Breaking News :

Wednesday, November 06
.

புத்தகம்: "ஏதோ மாயம் செய்கிறாய்"


ஜி ஆர் சுரேந்தர் நாத் . சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு . முதல் பதிப்பு  2018.

இது ஒரு சிறுகதை புத்தகம்.

இந்த புத்தகத்தை கையில் எடுத்து அட்டை படத்தை பார்த்த உடனேயே எனது நினைவுகள் பின்னோக்கி சென்று விட்டது .

ஆறு ஆண்டுகளுக்கு முன் டல்லாஸ் மாநகரத்தில் தமிழ்ச் சங்கத்தில் நான்கு நாள் சிறப்பு வைபோகத்தில் பல கலைஞர்கள் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள் .நாட்டுப்புற கலைஞர்கள் ஓவியர்கள் இசை வல்லுநர்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் என்று பலவிதமான அறிஞர் பெருமக்கள் வரவழைக்கப்பட்டனர் .அதில் இளையராஜாவும் ஒருவர் .

இரண்டு நாள் முழுக்க முழுக்க அவருடனே இருந்து பேசி வண்ணம் கலந்து வரைந்து மகிழ்ந்திருந்தேன் .
 
மென்மையானவர் .

குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லித் தருகின்ற இலக்கணத்தை மெல்ல மெல்ல அவர்கள் மனதிலே பதிவு செய்த விதம் என்றும் என்னால் மறக்க முடியவில்லை .

இளையராஜாவின் ஓவியங்கள் தத்ரூபமாக தத்துவமாக இருக்கும்.கிராமிய மண் மணம் கமழ இளையராஜா பெண்களை படைக்கும் திறன் அவரை போல் நான் தெரிந்து கண்டதில்லை .மிகப் பெரும் கலைஞர்கள் எல்லாம் கொரோனா கொண்டு போனது போல இவரையும் கொண்டு சென்று விட்டது கொரோனா காலன் .

எனது நினைவுகளையும்  பார்வையையும் அட்டை படத்தில் இருந்து மீட்கவே முடியவில்லை.

இந்த புத்தகத்தில் மொத்தம் பத்து முத்தான சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.

1. மோஸா
2. ஏதோ மாயம் செய்கிறாய்..
3. தீபிகா என்கின்ற பூர்ணிமா
4. மழைக்குப் பிறகும் மேகங்கள்
5. 1983: ஒரு சில்க் கதை
6. வாணி.
7. சக்திவேல்
8. கடவுளிடம் பேசுபவள்
9. ஒரு நடிகையின் மகன்
10. நானும் எழுத்தாளன்தான்.

எழுத்தாளர் ஜி,ஆர்.சுரேந்தர்நாத்தின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு 'ஏதோ மாயம் செய்கிறாய்' எப்போதும் இலக்கியத்தில் மிகவும் சவாலான வடிவம் சிறுகதை குறிப்பிட்ட பக்கங்களுக்குள் ஒரு கதாசிரியர், தான் நினைத்த உணர்வுகளை வாசகர்ளுக்கு கடத்துவது மிகவும் சிரமமான காரியம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரேந்தர்நாத் இக்காரியத்தை வெற்றிகரமாக செய்து வருகிறார்.

நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள சுரேந்தர்நாத்தின் கதைகளை தொடர்ந்து படிக்கும்போது காலப்போக்கில் அவர் எழுத்தில் அடைந்திருக்கும் முதிர்ச்சியையும், வளர்ச்சியையும் இத்தொகுப்பில் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

90களின் இளைஞர்களின் காதல் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து சித்தரித்திருக்கும் 'வாணி' சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை. பொதுவாக அழகான பெண்களையே கதாநாயகிகளாக சித்தரிக்கும் சுரேந்தர்நாத் "தீபிகா என்கின்ற பூர்ணிமா" என்ற சிறுகதையில் ஒரு அழகற்ற பெண்ணின் உணர்வுகளை சித்தரித்துள்ள விதம் மனசை உலுக்குகிறது.

கதையின் முடிவு யூகிக்ககூடியதாக இருந்தாலும் சுரேந்தர்நாத் தனது வழக்கமான, சுவாரஸ்யமான நடை மூலம் அக்கதையை விறுவிறுப்பாக கொண்டுச் சென்றுவிடுகிறார். அதே போல் இளமைக் காலத்தில் கவர்ச்சிகரமாக நடித்த ஒரு முன்னாள் நடிகையின் கதையை அந்நடிகையின் மகனுடைய கோணத்தில் சித்தரித்துள்ள விதம் தமிழ் சிறுகதைக்கு புதிது.

