Breaking News :

Friday, July 19
.

ஹிமாச்சல பிரதேசம் பெயர் காரணம்?


கடவுள்கள் வாழும் பூமி' என்றும் 'தேவபூமி' என்றும் சிறப்பித்து போற்றப்படும் ஹிமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த எழில் கொஞ்சும் மாநிலம் கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது. இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து  வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருகிறது. அதோடு பயணிகளின் கூட்டம் பெருகப் பெருகப் அதற்கு ஏற்றார் போல ஹிமாச்சலத்தில் ஹோட்டல்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

 

#வானிலை :

 

ஹிமாச்சல பிரதேசத்தில் பொதுவாக ஆண்டுதோறும் வசந்த காலம், மழைக் காலம், பனிக் காலம் ஆகிய மூன்று பருவங்கள் காணப்படுகின்றன. இதில் வசந்த காலம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து ஏப்ரல் மத்தியில் முடிவடையும். அதேபோல அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் முடியும் பனிக் காலங்கள் ஹிமாச்சல பிரதேசத்தை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.

 

 #மொழிகள்:

 

 ஹிமாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி இருந்தாலும், 'பஹாரி' என்ற மொழியே அதிக மக்களால் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பஹாரியின் கிளை மொழிகளான மண்டியாலி, குலவி, கெஹ்லூரி, ஹிந்தூரி, சமேலி, சீர்மெளரி, மியாஹஸ்வி, பாங்வாலி போன்றவை முறையே மண்டி, குலு, பிலாஸ்பூர், நலக்ராஹ், சம்பா, சீர்மௌர், மஹாஸு, பாங்கி உள்ளிட்ட பழங்குடி மக்களால் பேசப்படுகின்றன. இவைதவிர பஹாரியின் மற்ற கிளை மொழிகளாக கருதப்படும் கின்னாரி, லாஹௌலி, ஸ்பிதியான் போன்ற மொழிகளும் இப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அதோடு ஹிமாச்சலத்தின் ஒரு சில பகுதிகளில் பஞ்சாபி, டோக்ரி, காங்க்ரி, குஜராத்தி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த பஹாரி மொழியும், அதன் கிளை மொழிகளும் முகாலய காலத்தில் பெர்சிய எழுத்துருக்களை பின்பற்றினாலும் தற்போது தேவநாகிரி எழுத்துப் பிரதிகளிலேயே எழுதப்படுகின்றன.

 

 ஹிமாச்சல பிரதேச #சுற்றுலா :

 

ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இம்மாநிலத்தின் பீர், மணாலி, பிலாஸ்பூர், ரொஹ்ரு உள்ளிட்ட பகுதிகள் பாராகிளைடிங் போன்ற வான சாகச விளையாட்டுக்களுக்காக வெகுப்பிரபலம். ஹிமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மாநிலத்தை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரித்துள்ளது. அவை சட்லெஜ் செர்க்யூட், பீஸ் செர்க்யூட் , தௌலாதர் செர்க்யூட் மற்றும் டிரைபல் செர்க்யூட் என்று அறியப்படுகின்றன. இதில் பீஸ் செர்க்யூட்டில் குலு மணாலி பள்ளத்தாக்கின் வழி பாயும் பீஸ் நதி மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதியாகும். இந்த பீஸ் செர்க்யூட்டில் தேவதாரு மரங்கள், பாறை சரிவுகள், பசும் புல்வெளிகள், வண்ண மலர்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நீங்கள் ஒரு நிமிட நேரம் அமர்ந்திருந்தாலே போதும் உங்கள் பிறவிக் கடனை அடைந்து விடுவீர்கள். அதோடு தொன்மை வாய்ந்த கலாச்சார பாரம்பரிய பின்னணியில் அழகிய மடாலயங்கள், பனிமலைகள், பனிக்கட்டிப்பாளம், உறைந்த ஏரிகள் என்று சாகசப் பிரியர்களின் விருப்பமான பகுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது டிரைபல் செர்க்யூட். தௌலாதர் செர்க்யூட் டல்ஹௌசியில் தொடங்கி பத்ரிநாத்தில் முடிகிறது. இந்த  செர்க்யூட்டை காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து தெளிவாக பார்த்து ரசிக்கலாம். மேலும் புகழ்பெற்ற சட்லெஜ் நதி பாயும் சட்லெஜ் செர்க்யூட் ஆப்பிள் தோட்டங்கள், தேவதாரு மரங்கள் சூழ்ந்திருக்க கவின் கொஞ்சும் ஷிவாலிக் மலையின் பின்னணியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஹிமாச்சல பிரதேசம் 'கடவுள்கள் வாழும் பூமி' எனும் சிறப்புப் பெயருக்கு ஏற்றார் போல் ஜ்வாலமுகி கோயில், சாமுண்டா தேவி கோயில், ப்ரஜ்ஜேஸ்வரி கோயில், பைஜிநாத், லக்ஷ்மிநாராயணன், சௌராசி உள்ளிட்ட ஏராளமான ஆலயங்களை கொண்டிருக்கிறது. இவைதவிர எண்ணற்ற குருத்வாராக்களும், கிறிஸ்ட் சர்ச் கசௌலி, கிறிஸ்ட் சர்ச் கசௌலி சிம்லா, செயின்ட் ஜான்ஸ் சர்ச் போன்ற தேவாலயங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் பௌண்டா சாஹிப், ரெவல்சார் மற்றும் மணிகரன் ஆகிய பகுதிகள் முக்கியமான சீக்கிய யாத்ரீக மையங்களாக அறியப்படுகின்றன.

