவரொட்டியில் இருந்த படம் என்னை உலுக்கியது. அது ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் படம் . இந்த அம்மாவை எங்கோ பார்த்திருக்கின்றோமே என நினைத்தபோது
மனதின் மூலையில் ஒரு குரல் ஒலித்தது. நம்ம கீரக்காரம்மா போல் இருக்குதே... நின்று உத்துப்பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது
மனம் கலங்கிவிட்டது
நாள் தோறும் கீர முருங்கக்கா தேங்கா என காலையில் கூவித்தெருவில் வரும் அந்த அம்மாவா என்றவுடம் மனம் அழுக ஆரம்பித்துவிட்டது....
துணையிடம் கேட்டேன் உறுதிப்படுத்துவதற்காக அந்த கீரக்காரம்மாவை சமீபத்தில் பார்த்தாயா எனகேட்டேன்... எந்தக்கீரக்காரம்மா ரெண்டு மூணு பேர் வாராங்களே என்றாள்
நான் விளக்கியபின்பு சொன்னாள் ஒரு வாரமா ஆளைக்காணோம் என்றாள்...அப்போது நான் அவளிடம் சொன்னேன்... இரங்கல் சுவரொட்டி விசயத்தை.... அவள் கண்ணிலும் நீர் துளிர்த்தது இருந்தாலும் மனம் வேண்டிக்கொண்டது அவர்களாக இருக்கக்கூடாது என...
நண்பர்களிடமும் விசாரித்தேன் . அவர்களும் அதே பதில் சொன்னார்கள் காணவில்லை என என் மனம் உறுதி செய்துவிட்டது. அவருக்காக வேண்டிக்கொண்டேன்
அன்று முதல் கீர முருங்கக்கா என்று கூவும் குரல் கேட்டாலே வெளியில் சென்று அந்த அம்மாவா இருக்கக்கூடாதான்னு பார்ப்பதும் வேறு ஆட்களாக இருப்பதும் மனம் சோர்வதும் வாடிக்கையாகிப்போனது
இதை கவனித்த என் துணைவி என்ன நம்பிக்கையில் அப்படி ப்பார்க்கின்றீர்கள்.... பாவம் அவள் அவள் விதி அவ்வளவுதான் என முடித்துக்கொண்டாள். பெண்கள் எப்போதும் உடனே ரியாக்ட் செய்துவிட்டு கண்ணீரைத் துடைத்து விட்டு மறந்துவிடுகின்றார்கள்
ஆண்கள் மனதில் வைத்து புளுங்குகின்றார்கள்
என் மனம் பாவம் அவள் குடும்பம் என்ன செய்யும் பிள்ளை குட்டிகள் என்ன ஆச்சோ அவர் வீட்டில் மேலும் யார் யார் பாதிக்கப்பட்டார்களோ எனக்கவலைபட ஆரம்பித்துவிட்டது....
இதற்கு நடுவில் அனறு காலை கீர முருங்கக்கா தேங்கா எனக்குரல் கேட்டவுடன் வழக்கம்போல வெளியே வந்து பார்த்தேன்
அதே கீரக்காரம்மாதான்... என் மனம் இறைவனுக்கு நன்றி சொல்லியது. வீட்டிற்கு அருகே வந்தவுடன் அவரை அழைத்து விசாரித்தேன் எப்படிக்கேட்பது என்ன கேட்பது ... என்னம்மா ஒரு வாரமா ஆளைக்காணோம் என்று கேட்டேன்....அப்போதே என் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது....
அவள் கேள்வியின் அர்த்தத்தை புரிந்துகொண்டாள் போலும். அவள் சொன்னாள் ஒரு வாரமா வீட்டில் எல்லாருக்கும் பிரச்சனை நாங்க ஏழை பாழைங்க என்ன செய்வோம் கை வைத்தியம்தான் கசாயம் ஆவி பிடித்து அக்கம்பக்கத்துல இருக்குறவுக சொன்னதை கேட்டு வைத்தியம் பண்ணிக்கிட்டோம்
முடியாதபோது வருமானத்துக்கு வழியில்ல. கீரை விக்கலாமுன்னா ஒரு வேளை கொரானாவா இருந்தா நாம நம்மல நம்புற வாடிக்கையாளருக்கு பரப்பிறக்கூடாது. அவங்க பாதிக்கப்படக்கூடாதுன்னு... வியாபாரம் பண்ணல.... கடன ஒடன வாங்கி சமாளிப்போம்ன்னு இருந்துட்டோம்...
இதுக்கு நடுவில என் உறவுக்காற அம்மா ஒண்ணு கொரானாவுல தவறிடுச்சு. அது பாவம் என்னோட மொகஜாடை.... போஸ்ட்டரை பாத்துட்டு நான்னு நெனைச்சிக்கிட்டு விசாரிக்க வந்துட்டாங்க.... அப்புறம் உண்மை தெரிஞ்சி பத்திரமா இருண்ணு சொன்னாங்க....
ஆனாலும் நாங்க பொழைச்சது மறுஜென்மம் எடுத்தது மாதிரிதான் இன்னும் ஒடம்பு சரியாகல,, ஆனா கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சாம்பிள் குடுத்து நெகட்டிவ வந்து ஒரு வாரம் கழிச்சித்தான் வியாபாரத்துக்கு வாறேன் இப்பவும் அப்ப அப்ப மூச்சு வாங்குது இருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லும்போது என் கண்ணில் வழிந்த நீர் பார்த்து அந்த அம்மாவும் கண்னைத்தொட்ச்சிக்கிட்டாங்க.......
அப்போது வள்ளலாரின் ”யாவரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே......” என்ற வரிகள் நினைவுக்கு வந்தன
சரிம்மா ஒடம்பபாத்துக்கோ வழக்கம்போல கீரை முருங்கக்கா தேங்கா குடுன்னு சொன்ன வன்ன அள்ளிக்கொடுந்தாங்க அய்யா வைச்சிக்கங்க காசு வேணாம்ன்னு
அப்ப நான் சொன்னேன் 100 ரூ கொடுத்து மீதம் வேண்டாம் என
அப்ப அந்த அம்மா சொன்னாங்க காசு கெடக்கட்டும் அதை இலவசமா வாங்கக்கூடாது ஆனா உங்க நல்ல மனசுக்கு நல்லாருக்கனும் ன்னு சொன்னாங்க
அப்ப நானும் பாதிக்கப்பட்டவந்தான்னு சொல்லி அவங்களை மனசு வருத்தப்பட வைக்க விரும்பல....
அ.முத்துவிஜயன்