Breaking News :

Saturday, July 19
.

ஆச்சியும்... அய்யாத்துரையும் - சிறுகதை


எப்பவும் சாயங்காலம் ஏழுமணிக்கு வார வள்ளி சாயங்காலமே வந்துருந்துச்சு....
என்னாமா சீக்கிரமே வந்துட்ட.  என்ன விசயம்ன்னு அய்யாத்தொரை கேட்டாரு 

அப்பா உன்னைய ஆச்சி கூட்டியாரச் சொல்லிச்சி. ஒடனே வருவியாம்  மெட்ராஸ்ல இருந்து ஆச்சியோட தங்கச்சிக நாளைக்கி வாராகலாம் அதுனால ஒன்னைய கையோட கூட்டியாரச்சொல்லிச்சி ஆச்சியம்மான்னு வள்ளி சொல்லிச்சி....
அய்யாத்தொரை சரி வாறேன்னு துண்ட எடுத்து தோள்ல போட்டுக்குக்கிட்டு வள்ளிகூடக்கெழம்புனாரு...

 என்ன விசயமாருக்கும் ந்னு தெரியல.... வேற எதுனாச்சும் சொன்னாகளா ஆச்சின்னு கேட்டாரு வள்ளிகிட்ட...
அதுக்கு வள்ளி சொல்லிச்சி அனேகமா ஆச்சிய நாளைக்கி மெட்ராஸ் கூட்டிட்டுபோகப்போறாங்கன்னு நெனைக்கிறேன்.. அதுக்குத்தான் ஆச்சியோட தங்கச்சிக  வாறாக போலிருக்கு.... 

ஆச்சிக்கும் முடியல...  அங்ககொண்டுபோய் பெரிய ஆஸ்பத்திரில வைச்சிப்பாக்கப் போறாக போல இருக்குன்னு சொன்னா...

 இப்பயெல்லாம் அய்யாத்தொரை அடிக்கடி போகமுடியிறதில்ல வயசும் ஆயிப்போச்சு வார சித்திரைதிருவிழா வந்தா 81 வயசு அவருக்கு  ரொம்பதூரம் நடக்க முடியல....

இதுக்குமுன்னாடின்னா அப்படியே காலாங்கரையோரமா நடந்து காலாங்கரையில குளிச்சிட்டு  தெங்காகம்மா வழியா குறுக்கால போன திருப்பரோண்டம் (திருப்பரங்குன்றம்) போய் அப்பன் முருகன கும்புட்டுட்டு  பிரசாதம் வாங்கிட்டு அப்படியே 

திருநகர் வந்தா மொதல் ஸ்டாப்புக்கிட்ட இருக்குற ஆச்சி யம்மா வீட்டுக்குப்போய்  துண்ணூரும் பிரசாதமும் கொடுத்துட்டு அவுக குடுக்குற காப்பித்தண்ணி குடிச்சிட்டு  அவுக வீட்டுல இருந்து  அவுக குடுக்குற முருங்கக்கா முருங்கக்கீரை  இல்ல மாங்கா கொய்யா  வை பைல வாங்கிகிட்டு 

 அப்படியே நடந்தா கொஞ்சதூரத்துல  பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற  அய்யிருவீட்டுக்குப்போய்  முருங்கக்கா கீரை கொடுத்தா அங்க ஒருகாப்பியும்  கொஞ்சக்காசும் கெடைக்கும்

அய்யர் வீட்டுல நெறையா மாங்காயும் கொய்யாவும் இருக்கும்... அப்படியே அவுக வீட்டுல இருக்குற தென்னைமரத்துல ஏறி தேங்கா பறிச்சிப்போட்டா  கூலியும் தேங்காவும் கெடைக்கும்  மாங்கா இல்ல கொய்யாக்காயும் துண்டுல கட்டி எடுத்துக்கிட்டு.....கெளம்புவாறு...சமயத்துல அங்க கறிவேப்பிலையும் கெடைக்கும்

அதுக்கபுறம் மத்தியானமா போற வீடுதான் இந்த ஆச்சிவீடு... அங்க அவருக்கு முழுசொதந்திரம். அவரு சொந்தக்கார வீடுமாதிரி.... 

ஆச்சி வீட்டுல ஆச்சியும் அய்யாவும்தான்.  முன்னாடியெல்லாம் ஆச்சி வீட்டுல நடக்குற சமையல் தெருவெங்கும் மணக்கும்... அங்ககொண்டுபோய் தேங்கா கறிவேப்பிலை குடுப்பாரு... குடுத்துட்டு சமையல் வாசம் ஆளைத்தூக்குது ஆச்சி ... என்ன மீன் கொழம்பா கறிகொழம்பான்னு  கொக்கியப்போடுவாரு... அய்யாத்துரை
ஆச்சி சொல்லும் எங்க சமைச்சி நாந்தேன் திங்கவேண்டியதா இருக்கு. அவருக்கு ஒத்துக்கலை பிரஸ்சரு.... 

