உலர்ந்த வேர்கள் - சிறுகதை

ularntha-vergal-short-story
உலர்ந்த வேர்கள் - சிறுகதை

அவருக்குக்கு ராத்திரிபூராம் தூக்கமில்ல நெஞ்சில லேசான வலி . இந்த ராத்திரி நேரத்துல என்ன பண்ணப்போறோம் காலையில எப்புடியும் ஆஸ்பத்திரி போறோம் அங்க பாத்துக்கலாமுன்னு நெனச்சி சமாளிச்சார். 

அவர் ரிட்டயர்டு ஆகி அஞ்சுவருசம் ஆகிப் போச்சு. பையன்கூட ஊரப்பாக்கத்துல சொந்தமாக்கட்டின வீட்டுல மகனோட செட்டில் ஆயிட்டாரு. பையன் பேங்கில வேலை அவனுக்கு ரெண்டு பிள்ளைங்க . அவன்இவங்க கூடத்தான் இருந்தான் .

பொண்ண சென்னையில் கட்டிக்குடுத்து அது அங்க அவங்கவீட்டுல இருக்கு. சாஃப்ட் வேர்ல வேலை. அப்ப அப்ப வந்து பாத்துட்டுப்போகும்

அவருக்கும் அவரோட சம்சாரத்துக்கும் மெடிக்கல் ட்ரீட் மெண்ட் எல்லாம் கல்பாக்கம் டிப்பார்ட்மெண்ட் ஆஸ்பத்திரிலதான். ரெண்டு பேருக்கும் எல்லாருக்கும் இருக்குற சுகர் பி.பி எல்லாம் இருந்துச்சு. 

ரெண்டுமாசத்துக்கு ஒருதடவ அங்க போயி காலையில யூர்ன் பிளட் சாம்பிள் குடுத்துட்டு
அப்புறமா டிபன் சாப்புட்டுட்டு மறுபடியும் 10 மணிக்கு ஆப்டர்டிபன் சாம்பிள் குடுத்துட்டு அதோட ரிசலட் சாயங்காலம் வரும் . அதை வாங்கி டாக்டரைப்பாத்துட்டு மருந்து ஊசி எல்லாம் எழுதிவாங்கி கவுண்டர்ல போய் அதெல்லாம் வாங்கிட்டு திரும்பனும்...

இதுக்கெல்லாம் ரிட்டயர்டு ஆகும்போதே பணம் ஒருலட்சத்தி 10 ஆயிரம் ரூவா புடிச்சிக்கிட்டாங்க. ஏன்னா நாளைக்கி பிரச்சனை வாரப்ப கையில காசு இருக்குமோ இருக்காதோ இப்புடிகட்டிட்டா அவங்களே எல்லாம்பாத்துக்குவாங்க.
மாசக்கடைசில பென்சன் வந்தவன்ன அங்க போறமாதிரி பிளான் பண்ணிக்குவாங்க. அப்பத்தான கையில காசு இருக்கும். அவர் ஒண்ணாந்தேதிசெவ்வாக்கெழமபோகலா முன்னு இருக்கோம்ன்னு மகன்கிட்ட சொன்னார் . சனிக்கிழம போகலாம் நான் கார்ல கூட்டிட்டுப்போய் கூட்டிட்டு வாறேன்னு 
அவன் சொன்னான். 

இல்லப்பா நீ செரமப்படவேணாம் நாங்களே போய்ட்டு வந்துருறோம்னு சொல்லிட்டு காசு மிச்சப்படுத்த ஊரப்பாக்கத்துல இருந்து ரயில்ல ஏறி செங்கல்பட்டு வந்து பின்ன பஸ்ல ஏறிகல்பாக்கம் வாரதுதான் எப்பையும் செய்யிறது.. 

இதுல வெள்ளனா 5மணிக்கிக் கிளம்பு னாத் தான் 7 மணிக்காவது அங்கபோய் சேரமுடியும் சாப்பாடு செஞ்சி எடுத்துகவான்னு அவரோட சம்சாரம் கேட்டுச்சு. வேணாம் அங்கயே கேண்டீன் இருக்கு பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு

அன்னிக்கி காலையில எந்திரிச்சி ரெண்டு பேரும் கெளம்புனாங்க. அப்பயே ராத்திரி வந்த வலி கொஞ்சம் கூடுனமாதிரி இருந்துச்சு. பஸ்பிடிச்சி கல்பாக்கம் போகும்போது திருக்கழுக்குன்றம் தாண்டும்போது லேசா வியர்த்துச்சு. 

