பூவாயி- சிறுகதை
"ஏ அப்பத்தா நான் சாப்புடாம குப்பையில போட்டதை எங்கம்மாகிட்ட சொல்லிக்கில்லி வைச்ச ஒன்ன செஞ்சிடுவேன்”னு
முழிய உருட்டி மிரட்டுனா கெளதமி.
அதுக்கு பூவாயிஅப்பத்தா
“ நான் ஏன்டி சொல்லப் போறேன் கத்திரிக்கா முத்துனா கடத் தெரு வுக்கு வந்துரப்போகுது எனக்கெதுக்கு வம்பு ஆரப்பகைச்சாலும் ஒன்னயப்பகைக்க முடியுமா நீ யாரு என் மகன் பெத்த சீமாட்டியாச்சேன்”னு சிரிச்சது,
“அப்புறம் இன்னொன்னு நீ பாட்டுக்கு அந்த மயன் வீட்டுக்குப்போறேன் இந்த மயன் வீட்டுக்குப் போறேன்னு கெளம்பிடாத நான் பள்ளிக் கொடத்துக்குப்போயிட்டு வந்து பாக்குறப்ப இங்குணக்குள்ளதான் கெடக்கனும் மாறிப் போனே சீவிடுவேன்”னு தனுஸ்மாதிரி ஆக்சன் போட்டா கெளதமி.
அதுக்கு பூவாயிஅப்பத்தா சொல்லிச்சி ”ஒங்கப்பன மாத்திரமா நான் பெத்து வைச்சிருக்கேன் நாலப்பெத்துவைச்சிருக்கேன் எல்லாருக்கும் நான் வேணும் போகலைன்னா ஒங்க சித்தப்பா மக அதான் வள்ளி என்னா அந்த மயன் வீட்டுல கறியும் கோழியும் போடுறாகன்னு இந்தப்பேத்திய மறந்துட்டயோன்னு பாட்டுப் படிப்பா... அவளும் பேத்திதான எனக்கு அவளும் எனக்கு வேணுமில்லயான்”
னு சமாதானம் சொல்லிச்சி
அதுக்குள்ள அங்க வந்த அந்தப்புள்ளயோட அப்பன் அதான் பூவாத்தாவோட ரெண்டாவது மகன்
” நீ அங்க இங்க போய் என்னாத்துக்கு சட்டிபான கழுவிட்டுக்கெடக்குற. ஒனக்கு 75 வயசாகுது அந்தக்காலத்துல தான் எங்கள வளக்க கஸ்ட்டப் பட்ட.இப்ப என்ன எல்லாரும் நல்லாருக்காகல்ல. எல்லாரும் காசும் குடுக்குறமுல்ல அதை வாங்கி வைச்சிக்கிட்டு புடிச்சதை வாங்கித்திண்ணமா படுத்துத் தூங்குனம்மான்னு இல்லாம எதுக்கு ஒடம்ப வருத்திக்கிட்டு வெலை செய்யிற பாக்குறவுக எங்களையில்ல திட்டுறாக வயசான காலத்துலயும் ஆத்தால வேல வாங்குறானுக வெக்கம் கெட்டபயலுகன்னு குத்தம் சொல்லுறாக எல்லாம் உண்ணாலதான்”
னு சளிச்சிக்கிட்டான் அவன்.
அதுவும் உண்மைதான். பூவாயிஆத்தா கையக்கால வைச்சிக்கிட்டு சும்மா இருக்காது. என்னத் தையாவது வேலைய இழுத்துப் போய்யி செஞ்சிக்கிட்டேதான் இருக்கும். அது வயசு ஆளுகமாதிரி டி.வி எதுவும் பாக்காது. பூவாயிக்கிட்ட செலபொம்பளைக
”அந்த நாடகம் சன் டி.வியில பாத்தியா இல்ல விஜய் டிவில இதுபாத்தியான்னு” வெசாரிக்கிறப்ப தெரிஞ்சது அது எதையுமே பாக்குற தில்லன் றது அதுக்கு மேல கேட்டா .