எத்தனை வயதானாலும் ஆண்களின் மனதில், பெண்கள் கண்ணுக்குத் தெரியாத மகத்தான மாயங்களை எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

முகமெல்லாம் சிவந்திருக்க, மொபைலில் வெட்கத்துடன், "சீ..." என்று சொல்லும் ஒரே எழுத்தில், ஒரு மகாகாவியம் எழுதுவதற்கான மாயத்தை நிகழ்த்த ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். குளிர்ந்த ஆற்று நீரில் கொலுசு காலை மேலாக வைத்துவிட்டு, "ஷ்..." என்று பற்களை லேசாக கடித்தபடி, காலை வெடுக்கென்று இழுப்பதை பார்க்கும் ஆண்களுக்குள் நிகழும் மாயத்தை பெண்கள் அறிவார்களா?

நான்கைந்து இளம்பெண்கள் சிக்னல் வெள்ளைக்கோட்டை வெடித்து சிரித்தபடி கடக்கும்போது, பச்சை எரிந்தாலும் நூறு வாகனங்களும் ஒரு இஞ்ச் கூட நகராமல் நிற்கும் மாயத்தை பெண்களால் மட்டுமே நிகழ்த்த இயலும். ஹைஹீல்ஸ் செருப்பால் உயிரே போவது போல் நம் காலை நச்சென்று மிதித்தபிறகும், "ஸாரி' என்ற ஒற்றை வார்த்தைக்கு, "பரவாயில்ல" என்று புன்னகையுடன் சொல்ல வைக்கும் மாயத்தை பெண்களைத் தவிர வேறு யாரால் செய்ய இயலும்?

பெண்கள் ஆண்களின் மனதில் செய்யும் மாயங்களே பிறகு காதலாகிறது. புன்னகையாகிறது. கண்ணீராகிறது. கவிதையாகிறது. கதையாகிறது. பின்னொரு காலத்தில் இது போன்ற சிறுகதை தொகுப்பாகிறது. இச்சிறுகதை தொகுப்பில் காதல் மட்டுமின்றி நகைச்சுவை மற்றும் பெண்களின் உள் மன உணர்வுகளை சித்தரிக்கும் கதைகளும் உள்ளன.

இவ்வாறு காதல், நகைச்சுவை, 'சக்திவேல்' ‘கடவுளுடன் பேசுபவள்' கதைகளில் வெளிப்படும் சமூக உணர்வு.... என்று இச்சிறுகதை தொகுப்பு ஒரு சுவாரஸ்யமான பல்சுவை வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது.

இந்தப் புத்தகத்தில் நான் ரசித்த சில வார்த்தை பிரயோகங்கள்,மெஸ்மரிச வார்த்தைகள் ,மாயாஜாலங்கள்.

என் முன்னாள் காதலி அர்ச்சனா, "என்னை ரொம்பப் பிடிக்குமா? உன் ஒய்ஃப் ரொம்பப் பிடிக்குமா?" என்றாள். லேசாக சிரித்த நான், "எனக்கு... ஜெயமோகனையும் பிடிக்கும். சாருநிவேதிதாவையும் பிடிக்கும்" என்று கூற அவள் குழந்தை போல் அப்பாவித்தனமாக தனது அகன்ற விழிகளை விரித்தபடி, "யாரு அவங்கள்லாம்?” என்று அழகாகக் கேட்டபோது, எனக்கு ஜெயமோகனையும், சாருநிவேதிதாவையும் விட அர்ச்சனாவை அவ்வளவு பிடித்துப்போயிற்று.

விவேக் ஒரு முறை உஷா பற்றி, "உயிருள்ள வரை உஷா அல்ல. உயிர் போன பின்பும் உஷா..." என்று கவிதை எழுதி அதை உஷாவிடமே காண்பிக்க...அவள், "யார் உயிர் போன பின்பு?" என்று கேட்க...விவேக்குக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஓடி வந்துவிட்டான். ஒரு நாள் நடுராத்திரி, தெருவில் கட்டில் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி, “சந்தியா... நீதான் என் இந்தியா" என்று கூறிய கவிதைக்காக இன்று வரையிலும் நான் அவனை மன்னிக்கவேயில்லை.

1980களின் தாவணிப் பெண்கள் கொஞ்சம் சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் படித்தவுடனேயே, தங்களை அறிவுஜீவியாக நினைத்துக்கொள்வார்கள். அப்போது அவர்களின் தலைக்குப் பின்னால் மங்கலாக ஒரு ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளிவட்டத்தின் பிரச்சனை என்னவென்றால், அது வேறு யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அவர்கள் தங்கள் ஒளி வட்டம் கண்ணுக்குத் தெரியும் ஆளைத் தேடிக்கொண்டேயிருப்பார்கள். நான் எப்போதும் அழகிய பெண்களின் ஒளிவட்டங்களை அங்கீகரிப்பவன் என்பதால், விஜி சமீபகாலமாக என்னோடு பேச ஆரம்பித்திருக்கிறாள்.

அழகிகள் தாங்கள் மேலும் அழகாகத் தோற்றமளிக்கவேண்டும் என்று நினைக்கும்போது, தங்கள் நெற்றிமுடியை மேல்நோக்கி ஒதுக்கிக்கொள்வார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.