எச்சரிக்கை குரல் - சிறுகதை

etcharikkai-kural-short-story
எச்சரிக்கை குரல் - சிறுகதை

விஜயபுரி என்ற அழகிய நகரத்தை மன்னர் விக்ரமன் ஆண்டு வந்த காலத்தில், அங்கு வேதாச்சாரி என்ற புகழ்பெற்ற ஞானி வாழ்ந்து வந்தார். அதே சமயம், அந்நகருக்கு அருகிலுள்ள மலர்நகர் என்ற கிராமத்தில் இனியவன் என்ற இளைஞன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள், இனியவன் அருகிலுள்ள சந்திரபுரி என்ற ஊரில் பிச்சை வாங்கிவிட்டு, காட்டு வழியாகத் தன் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென ஒரு அமானுஷ்ய குரல் அவனிடம்,
 "இனியவனே! இன்று நீ வீட்டிற்குச் செல்லாமல் இருந்தால், நீ இறந்து விடுவாய். ஆனால், வீட்டிற்குச் சென்றால், உன் மனைவி இறந்து விடுவாள்!" என்று எச்சரித்தது.

இனியவன் சுற்றிலும் பார்த்தான்; யாருமே இல்லை. இந்தக் குரல் யட்சனா, கந்தர்வனா, அல்லது வேறு ஏதோ ஆவியா என்று அவன் மனம் பயந்தது. வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று அவன் துடித்தாலும், மனைவி இறந்து விடுவாள் என்ற எச்சரிக்கை அவனைத் தயங்க வைத்தது. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்தான்.

நகருக்குள் நுழைந்து ஒரு பாதையில் செல்லும்போது, வேதாச்சாரி மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த வேதாச்சாரியைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர். இனியவனும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து, அவரது பேச்சைக் கேட்டான். பேச்சு முடிந்ததும் மக்கள் கலைந்து சென்றனர், ஆனால் இனியவன் மட்டும் அசையாமல் நின்றான்.

காட்டில் கேட்ட அந்த எச்சரிக்கைக் குரல் அவன் மனதைப் புண்படுத்தியிருந்தது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்தாக வேண்டுமா? இருவரும் உயிருடன் இருக்க வழி ஏதேனும் உண்டா என்று அவன் மனம் தவித்தது.

வேதாச்சாரி இனியவனை அருகில் வரும்படி அழைத்தார். இனியவன் அவரை வணங்கி, தலை குனிந்து நின்றான். "ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய்?" என்று வேதாச்சாரி கேட்டார். இனியவன் காட்டில் கேட்ட எச்சரிக்கையை விவரித்து, "நான் வீட்டிற்குச் சென்றால் மனைவி இறப்பாள்; செல்லாவிட்டால் நான் இறப்பேன். இருவரும் உயிருடன் இருக்க வழி கூறுங்கள்!" என்று வேண்டினான்.

வேதாச்சாரி, "அந்த எச்சரிக்கைக் குரலை கேட்கும் முன் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான் ஒரு மரத்தடியில் அமர்ந்து, பையில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்," என்றான் இனியவன்.
"சரி, உன்னிடம் உணவு இருக்கும் பை உள்ளது. ஆனால் தண்ணீர் குடிக்கப் பாத்திரம் இல்லையே? எப்படித் தண்ணீர் குடித்தாய்?" என்று வேதாச்சாரி கேட்டார். "அருகில் ஒரு ஓடை இருந்தது. அங்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன்," என்றான் இனியவன்.

"அப்படியானால், நீ உணவு சாப்பிட்டுவிட்டு, பையை அப்படியே விட்டுவிட்டு ஓடைக்குச் சென்றாய், இல்லையா? பையில் உணவு மிச்சமாக இருந்ததா?" என்று வேதாச்சாரி கேட்டார். "ஆமாம், பையில் பாதி உணவு மிச்சமாக இருந்தது. அதை மனைவிக்குக் கொடுக்க எண்ணி, பையைக் கட்டி எடுத்து வந்தேன்," என்று பையைக் காட்டினான் இனியவன்.

"நீ ஓடைக்குச் செல்லும்போது பையின் வாயைக் கட்டவில்லையா?" என்று வேதாச்சாரி கேட்டார். "இல்லை, கட்டவில்லை," என்றான் இனியவன். "பையை மூடாமல் விட்டுவிட்டு ஓடைக்குச் சென்று திரும்பி வந்து கட்டினாய், இல்லையா? கட்டுவதற்கு முன் பையில் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று வேதாச்சாரி மீண்டும் கேட்டார்.

"இல்லை, பார்க்கவில்லை. அப்படியே கட்டி எடுத்து வந்தேன். அதற்குப் பிறகுதான் அந்த எச்சரிக்கைக் குரல் கேட்டது," என்றான் இனியவன்.

வேதாச்சாரி புன்னகையுடன், "நீ ஓடையில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, உன் பையில் ஏதோ நடந்திருக்கிறது. ஒருவேளை, ஒரு பாம்பு உன் பைக்குள் நுழைந்திருக்கலாம். அதைக் கவனித்த யட்சனோ, தேவதையோ உன்னை எச்சரித்திருக்கிறது. நீ வீட்டிற்குச் செல்லாவிட்டால், பசி எடுக்கும்போது பையைத் திறப்பாய். அப்போது பாம்பு உன்னைக் கடித்து இறந்து விடுவாய். ஆனால், நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குச் சென்றால், முதலில் உன் மனைவிக்கு பையைக் கொடுப்பாய். அவள் ஆவலுடன் அதைத் திறக்க, பாம்பு அவளைக் கடித்து அவள் இறந்து விடுவாள். இதுதான் நடந்திருக்கிறது," என்று விளக்கினார்.

"எனவே, பையை இங்கே வை," என்று வேதாச்சாரி கூற, இனியவன் திடுக்கிட்டான். தன் பையில் பாம்பு இருக்கலாம் என்று அறிந்து பயந்தவனாக, பையை வேதாச்சாரியின் அருகில் வைத்தான்.

அப்போது, அவ்வழியே சென்ற ஒரு பாம்பு பிடிப்பவனை வேதாச்சாரி அழைத்தார். அவன் பையை அவிழ்த்தபோது, உள்ளே இருந்து சீறிய ஒரு நல்ல பாம்பைப் பிடித்து பத்திரமாக எடுத்துச் சென்றான்.

பின்னர், வேதாச்சாரி இனியவனிடம், "இனி பயமின்றி உன் வீட்டிற்குச் செல்லலாம்," என்றார். இனியவன் மனமகிழ்ச்சியுடன் நன்றி கூறி, கவலையை விடுத்து வீட்டிற்குச் சென்றான்.

- பட்டாம் பூச்சி - தமிழ் நீதி கதைகள்