.”அடியே இது வெளைஞ்ச கட்ட. இதுக்குமேல அந்த நாடகத்துல யார் யாரை கெடுக்கும் சூழ் நிலையில் இருப்பாங்கன்னு நாடகத்தைப் பாத்துப்புட்டு பரபரப்பா இருக்கமுடியாது என்னால”ன்னு கறாறா சொல்லிருச்சு .
அப்புடிச்சொல்லுச்சே ஒழிய மூனாவது மகன் வீட்டுலதான் அடிக்கடி இருக்கும். மூனாவது மகன் இப்ப இல்ல. அதுனால அந்தமகன் வழிப் பேத்தி களுக்கு இவங்க எப்பையும் கூட இருக்கனும். அப்பனில்லாத பிள்ளைக வயசுக்கு வந்தது வேற ஆளு இல்லாத அந்த மயன் வீட்டுலதான் கெடக்கும்.
இதுக்கு ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு. அங்க பூவாத்தா எப்பப்பாத்தாலும் அங்கயே கெடக்குதுன்றதும் அங்குணக்குள்ள வீட்டுல பத்துப் பாத்திரங்கள் தேய்க்கத்தவறுவதில்லை தண்ணிதூக்கியாறாட்டி திட்டுவாகன்னு சொல்லி அதையும் முடியாமையே தூக்கிட்டு வந்து பாத்துக்கிறதுமா முக்கி முக்கி வேலை செய்யுது. அதுக்கு அந்த மவன்னா ஒரு பக்கம்தான்னு சலிச்சிக்கிட்டாக.
இதுனால மூணு மவனும் ஒன்னாக்கூடி பூவாயிஆத்தாவக் கூட்டியாந்து ஒக்காரவைச்சிப் பேசுனாக.
“இந்தாரு ஆத்தா நீ பாட்டுக்குச் சும்மா இருக்காம அந்த மயன் வேணும் வெனயம்னு போய் விழுந்து விழுந்து வேலை செய்யிற ஒனக்கென்னமோ அது லேசாத் தெரியுது ஆனா பாக்குறவுக எங்களை யில்ல கோளாறு சொல்லுறாக பாரு பூவாயிஆத்தாவுக்கு 4 மகன்கள் இருந்தும் பத்துப்பாத்திரம் தேய்க்க வைச்சிட்டானுகளே இந்த வசயுல இதெல்லாம் அவளுக்குத் தலை எழுத்து காலம் போன காலத்துல வேதாளம் வந்து ஆடுதுன்னு பேசுறாக அது எங்களுக்கு அசிங்கமா இருக்கு நீ ஒன்னு செய்யி நாங்க எல்லாரும் சேந்து ஒனக்கு வேணுமுன்னுற காசு குடுத்துடுறோம் ஒனக்குப்புடிச்சத வாங்கிச்சாப்புடு ஒனக்குப் புடிச்ச மயன் வீட்டுல இரு யார்வீட்டுலயும்வேலை எதுவும் செய்யாத, ராணி மாதுரி கொறநாளை வாழ்ந்துட்டுப்போ அங்க இங்க வேலைசெஞ்சி என் பெயரைக்கெடுக்காதேன்னு ”
சொன்னாங்க
ஆனா அதுக்கு பூவாயிஆத்தா ஒத்துக்கலை..
“ அது என்னால முடியாதாது. நீங்க எல்லாம் இருக்கீக ஆனா அவன் இப்ப இல்ல சின்னஞ் சிறு பிள்ளக பாவம் ஏங்கிப்போயிரும் டா. ஒங்களைப் பாத்து நீங்க பிள்ளை குட்டிகளோட இருக்குறதப் பாத்துட்டு அதுக ஏங்கிப் போயி டுங்க.