சாப்புடமாட்டாரு ந்னு சொல்லும்... அய்யாத்தொரை  அய்யாவுக்குக்கொடுத்துவைக்கல பாவம்பாரு.. 
போனவருசம் வரைக்கும் சாப்புட்டவருதான் அன்னைக்கி விழுந்ததுல இருந்து  தொடப்பிடாதுன்னு  குடும்ப டாக்டர் சொல்லிட்டாரு... தொடுறதில்ல...

சரி அய்யாதொரை கொழம்பு  இருக்கு வாங்கிட்டுப்போறீயா வெட்டியாத்தான் போகும்ன்னு சொல்வாங்க 
அப்ப அய்யாத்தொரை சொல்வாறு ஆச்சியம்மா இந்த வாசத்தை வீடுகொண்டுபோய் சாப்புடற வரைக்கும் என்னால  தாக்குப்பிடிக்கமுடியாது  உங்க சமையல் வாசம் அப்படின்னு சொல்லுவாரு...

சரி சரி இலைய அறுத்துட்டு வா ஒருவா சாப்புட்டுட்டே போ... என்னா கொறஞ்சிறப்போகுதுன்னு  ஒக்காரவைச்சி சாப்பாடுபோட்டு கொழம்பு வருவல்  எல்லாம் குடுக்கும்...

அய்யாத்தொர அப்புடியே எச்சி ஒழுக  கண்ணூல தண்ணிவர ருசிச்சி ரசிச்சி சாப்புடுவாரு.. தாயி எம்புட்டு ருசி எம்புட்டு ருசின்னு  பாராட்டிக்கிட்டே சாப்புடுவாரு...

அதைப்பாத்து ஆச்சிக்கி ஒரு சந்தோசம்... அவரோட பாராட்டுக்காகவே அவர சாப்பிடச்சொல்லி அழகு பாக்கும் ஆச்சி 
சாப்புட்டு கையெடுத்துக்கும்புடுவாரு தாயி என்னா ஒரு ருசி ஒங்க கைபக்குவன் யாருக்கும் வராதும்பாரு... ஆச்சிக்கி சந்தோசம் மூஞ்சில தெரியும்....

இப்புடித்தான் பழக்கம் ஆச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா  அம்மா மகன் போல பாசம் ஆயிடுச்சு... கொஞ்சநாள்ல ஆச்சிக்கும் முடியல அதுக்கும் கொஞ்சவயசா என்ன 75 இருக்கும்... அப்ப அய்யாத்தொரைக் கிட்டச்சொல்லிச்சி வீட்டுவேலைக்கி நம்பகரமான பொண்ணு இருந்தா சொல்லுன்னு சொல்லிச்சி 

அப்ப வள்ளிக்கி 9 வயசு இருக்கும் துரு துருன்னு இருப்பா. அவ பள்ளி கொடத்துக் கெல்லாம் போகலை... வீட்டுலதான் கெடந்தா அவளைகொண்டுபோ ஆச்சிகிட்ட  வேலைக்கி விட்டாரு மாசச்சம்பளத்துக்கு....  

சம்பளத்துக்குன்னுதான் பேரு அவ வீட்டுல ஒருத்தி ஆயிட்டா. ஆச்சியம்மா அவளுக்கு எழுதப்படிக்க  பேங்குக்கு போய் வர  சமையல் எல்லாம் பக்கத்துல இருந்து சொல்லிக்குடுத்துச்சு.... 

ஆச்சிகூட கார்ல போகும் வள்ளி பேங்கு கோயிலு... அப்புறம் டவுன்னுக்கு சாமான் சட்டு வாங்கன்னு எப்பயும் கூடயேபோகும் 

அவளுக்கு நல்ல துணிமணிக எல்லாம் எடுத்துக்குடுத்து மக மாதிரி பாத்துக்கிச்சு இப்ப அவளுக்கு செட்டிநாடு சமையல் எல்லாம் அத்துபடி... ஆச்சியோட கைப்பக்குவம் அப்படியே வந்துருச்சு...இதுக்கு நடுவில ஒருநாள் அய்யா போய் சேந்துட்டாரு மாரடைப்புல......

ஆச்சி ரொம்ப சோகமாயிருச்சி....அப்ப யெல்லாம் ஆறுதல் வள்ளிதான்... ஆச்சிய கோயில் கொளத்துக்குக்கு கூட்டிட்டுப்போறது வீட்டபத்திரமா பாத்துகிறது எல்லாம் வள்ளிதான்.... 

அந்தசோகத்துல ஆச்சிக்கும் முடியாமப் போயிடுச்சு . படுத்துருச்சி...அப்ப  ஆச்சிய பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டா வள்ளி அப்பயெல்லாம்  ராத்திரிகூட வீட்டுக்கு வாரதில்ல பாவம் ஆச்சி தனியா இருக்கும் அவசரத்துக்கு  ஆள் இல்லன்னு சொல்லிட்டு அங்கயே தங்கிடும்....

