Breaking News :

Tuesday, April 16
.

புத்தகம் : பாட்டுத் திணை, நாடோடி இலக்கியன், கிண்டில் பதிப்பு


இசை,நம் எப்படியான மன நிலையையும் மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது.இசைத்துறையில் திறமைவாய்ந்த பலரையும், அவர்களின் பாடல்களையும்,அதில் இருக்கும் சிறப்புகளையும் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.பாடலைக் கேட்போம்தான்,ஆனால் இதுபோலச் சின்னச்சின்ன நுணுக்கமான விஷயங்களையும் கவனித்து எழுதுவதெல்லாம் மலைக்க வைக்கிறது.இசையின் மீதான அவரின் காதலும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.அதுவும் முன்வரிசையில் புகழின் வெளிச்சத்திற்கு வராத சில கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகள் நம்மை நெகிழச் செய்கிறது.

        தமிழ் திரையிசையில் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த அறுபது,எழுபதுகளில் இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்களாக பல பாடகிகள் இருக்கிறார்கள்.
முக்கியமாக பி.சுசீலா அவர்கள்.
இந்தக் காலகட்டத்தில்தான் 
இந்தித் திரையுலகைத் தன் குரலால் ஈர்த்த வாணி ஜெயராம் அவர்களைத் தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.ஆனால் இந்தியில் பாடத்தொடங்கிய உடனேயே பல வெற்றிப் பாடல்களை கொடுத்த அவருக்கு,தாய்மொழியான தமிழில் மூன்றாவது வாய்ப்பாக அமைந்த எம்.எஸ்.வி அவர்களின் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடல்தான்
வெற்றிகரமான தொடக்கமாகிறது.
இவருக்காகவே பல சவாலான மெட்டுகளை அமைத்தாராம் எம்.எஸ்.வி.அதற்கான திறமை அவரிடம் உள்ளது என்பதை உணர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.இருவரும் சேர்ந்து பணியாற்றி இன்றுவரை பலரின் விருப்பப்பாடல்களாக,மறக்கமுடியாதபாடல்களின் பட்டியலே அதை நமக்கு உணர்த்தி விடுகிறது.அவரின் எழுத்து உச்சரிப்பு முதலாக மற்ற மொழிகளில் அவர்  பாடிய பாடல்களின் நுட்பங்களையெல்லாம் கவனித்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

        அடுத்து இயக்குனர்களே பாடலாசிரியராக இருந்து பல வெற்றிப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்.கங்கை அமரன்,
 டி.ராஜேந்தர், ஆர்.வி.உதயகுமார் போன்ற புகழ்பெற்றவர்கள் இதில்  முதல் வரிசையில் இருக்கிறார்கள்.
ஆனால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படாத இரா.ரவிஷங்கர் அவர்களும் இந்த வரிசையில் வரக்கூடியவர்தான். இவரின் "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" மறக்கவே முடியாத அழகான பாடல் வரிகளைக் கொண்டது.இவர் திரையுலகிற்குள் நுழைந்த கதையே சுவாரஸ்யமானது.
பாக்யா இதழுக்கு குதிரை என்ற சிறுகதை எழுதி அனுப்பி இருக்கிறார் இவர்.அது பாக்யராஜ் அவர்களின் பார்வையில் பட அவரின் கதை விவாதக் குழுவில் இடம்பெற இடம் கிடைக்கிறது.
அப்படித் தொடங்கிய திரைப்பயணம் உதவி இயக்குனர், இயக்குனர் பாடலாசிரியர் இப்படி நீள்கிறது.  இவரின் வெற்றி பாடல்களின் பட்டியல் நம்மை அட ..இதை எழுதியது இவரா என்று ஆச்சரியப்படுத்துகிறது.நாம் விரும்பிக் கேட்கும் பல பாடல் வரிகளின் சொந்தக்காரர் இவர்.