ஒரு நா ள் நான் எங்கயாவது விசேசத்துக்குப் போனா வந்து தேடிப்பாத்து ஏமாந்துருதுக. அதான் அவங்ககூடயே இருக்குறதுனுன்னு முடிவு எடுத்துட்டேன். இனிமே நான் அங்கதான் கெடப்பேன். கஞ்சியோ கூழோ குடுக்குறதக் குடிச்சிப்பிடு இருக்குறதுன்னு முடிவெடுத்துட் டேன்..இனிமே அங்குணக்குள்ள தான் கெடப்பேன். உசிறு போறவரைக்கும் அப்புறம் ஒங்க இஸ்டம்தேன் , சோலி முடிஞ்சவன்ன என்ன வேணுமானாலும் பண்ணிக்கோங்க நான் வந்து பாத்துக்கிட்டாஇருக்கப்போறேன். அதுவரைக்கும் என்ன என் விருப்பம் போல விட்டுறுங்கன்”னு சொல்லிச்சி
”வயசானா புடிவாதம் அதிகமாயிடுச்சு ஒனக்கு நான் ஏன் சொல்றோம்னு புரியலையா வயசானா புத்தியும் வேலை செய்ய மாட்டீங்குதா...பிள்ளைக பேச்சக் கேக்க மாட்டீயா”ன்னு உருட்டுனான் மூத்த மகன்
அப்ப பூவாத்தா சொல்லிச்சி..
“ஆமா நாங்க பொம்பளைக புருசன் இருக்குற வரைக்கும் அவர் பேச்சக்கேக்கனும் அப்புறம் புள்ளைக பேச்சைக்கேக்கனும். சாகுற வரைக்கும் அவன் என்ன நெனப்பானோ இவன் என்ன நெனப்பானோன்னு பயந்து பயந்து கெடக்கனும் எப்பத்தான் எங்க விருப்பம் போல இருக்குறது.. யார் கூட நான் இருக்கனும் றதையும் நீங்க தான் முடிவு பண்ணுவீகளா நான் என் விருப்பத்துக்கு இருக்க முடியாதா” கேட்டா எங்க மேல பாசம் இல்லையான்னு ஒரு பாச வேலியப்போடுறீங்க...
இனிமே என்னால ஒங்க பேச்சக் கேக்க முடியாது எனக்குப்புடிச்ச வீட்டுலதான் இருப்பேன். அதுக்கு ஒரு காரணம் இருக்கு அங்க நான் தேவைப் படுறேன் என் மகன் அங்க இல்ல. அதுக்குப்பதிலா நான் அங்க ஒத்தாசையா இருப்பேன் ஆரு தடுத்தாலும் கேக்கமாட்டேன் ஒங்களுக்கு நான் அங்க மட்டும் வேலை செய்யிறதுல பொறாமை .. ஆனா எனக்கு வயசாயிடுச்சு ஒன்னுக்கு ரெண்டுக்குப்போகனும் நீங்க தூங்கிட்டுக் கெடப்பீக உங்களை எழுப்ப முடியாது காலையில தூக்கம் போயிடும் நான் ஏதாவது வேலைய இழுத்துப்போட்டுக்கிட்டு செஞ்சாஅது ஒங்க தூக்கத்தக்கெடுக்கும் வெள்ளனா பசிக்கும் அப்ப என்னத்தையாவது திங்கனும் இதெல்லாம் அங்கதான் செய்ய முடியும். நீங்க திட்டுவீக அதுனால என்ன வற்புறுத்தாதீங்க புரிஞ்சிக்கோங்க அது எல்லாத்துக்கும் மேல அந்த வீடு பழையவீடு ஒங்க அப்பா கட்டுன வீடு அவர் ஞாபகம் அங்கதான் கெடக்கு இதெல்லாம் நீங்க கட்டுன வீடுக.. அதுல அவர் ஆசி இருக்கும் ஆனா அவரது ஆத்மா அங்குனதான் சுத்திக்கிட்டுக் கெடக்கு அதுகூட இருக்கத்தான் எனக்கு விருப்பம்... நு”
சொல்லிட்டு சேலைய ஒதறி தலையில போட்டுக்கிட்டு அந்த வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சா பூவாயிஆத்தா
செத்துப்போன மகன நெனச்சு கண்ணீர் தழும்ப.
அதைத் தடுக்க முடியாம பாத்துக் கிட்டு நின்னாக எல்லாரும்... இது எதுவும் புரியாம கண்கலங்கி நின்னா கெளதமி அப்பத்தா போறதைப்பாத்துக்கிட்டு அப்ப திரும்பி சொன்னா பூவாயித்தா
“ கெளதமி ஒன்னப்பாக்க வருவேன் தெனமும்”னு... சரின்னு மண்டய ஆட்டுனா கெளதமி புரிஞ்சும் புரியாம..
அ.முத்துவிஜயன்