யங் மைண்ட் பப்ளிக்சர்ஸ் வெளியீடு. முதல் பதிப்பு 2018 மொத்த பக்கங்கள் 150 .விலை ரூபாய் 140 .
இது ஒரு கட்டுரை தொகுப்பு நூல்.
இந்நூலாசிரியர் பேராசிரியர் பி.ராஜா என்ற ராஜ்ஜா அவர்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் அண்மைக்காலமாக தமிழிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை. புத்தக விமர்சனங்கள் எழுதும் இருமொழி எழுத்தாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் நூல்கள் மொழியாக்கம் செய்து வருகிறார்.
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிகிறார். ஆங்கிலத்தில் 25 நூல்களும் தமிழில் 12 நூல்களும் எழுதியுள்ள பேராசிரியர் ராஜ்ஜா, சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் ஆங்கில செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) செயல்பட்டவர். சிறந்த மொழிபெயர்ப்புக் காலாண்டிதழான TRANSFIRE ஆங்கில இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
தமிழ் வாசகர்களிடையே சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஆகியவை பெறுகிற அளவு வரவேற்பைக் கட்டுரை நூல்கள் பெறுகின்றனவா என்கிற கேள்விக்கு உடனே அவ்வளவு எளிதாகப் பதில் கூறிவிட முடியாதுதான். ஆனால் ஒரேயடியாக இல்லையென்றும் சொல்லிவிட இயலாது. விஷயங்களைத் தேடுகின்ற மனம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் கட்டுரை நூல்களை விட்டு விடுவதில்லை; விரும்பி வாசிக்கிறார்கள் என்பதே உண்மை நிலை. பேராசிரியர் ராஜ்ஜா எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை நூலை ஒருமுறை லேசாகப் புரட்டிப் பார்ப்பவர்கள், இதன் ஆகர்ஷிப்பில் தங்களை மூழ்கடித்துக் கொள்வார்கள் என்பது உறுதி.
அடேயப்பா! என்னவொரு ஆழமான பார்வையோடு உலகளாவிய இலக்கிய விஷயங்களை அலசுகிறார். 'அள்ளி வந்து கொட்டுகிறார்' என்றுமே சொல்லலாம். அவசியமான இடங்களில் இழையோடும் எள்ளல் - ஏகடியம் - நையாண்டி கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்துகின்றன. கம்பர், திருவள்ளுவர், பாரதி, தாகூர், தமிழ்த்தாத்தா உ.வே.சா என நமது இலக்கியப் பாரம்பரியப் பெருமைகளுடன், டி.எஸ்.எலியட், சார்லஸ் டிக்கன்ஸ், கலீல் கிப்ரான் என உலகப் பெரும் இலக்கிய மாமேதைகள் பலருடைய வரலாற்றுச் செய்திகளும் இக்கட்டுரைகளில் பொதிந்து கிடக்கின்றன.
பேராசிரியர் ராஜ்ஜாவின் தன் வரலாற்று நிகழ்வுகளும், இலக்கியப் பயண அனுபவங்களும் சில கட்டுரைகளில் பதிந்துள்ளன. இலக்கியப் புதையல் எனலாம் இந்நூலை.
ராஜ்ஜா அவர்கள் ஆங்கிலப் புலமை மிக்கவர். அவர் எழுதிக் குவித்திருக்கும் ஆங்கிலப் படைப்புகள் ஏராளம். 'இந்து' நாளிதழ் போன்ற பிரபல ஆங்கில ஏடுகளில் ராஜ்ஜா எழுதிய கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்து சக எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, சமூகத்தின் மிக உயரிய நிலையில் உள்ள தலைவர்கள் கூட மனம் திறந்து பாராட்டியுள்ளனர் என்பது உண்மை. சிலர் தங்கள் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட ராஜ்ஜாவின் உதவியை நாடியதும் உண்டு.
ராஜ்ஜா அவர்கள் தாம் சுயமாகப் பல படைப்புகளை எழுதுகிற அதே ஆர்வத்தோடு, பிறர் எழுதிய நல்ல படைப்புகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்.
இந்த புத்தகத்தில் மொத்தம் 27 கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன.
1. கதைகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல
2. உயிரும் உண்டு... ஆன்மாவும் உண்டு...
3. பிரபலங்கள் என்றாலே சற்று அப்படியும் இப்படியும்தான்
4. தாகூருக்கா இந்த கதி?
5. எழுத்தாளனா நீ! ஹாலந்து செல்
6. கேட்கக்கூடாத கேள்வி... சொல்லக்கூடாத பதில்...
7. புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
8. செத்தும் பரிசளித்த மகான்
9. ஒரு கலைஞனுக்கு கிடைத்த அவமரியாதை
10. கலீல் கிப்ரானின் காதல் கதை
11. சொல்லியும் மாளாது, எழுதியும் தீராது
12. மகாத்மா, மகரிஷி, மகான்... கிளிக்...
13. எழுதியே தீர்ந்த காதல்
14. தமிழ் பேசினா அபராதம்
15. இரவு கொடுக்கும் வரமே தனி
16. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி
17. நாகரிகம்னு நெனெச்சிக்கிட்டு
18. கும்பல் கூடினால்
19. ஓரிஸ்ஸாவில் நான்கு நாட்கள்
20. சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களும், லபோதிபோ வாசகர்களும்
21. வெண்ணெய் திரளும் நேரம்
22. தேவலே கமும் கூப்பிடு தூரத்தில்தான்
23. நெத்திலியெ போட்டு வாளைய பிடி
24. இன்றைய பொழுது இனிமையாய் கழிந்தால் வருத்தம் என்பது ஏதடா!
25. எலியை விடவா நாம் தாழ்ந்து போய்விட்டோம்?
26. கம்பனின் கையெழுத்துப் பிரதி
27. எல்லாம் பய மயம்.
ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கிறது .இது படித்து பொழுது போக்குவதற்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அடுத்து வீட்டில் பாதுகாப்பு வைக்கப்பட வேண்டிய புத்தகங்கள் இதுவும் ஒன்று.