        பின்னணிக் குரல்,பின்னணிப் பாடகர்,நடிகர் என்று பல முகங்களைக் கொண்டவர் எஸ்.என். சுரேந்தர் அவர்கள்.மென்மையும் ஈர்ப்பும் நிறைந்த குரல் இவருக்கு.
அதுமட்டுமல்ல கதாநாயகர்களின் வெற்றிக்கு இவரின் பின்னணி குரலும் ஒரு காரணம் என்பது இவர் குரல் கொடுத்த நாயகர்களின் எண்ணிக்கையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.அதில் மிக முக்கியமானவர் நடிகர் மோகன் அவர்கள்.குரலையும் அவரின் நடிப்பையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றிப்போனது இரண்டும்.குரலும் சேர்ந்தே நடித்திருக்கிறது அவரோடு.
இதனாலேயே இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு,எஸ்.என் சுரேந்தர் அவர்களின் பேட்டிகளில் வெளிப்படும் ஆற்றாமை போன்றவற்றையும் இந்தக் கட்டுரையில் இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

        அடுத்து எண்பதுகளில் தமிழ் திரைப்பட உலகில் மறக்க இயலாத பல பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் அவர்கள்.
"ஆவாரம் பூவு ஆறேழு நாளா"என்ற மறக்கவே முடியாத பாடல் இவரின் இசைதான்.ஆனால் பலரும் அது இளையராஜா அவர்களின் இசை என்றே எண்ணியிருக்கிறார்கள்.
அந்தப்படத்தில் மட்டுமின்றி அவர் இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றதாக இருந்தாலும் இவரின் பெயர் பெரிதாக வெளியில் தெரியவில்லை.அதுமட்டுமின்றி இளையராஜா அவர்களின் உதவியாளராகப் பணியாற்றி,மறக்க முடியாத அளவு வயலின் இசையில் தன் திறமையை பறைசாற்றி இருக்கிறார்.

        அடுத்து "சின்ன சின்ன ஆசை"
பாடல்  மூலம் புகழடைந்த மின்மினி.
டிராக் பாட அழைக்கப்பட்டவர் மின்மினி.ஆனால் அவரின் குரலின் இனிமை அந்தப் பாடலை அவரையே பாட வைத்திருக்கிறது.
வெகுளித்தனம் நிறைந்த,
இசைப்பிரியர்களை மகிழ்வித்த இவர் தன் குரலை திடீரென இழந்துவிட்டதுதான் பெரிய சோகம்.அதன்பின் காணாமலே போய்விட்டார்.சமீபத்தில் பழைய குரலை அடைந்து விட்டாலும் அவருக்கான வாய்ப்புதான் பெரிதாக இல்லை.

        அடுத்து பி.ஜெயச்சந்திரன் அவர்கள்.யேசுதாஸ் அவர்களின் குரலுக்கு ஒப்பான இனிமையும்,
உணர்ச்சியும் மிகுந்தது இவரின் குரல்.இவர் பாடிய பல பாடல்களை யேசுதாஸ் அவர்களின் பாடல் என்று 
அனைவரும் குழம்பியதுதான்  இவர் பிரபலம் ஆகாததற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம் என்கிறார் ஆசிரியர்.அவரின் சிறப்பான உச்சரிப்புடன் கூடிய பல பாடல்களைக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சிறப்பானதற்குக் காரணமான நுணுக்கமான விஷயங்களையும்  ஆராய்ந்ததை வாசிக்கும் போது இனி அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது அனைத்துமே நினைவுக்கு வருமளவிற்கு மனதில் பதிந்து விடுகிறது.

