வரலாறு தன்னுள் பல விசித்திரமான சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றைத் திரும்பிப்பார்க்கும் ஒவ்வொரு முறையும் அது நமக்கு பல்வேறு விஷயங்களைப் புதிதாகக் காட்டும். இந்த பூமியில் வாழ்ந்த மன்னர்களும் அதற்குப் பிறகு வந்த சில ஆட்சியாளர்களும் தண்டனை தருவதில் சளைத்தவர்கள் இல்லை.
தன்னுடைய எதிரிகளையும், குற்றவாளிகளையும் எப்படியெல்லாம் தீர்த்துக்கட்டலாம் எனத் தனிக்கூட்டமே போட்டு விவாதிக்கும் அளவுக்குத் தண்டனைகள் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் களியாட்டத்தையும், எதிராளிக்குக் கொடுத்த தண்டனையையும் வைத்து ஒரு தனிப் புத்தகமே எழுதலாம். அப்படி வரலாற்றில் இடம்பிடித்த சில கொடூரத் தண்டனைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
விலங்குகளைப் பயன்படுத்திக் கொல்லுதல்:
பண்டைய கால ரோமானியர்கள் கேளிக்கைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனரோ, அதே அளவுக்கு எதிரிகளைத் துன்புறுத்தி ரசிப்பதிலும் ஆர்வம் காட்டினர். இத்தண்டனையை பல திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம் தங்களிடம் உள்ள அடிமைகள் அல்லது குற்றிவாளியை மைதானத்தின் நடுவே விட்டு விடுவர். விலங்குகளிடம் அவனை மோதவிட்டு அவன் இறப்பதைப் பார்த்து ரசிப்பர். அக்காலத்தில் ரோம் நாட்டில் இது மிகப்பெரும் பொழுதுபோக்காக இருந்தது.
ஐரோப்பாவில் குதிரையைப் பயன்படுத்தியும் எதிராளியைக் கொன்றனர். பதினேழாம் நூற்றாண்டு வரை மிகப் பிரபலமாக இருந்த தண்டனை இது. குற்றவாளியின் காலில் கயிற்றினைக் கட்டி ஒரு குதிரையிடமும், கைகளைக் கயிற்றால் கட்டி மற்றொரு குதிரையிடமும் இணைத்துவிடுவர். குதிரைகளைச் சாட்டையால் அடிக்க அது வெவ்வேறு திசையில் திமிறிக் கொண்டு ஓட ஆரம்பிக்கும். சிறிது நேரத்திலேயே உடல் பிய்ந்து இறந்துவிடுவான் குற்றவாளி. இதைத் தவிர குற்றவாளியை யானை மூலம் நசுக்கிக் கொல்லுதல், விஷ ஜந்துக்களை உடலின் மேல் படரவிட்டுக் கொல்லுதல், எலிகளை விட்டுக் கடிக்கவைத்தல் ஆகிய முறைகளையும் கையாண்டு உள்ளனர்.
தோலை உரிப்பது:
நாம் கோபத்தில் மற்றவர்களைப் பார்த்து தோலை உரித்துவிடுவோம் என்போம். அதை உண்மையிலேயே செய்திருக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் இந்தத் தண்டனை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த காலத்திலிருந்தே கொடுத்து வருவதாகக் கூறுகிறார்கள். குற்றவாளியைப் படுக்க வைத்து அவன் உயிருடன் இருக்கும் போதே அவனின் தோலை உரிப்பார்கள்.
தீயிட்டு எரித்தல்:
பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டில் சூனியம் வைப்பது, மாந்திரிகம் செய்வது போன்ற செயல்கள் மிகப் பரவலாகப் பேசப்பட்டன. சூனியக்காரி அல்லது மாந்திரிகம் செய்பவன் எனச் சந்தேகப்படும் நபர்களை நிர்வாணமாக்கிக் கம்பத்தில் கட்டிவைத்து அவர்கள் உபயோகிக்கும் பொருள்களோடு தீயிட்டுக் கொளுத்துவர். சில அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கூட இவ்வாறு நடந்துள்ளது. இவ்வாறு சூனியக்காரி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு இறந்த நபர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொடும்.
பித்தளைக் காளை:
கிரேக்கத்தில் தவறு செய்த அடிமைகளையும், குற்றவாளிகளையும் பித்தளையினால் செய்யப்பட்ட காளை வடிவிலான கலனில் தள்ளிப் பூட்டி அதற்கு அடியில் தீ வைத்துவிடுவர். சூடு அதிகரிக்க அதிகரிக்க உள்ளிருக்கும் நபர் வெந்து இறந்துவிடுவான். அவன் கதறல் காளையின் வாயிலிருக்கும் துளையிலிருந்து வரும்போது காளை கத்துவது போல் இருக்குமாம்.
ஆயிரம் துண்டுகளாக வெட்டுதல்:
`லின்சி' என அழைக்கப்படும் இத்தண்டனை சீனாவில் இருந்த கொடூரத் தண்டனைகளில் ஒன்று. இதை வியட்நாமிலும் பின்பற்றியதாகக் கூறுவர். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரைக் கம்பத்தில் கட்டி ஆயிரம் முறை அவனைச் செதில் செதிலாக வெட்டிக் கொல்வர். நரக வேதனையைத் தரக்கூடிய இத்தண்டனையை சீனா 1905-ம் ஆண்டு தடைசெய்தது.
சக்கரம் மூலமாக எலும்பினை நொறுக்குதல் :
தண்டனை விதிக்கப்பட்ட நபரை ஒரு பெரிய வட்ட வடிவிலான சக்கரத்தில் அண்ணாந்து பார்த்த மாதிரி இறுக்கமாகக் கட்டிவைத்து விடுவர். சக்கரத்தைச் சுழற்றச் சுழற்றக் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரின் எலும்புகள் நொறுங்கிவிடும். கடும் வேதனைக்குப்பின் அவன் இறந்துவிடுவான். இதைச் சிறிது மாற்றி மங்கோலியர்கள் ரத்தம் சிந்தாமல் மற்றவர்களைக் கொல்வதற்கு கழுத்து எலும்பை உடைத்துக் கொன்றனர்.
இரண்டாகப் பிளத்தல்:
ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் பாலியல் தொழில் செய்பவர்கள், நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றவாளியை நிர்வாணமாக்கி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவர். பின்பு அவனைக் குறுக்குவெட்டாக இரண்டாக வெட்டிக்கொல்வர்.