எப்படா கல்பாக்கம் வருமுன்னு உசிரகையில புடிச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தார் பஸ்ல . ஆஸ்பத்திரி ஸ்டாப்புல எறங்கும்போது ஒரு மாதிரியா வந்து தடுமாறி விழுந்தார்.. அவர் சம்சாரம் அய்யோன்னு கத்துனதுல அங்கயே கூட்டம் கூடி அட நம்ம ரிட்டயர்டு ஸ்டாஃப் பான்னு ஒடனே அவரை ஆஸ்பத்திரிக்கிக் கொண்டுபோய் கேசுவாலிட்டில சேத்தாங்க 

அங்க ஒடனேடாக்டர் வந்து செக் பண்ணிப் பாத்துட்டு லோசுகர்ப்பான்னு சொல்லி ஒடனே அங்க அட்மிட் பண்ணி பாத்தாங்க. இந்த பிரச்ச்னையில அவரோட சம்சாரம் சாம்பிள் குடுக்க முடியல. அவர் கூடவே இருக்க வேண்டியதாயிடுச்சு...

அப்ப ஆஸ்பத்திரில சொன்னாங்க பெரிய டாக்டர் வந்து பாத்துட்டு ஒப்பீனியன் சொல்வாரு.. அதுக்குள்ள இ.சி.ஜி எல்லாம் எடுத்து வைக்கிறோம் சாம்பிள் இங்கயே வந்து கலெக்ட்பண்ணிக்குவாங்கன்னுசொன்னாங்க 
அவர் இன்னும் கண்ணு முழிக்கல. பத்துமணிக்கா அவர் கண்ணுமுழிச்சார். அதுக்குள்ள இ.சி.ஜி டெஸ்ட் ரிசல்ட் எல்லாம்வந்துருச்சு. பெரிய டாக்டர் வந்து பாத்துட்டு.. ஒரு ஒப்பீனியனுக்கு செட்டிநாடு ஆஸ்பத்திரிக்கி அனுப்புறேன்ன்னு சொன்னாரு, அதுக்கு இவர் சொன்னாரு அங்க எல்லாம் அலைய முடியாது.. இங்கயே பாருங்கன்னு சொன்னதும் 24 மணிநேரம் அப்டர்வேசன்ல அட்மிட் பண்ணிட்டாங்க

அந்த அம்மாவுக்கு உசிறே ஆடிப்போயிடுச்சு. என்னமோ ஏதோ என்ன ஆகப்போகுதோ. உசிருக்கு ஆபத்தோ ஒரு வேளை நம்மளை நிர்கெதியா விட்டுப்போயிடுவாரோ.. தனியா நான் என்ன செய்யபோறேன். அவரு ஒரு ஆதரவுக்குன்னாலும் இருக்காரு அவருக்கும் ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால தாங்கமுடியுமா பென்சனும் பாதி ஆகிப்போயிடும் இந்தப்பென்சன் வர்றதே பத்தல பாத்துப்பாத்து செலவு பண்ண் வேண்டியதா இருக்கு. மாசம் இம்புட்டுன்னு மகன்கிட்டக்கொடுத்துத்தான் பொழப்பே ஓடுது

அது கொறஞ்சா மகன் என்ன சொல்வானோ ஒரு வேளை நடக்கக்கூடாதது நடந்துபோச்சுன்னா. ஆண்டவனே அதை என்னால தாங்கமுடியுமான்னு பல நெனப்பு மனசுல ஓட எதுக்கும் மகனுக்குப் போன் பண்ணி சொல்லிடுவோமுன்ன்னு அவர் சம்சாரம் மகனுக்குக்கு போன் பண்ணிச்சு. இதுமாதிரி ஆகிப்போச்சுன்னு. அவன் அதுக்கு போன்ல கத்துனான் நான் தான் சனிக்கிழமை போகலாமுன்னு சொன்னேன்ல. இப்ப என்னால வரமுடியாது அங்க எல்லாம்நல்லாப்பாத்துக்குவாங்க சாயங்காலம் வாறேன்னு சொன்னான்

மகளுக்குப்போன் பண்ணி வெவரம் சொன்னாங்க. அதுக்கு மக அம்மா அவர் வெளியூர் போயிருக்காரு. நான் தனியா இருக்கிறேன் இப்ப வரமுடியாது வேன்னா நாளைக்கிக்காலையில வந்து பாக்குறேன் சாரிம்மா ந்னு அழுதுச்சு.....
அதுக்கப்புறம் அங்கயே அவர் சம்சாரம் ஒக்காந்து கெடந்துச்சு. சாப்பிடக்கூடத்தோணாம. வார்டுல பேசண்ட்க்கு வந்த டீ ஒரு அம்மா குடுத்து குடிக்கச்சொல்லிச்சி.. 