 

 ஹிமாச்சல பிரதேசத்தை தேடி வரும் இயற்கை காதலர்களை வரவேற்க தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க், தி பின் வேல்லி நேஷனல் பார்க், தி ரேணுகா சரணாலயம், தி போங் அணை சரணாலயம், தி கோபால்பூர் ஜூ, குஃப்ரி போன்ற பகுதிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதோடு தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அற்புதங்களின் மீது ஆர்வமுள்ள வரலாற்றுப் பிரியர்கள் காங்க்ரா கோட்டை, ஜுப்பால அரண்மனை, நக்கர் கோட்டை, கம்ரு கோட்டை, கோண்ட்லா கோட்டை, கிறிஸ்ட் சர்ச், சேப்ஸ்லீ, தி வுட் வில்லா பேலஸ், தி சைல் பேலஸ் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம். ஹிமாச்சல பிரதேசத்தில் அரசர் காலத்து அழகிய கலை வடிவங்களை எடுத்துக்காட்டும் விதமாக எண்ணற்ற அருங்காட்சியகங்களும், கலைக் கூடங்களும் உள்ளன. அவற்றில் ஸ்டேட் மியூசியம், காங்க்ரா ஆர்ட் கேலரி, பூரி சிங் மியூசியம், ரோயரிச் ஆர்ட் கேலரி, ஷோபா சிங் ஆர்ட் கேலரி ஆகியவை முக்கியமானவை. மேலும் பிரஷார் ஏரி, கஜ்ஜார் ஏரி, ரேணுகா ஏரி, கோபிந்த்சாகர் ஏரி, தால் ஏரி, பாண்டோஹ் அணை, மணிமகேஷ் ஏரி, பிருகு ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாலைப் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.   ஹிமாச்சல பிரதேசம் சிவராத்திரி, லடர்ச்சா திருவிழா, மிஞ்சார் திருவிழா, மணிமகேஷ் திருவிழா, புலேக் திருவிழா, குலு தசரா லாவி திருவிழா, ரேணுகா மற்றும் பனிச்சறுக்கு திருவிழா ஆகியவற்றுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

 

இந்தியாவின் குளுகுளு பிரதேசங்களில் மிகமுக்கியமான குலு-மணாலியில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கு காணலாம்.

 

இந்தியாவின் வடமாநிலமான இமாச்சல் பிரதேசம் என்றாலே நமக்கு நியாபகம் வருவது சிம்லா தான். அதிலும் குலு-மணாலி என்றாலே நமக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் அளவுக்கு ஒரு பூரிப்பு வரும். எங்கு பார்த்தாலும் பசுமை படர்ந்த பள்ளத்தாக்குகள், காண்போரை உருக வைக்கும் வெண்பனிச் சிகரங்கள், மென்மையான புல்வெளிகள், ஆங்காங்கே ஏரிகள் என ஒரு சிறிய சொர்க்கமாகவே தோன்றும். இந்த கோடைக்காலத்தில் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும், தேனிலவுக்கான புதுமணத் தம்பதியினரின் கனவு இடங்களில் ஒன்றாகவும் திகழ்வது குலு-மணாலி தான். இந்தியாவின்  குளுகுளு பிரதேசங்களில் மிகமுக்கியமான குலு-மணாலியில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கு காணலாம்.

 

சிம்லாவில் இரண்டு முக்கிய இடங்களான குலு, மணாலிக்கு இடையே வெறும் 40 கிமீ தூரம் தான். இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக நிறைய இடங்கள் உள்ளன.

 

‘தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி, மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏழு முக்கிய ரிஷிகள் வசித்த புனித பூமியாக கருதப்படும் இந்த நகரம் இந்து புராணத்தில் கூட இடம்பெற்றுள்ளதாம்.  இமாச்சல பிரதேசத்தின் முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத்தலமாக மணாலி விளங்குகிறது. இங்கு செல்லும் பயணிகள் ஹதிம்பா கோயில், சோலங் பள்ளத்தாக்கு, ரோஹ்டாக் பாஸ், ரஹலா ஃபால்ஸ் மற்றும் பியாஸ் குயின்ட் ஏரி,  கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’ போன்றவை வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், மா ஷாவரி கோயில், கிளப் ஹவுஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் என மேலும் பல இடங்கள் உள்ளன.