        மயில் பீலியின் வருடல், வெல்வெட்டின் தொடுகை, மலையடிவாரத்தில் குளுமை இப்படி எல்லாம் ஆசிரியர் சிறப்பிப்பது பாடகி சுனந்தா அவர்களின் குரலை.
இவர் பாடிய பாடல்களின் வார்த்தைகளை எடுத்து அதில் அவர் சிறப்பாக கையாண்டிருக்கும் இசைக் குறிப்பினைக்கூட உன்னிப்பாக கவனித்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.முதல் பாடலிலேயே பெரு வெற்றி பெற்றாலும் பெரிதாக வாய்ப்புகள் வந்துவிடவில்லை அவருக்கு.காரணம் அவரின் மிக மெல்லிய குரலிலேதான்.மிக மெல்லிய மெலடி பாடல்கள் மட்டுமே இவரின் குரலுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறது.கிடைத்தது பெரும்பாலும் தாலாட்டு வகை பாடல்களும்,சோக இழையோடும் பாடல்களும்தான்.இவரை நினைத்தாலே மனதில் தோன்றும் முதல் பாடல்,"அதோ மேக ஊர்வலம்"
பாடல்தான் என்று ஆசிரியர் கூறுவதையும் மறுக்க முடியாது.
 
        அடுத்து எண்பதுகளின் இறுதியில் அறிமுகமான இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களைப் பற்றிய கட்டுரை.
இவரின் பாடலுக்காகவே வெற்றி பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.தோல்விப் படங்கள் பலவற்றின் ஆடியோ கேசட்டுகள் இவரின் இசைக்காகவே விற்பனையில் சாதனையும் படைத்திருக்கிறது.பாடல்களின் பட்டியல்,அதன் சிறப்பு அனைத்தும் அவரின் வெற்றிக்கான காரணத்தைச் சொல்லிவிடுகிறது.
அவை நாம் திரும்பத் திரும்ப கேட்ட பாடல்கள்தான்.பல விருதுகளை வென்ற இவர் மீண்டும் தமிழில் இசை அமைப்பதைக் காணக் காத்திருப்பதைச் சொல்லி முடித்திருக்கிறார். 

        அடுத்த பாடலாசிரியர் பழனிபாரதி அவர்களைப் பற்றிய கட்டுரை.இவரின் பாடல்கள்  திரைப்பாடல்களில் பொதுவாக பயன்படுத்தும்  வார்த்தைகளை மாற்றி,அன்றாடம் உபயோகிக்கும் எளிமையான வார்த்தைகளை வைத்து கவிதை போன்று பாடல்களை இயற்றும் முறை பிரபலமாகி இருக்கிறது. இவரின் சிறப்பே காலச்சூழலுக்கு ஏற்ப அன்றைய பேசு பொருள்களை பாடலுக்குள் நுழைத்து சுவாரசியப் படுத்துவதுதான்.முக்கியமாக அவரின் "மூக்குத்தியின்"இந்த வார்த்தைப் பயன்பாடு அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது என்கிறார்.பல பாடல்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.

        இதுபோல பல கலைஞர்களின்
நமக்குத் தெரியாத நிறைய தகவல்கள் ஆச்சரியப்படுத்துகிறது.
இளம் வயதில் சாதாரணமாக கேட்கத் தொடங்கிய பாடல்கள்,
பதின்மத்தில்தான் அதன் அனைத்து தரப்பையும் ஆழமாக கவனிக்கும் எண்ணத்தைத் தந்ததாகக் கூறுகிறார்.சென்ற இடங்கள் ஒவ்வொன்றிற்கும் பாடல்களே அடையாளமாக இருந்திருக்கிறது.
அன்றைய வானொலிகள் இதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.
இளையராஜா என்ற ஆளுமை அவருக்குள் வந்த தருணங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
எஸ்.பி.பி, வாலி போன்ற ஜாம்பவான்களின் நமக்குத் தெரியாத பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு.இசை நம்மை அதன் தன்மைக்கேற்ப எங்கெல்லாமோ அழைத்துச் செல்லும்.இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாடல்களும் பழைய நினைவுகளைக் கிளறிச் செல்பவையாகவே இருக்கின்றன. தினசரி நம் அனைவரின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் இசை தன் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவசியம் வாசிக்கலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.