சாயங்காலம் வரேன்னு சொன்ன மகன் வரல. எட்டுமணிக்கு போன் பண்ணினான். இங்க வேலை அதிகமாச்சு. எப்புடியும்நாளைக்கி அனுப்பிடுவாங்கல்ல அப்புறம் என்னாத்துக்கு நான் வேற அலைஞ்சிக்கிட்டு நீங்க அங்கதான இருக்கீங்க பாத்துக்கங்கன்னு சொன்னான். அவர் சம்சாரத்துக்கு அழுகையா வந்துச்சு. 

அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. அம்மா பதட்டதோட பல்லுல பச்சத்தண்ணி படாம பாத்துக்கிட்டுகெடக்கேன். ஆறுதல் சொல்லவாவது வருவன்னு பாத்த மகன் இப்புடிச்சொல்லீட்டானேன்னு கலங்கிப்போய்ட்டாங்க
அப்ப அங்க ஒரு பையன அவங்க அம்மா வும் அப்பாவும் தூக்கிட்டு ஓடிவந்தாங்க. அவன் மயக்கத்துல இருந்தான் . அவன கேசு வாலிட்டில அட்மிட் பண்ணிட்டு பதட்டத்தோட இருந்தாங்க. ஒருமணி நேரம் கழிச்சி அவன் சரியானான். அவனையும் அப்சர்வேசன்ல அட்மிட் பண்ணாங்க. அப்ப அவனோட அம்மா நான் பாத்துக்கிறேன் நீங்க வேலைக்கிப் போறதுன்னா போங்கன்னு சொல்லிச்சி

அப்ப அவனோட அப்பா சொன்னாரு இந்த நெலமையில எப்புடி விட்டுட்டுப்போறது .ன்னு சொல்லிட்டு அங்கயே இருந்தார். ராத்திரியும் அவங்க அங்கயே கூட இருந்தாங்க.
அப்ப இந்த அம்மாவப்பாத்துக்கேட்டாங்க உங்க வீட்டுக்காரருக்காக துணைக்கி இருக்கீங்களான்னு ஆமான்னு சொல்லவும் உங்களுக்கு பிள்ளைகுட்டிக இல்லையான்னு கேட்டார். 

இருக்காங்க ஆனா வெளியூர்ல . அவங்களால வரமுடியல. நாளைக்கி வருவாங்கன்னு சொல்லும்போதே அவங்க கண்ணு கலங்கிடுச்சு... 

அப்ப அவர் கேட்டார் அவங்களோட வீட்டுக்காரர் பெயரச்சொல்லி அவர்தானே அவர் ஊரப்பாக்கத்துலதான வீடு மகன் கூடத்தான இருந்தார் எனக்குத்தெரியுமேன்னு சொன்னவன்ன இவங்க சொன்னாங்க இப்ப அவன் டெல்லிக்குப்போயிருக்கான் பாவம் போன்ல அழுதான்ன்னு சொல்லிக் கண்ணத் தொடச்சிக்கிட்டாங்க..
அதானபாத்தேன் இங்க இருந்தா வந்திருப்பாங்கல்லன்னு சொல்லிட்டு நாம நம்ம பிள்ளைகளுக்கு ஒன்னுன்னா பதறிப்போயிடுறோம்.. ஏன் நாளைக்கி நம்மளுக்கு ஒன்னுன்னா பாப்பாங்கன்ற நம்பிக்கையிலயா இல்லங்க.. நம்ம பிள்ளைங்க அவங்களை நாமதான் பாக்கனும்ன்ற அறம்.... ஆனா அந்த அறம் பிள்ளைகளுக்கும் இருந்தா கொடுத்து வைச்சவங்க நாம...

என்புள்ளைங்கள அப்புடித்தான் வளக்கிறொம்ன்னு சொன்னார் அவர். நாங்களும் அப்படித்தான் வளத்தோம், ஆனான்னுஇழுத்துச் சொல்லி பெருமூச்சு விட்டுக் கண்ணத் தொடச்சிக்கிச்சு அந்த தாய்.....
அ.முத்துவிஜயன்