சாயங்காலம் ஏழுமணிக்கி வீட்டுக்கு வந்துட்டு அப்பாவைப்பாத்துட்டுத்திரும்பிப்போயிடும் அதுக்கு ஒரு ஸ்கூட்டி ஆச்சி வாங்கிக் கொடுத்திருந்துச்சு அதுல தான் போக்குவரத்தெல்லாம்.....

ரெண்டுநாளா ஆச்சிக்கி ரொம்பமுடியல மெட்ராஸ்ல இருக்குற மகளுகளுக்கு தகவல் போய் அவங்க நாளைக்கி வாறாங்களாம்,,,,,

என்ன அப்பா அமைதியா வாறீங்கன்னு வள்ளி கேட்டப்பத்தான் அவருக்கு சுய நெனைவு வந்துச்சு.... 
ரெண்டுபேரும் வீட்டுக்குள்ள போனவன்ன ஆச்சி  ரெண்டுபேரையும் கூப்புட்டுச்சு பக்கத்துல....  
வள்ளியக்கூப்புட்டு பீரோவைத் தொறக்கச்சொல்லி   அதுக்குள்ள இருந்த மஞ்சப்பைய எடுக்கசொல்லிச்சி... அதை வாங்கி அதுக்குள்ள இருந்து நகைகளை எடுத்து  வள்ளி கையில குடுத்துச்சு... அது எப்புடியும் 15 பவுன் இருக்கும்... அப்புறமா பணம் 50 000 எண்ணிக்குடுத்துச்சு.....

அப்ப அய்யாதொரைக்கிட்ட சொல்லிச்சி நான் நல்லா இருந்தா வள்ளி கல்யாணத்தை நானே செலவு பண்ணி கட்டிக்குடுக்கலாமுன்னு இருந்தேன் ஆனா  முருகன்  அந்த பாக்கியத்த எனக்குக்குடுக்கல.... நாளைக்கி அனேகமா என் மகளுக மெட்ராஸ்க்கு என்னைய கொண்டுபோய்டுவாங்க.... நான் திரும்பி வருவேனா இல்லையான்றது  அந்த முருகனுக்குத்தான் தெரியும்....

அதுனால இப்பயே இதை வாங்கிக்கோங்க. இதை குடுத்ததுக்கான என் கைப்பட எழுதிய பத்திரமும் இதுல இருக்கு ஏன்னா நாளைக்கி பிரச்சனை வந்துறகூடாதுல அதுக்குத்தான்

வள்ளிய நான் சொந்த மகளாத்தான் நெனைச்சிருந்தேன்.... என் மகளுக கூட செய்யமுடியாத  வேலையெல்லாம் அவ எனக்காகச்செஞ்சா.... 

அவளைப்பிரியிறதுதான் மனசுக்கு ரொம்பக்கஸ்டமா இருக்குன்னு சொல்லும்போது ஆச்சி கண்ணுல  தண்ணி ஊத்த ஆரம்பிச்சது

அப்ப வள்ளியும் அப்படிசொல்லாதீங்கம்மா நான் வேணா உங்ககூட வந்து பாத்துக்கிறேன் கவலைப்படாதீங்கன்னு  அழுதுகிட்டே சொல்லிச்சி....

ஆச்சி அப்ப சொல்லிச்சி வேணாம்மா ....அங்க ஆஸ்பத்திரிதான் எல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க.....நீ இனிமே உங்க அப்பாவைப்பாத்துக்கோ அவருக்கும் வயசாயிடுச்சில்ல....  நான் கத்துக்கொடுத்த சமையல் உனக்கு கைகொடுக்கும்.....ன்னு கண்ணீரோட சொல்லிச்சி...

அப்ப அய்யாதொர சொன்னாரு தாயி உங்களை பெத்த தாயாகத்தான் நான் நெனைக்கிறேன்.... நீங்க செஞ்ச ஒதவிகளுக்கு நான் எப்புடி கைமாறு செய்யபோறேன்னு தெரியல ந்னு  கண்ணீர் விட்டாரு.....

மறுநாள் அவங்க சொன்னமாதிரியே அவங்க மகளுக  ஆம்புலன்ஸ் ஏற்பாடு செஞ்சி  மெட்ராஸ்க்கு கூட்டுட்டுப்போனாங்க.....

அப்ப ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு வீட்டப்பூட்டி சாவிய அவங்க மகள்கிட்ட கொடுக்கும் போது வள்ளி கண்ணுல நீர் வழிஞ்சிச்சி....

ஆம்புலன்ஸ் கதவைச்சாத்தும் போது  ஆச்சியோட கை அசைஞ்சிச்சி வள்ளியப்பாத்து...... 
அந்த திசை நோக்கி கையெடுத்துக்கும்புட்டா வள்ளி........அப்ப அவளோட கண்ணுல வழிஞ்ச கண்ணீர் அதை திரைபோட்டுருச்சு.......

அ.முத்துவிஜயன்    

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.