 

ஹதிம்பா குகைக் கோவில்:

 

16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமையான குகைக்கோயில் இது. மணாலியில் காண வேண்டிய முக்கியமான இடம் இந்த ஹதிம்பா கோவில். மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில் அப்பகுதியில் உள்ள ஆன்மிகவாதிகளுக்கு புனித தலமாகவே திகழ்கிறது. பாண்டவர்களின் துணைவியான திரௌபதியே இந்த தலத்தில் துர்கையின் வடிவமாக 'ஹதிம்பா' என்ற பெயரில் அருள் பாலிக்கிறாள். மணாலிக்கு செல்லும் நபர்கள் ஹதிம்பா அம்மனின் அருளையும் பெற இத்தலத்தை விசிட் செய்யலாம்.

 

ரஹலா ஃபால்ஸ்:

 

பூமியில் இருந்து சரியாக 8500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த  ரஹலா ஃபால்ஸ் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். மணாலி மெயின் ஏரியாவில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. 'ரோஹ்டாங் பாஸ்' செல்லும் வழியில் தான் இந்த ஃபால்ஸ் அமைந்துள்ளது. பனிக்கட்டிகள் உருகி தான் இந்த அருவியில் நீர் பாய்வதால், நீர் மிகவும் குளிச்சியாகவே இருக்கும். மணாலியின் மெயின் ஏரியாவில் இருந்து இந்த பகுதிக்கு பஸ், கார் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. எனவே இந்த இடத்திற்கு செல்வது மிகவும் சுலபமானது தான்.

 

மணாலி கொம்பா:

 

1960ல் திபெத்தியன் அகதிகளால் கட்டப்பட்டது. மணாலியில் கவரக்கூடிய இடங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.  புத்தர்களின் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம் இது. திபெத், லடாக், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இந்த தலத்திற்கு ஆன்மிகவாதிகள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள பெரிய புத்தர் சிலை, ஸ்தூபங்கள் மக்களை பெரிதும் கவர்வதாக உள்ளது.

 

சோலங் பள்ளத்தாக்கு:

 

மணாலியின் 'ஸ்னோ பாயிண்ட்' என்று அழைக்கப்படும் இப்பகுதியில் ஸ்கையிங், பாரா கிளைடிங், ட்ரெக்கிங், பாராஷூட்டிங் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம். இப்பகுதியில் குளிர்கால பனிச்சறுக்கு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா வாசிகள் வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2560 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கின் உச்சியில் ஒரு சிவன் கோவில் அமைந்துள்ளதும் இப்பகுதியின் சிறப்பு. ட்ரெக்கிங் செல்லும் பிரியர்களுக்கு இது பெஸ்ட் பிளேஸ் என்றே சொல்லலாம். இந்த பள்ளத்தாக்கில் இருந்து பார்த்தால் அனைத்து பனிப்பாறைகளும் வெண் படலங்கள் போல் அழகாக காட்சியளிக்கும்.

 

பியாஸ் குயின்ட்:

 

பஞ்ச சீல நதிகளில் ஒன்றான பியாஸ் ஆறு உருவாகும் இடமாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றில் நீராடினால் தோல் வியாதிகள் குணமாகும் என இந்துக்கள் நம்புகின்றனர். இப்பகுதியில் மலையேற்றத்துக்கான அடித்தளமாகவும் இது திகழ்கிறது.

 

ரோஹ்டாக் பாஸ்:

 

மணாலியில் இருந்து 51கிமீ மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 3980 மீட்டர். எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் கவரக்கூடிய அழகை பெற்றுள்ளது.  ஸ்கையிங், பாரா கிளைடிங், ட்ரெக்கிங், உள்ளிட்டவற்றுக்கு ஏற்ற இடம். ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ரோஹ்டாக் பாஸ் பகுதி காஷ்மீரின் லடாக் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் இணைகிறது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். ஆனால் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 

செல்லும் வழி:

 

வட இந்தியாவின் முக்கிய நகரங்களான சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களில் இருந்து இமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC) சார்பில் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

ரயில் நிலையம்:  ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் மணாலியில் இருந்து 165 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த ரயில் நிலையம் 310 கி.மீ தூரத்தில் சண்டிகர் ரயில் நிலையம் உள்ளது. 

 

மணாலி சுற்றுலா பகுதியில் இருந்து குலு மணாலி விமான நிலையம் 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, சண்டிகர், பதான்கோட், தரம்சாலா மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.