அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ் - சிறுகதை
சாயிராபானுவும் பானுமதியும் எப்புடி சேந்தாங்கன்னு அவுகளுக்கே தெரியாது.சாயிராபானு பஞ்சாய்த்துப்பள்ளிக்கொடத்துல நாலாப்பு டீச்சரு. நல்லகலரு அவளுக்கு ஏழு அண்ணன் மாருக அவதான் கடைக்குட்டிச்செல்லம். அவங்க அப்பாவுக்கு அம்மாவழிச்சொத்து நெறையா வந்துச்சி. அதையெல்லாம் பானுபேருல எழுதிவைச்சிக்கல்யாணமும் பண்ணி வைச்சாரு. அவளோட புருசன் மொகமது சரியானகுடிகாரன் மொரடன். ரொம்பநாளு தாங்கல. வீட்டுக்கு வந்து அப்பாகூட சண்ட போட்டா. அதுக்குள்ள அவனே தீத்துப்புட்டான். ஜீவனாம்சம் குடுக்கு றீன்னான். இவ வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டா.
அப்பத்தான் இந்த ஊருக்கு வேலைய மாத்திவாங்கிட்டு வந்தா. அப்பத்தான் பானுமதி யோட வீட்டுல வாடகைக்குத் தங்குனா. பானுமதி புருசன் மனநிலை சரியில்லாதவன். எப்பப்பாத்தாலும் அவளப்பாடாப்படுத்திக்கிட்டே இருப்பான் அடங்கமாட்டான் . ஒருநா பானுமதிய அடிக்கிறதுக்கு அவன் வெரட்டிக்கிட்டு வாரயில சாயிராபானு குச்சியக்கைல எடுத்துக்கிட்டு மெரட்டுனா அவன. என்ன அதிசயம் அடங்கிட்டான். பானுமதிக்கு அது அதிசயமா இருந்துச்சு. யார்யாரோ மெரட்டுனதுக்கெல்லாம் பயப்படாத அவ புருசன் இவங்களுக்கு பயந்தது அதிசயம்தான்
அதுல இருந்து அவன் ஏதாவது கட்டுக்கடங்களைனா டீச்சரக்கூப்புடுவேன்னு சொன்னாப்போதும் பொட்டிப்பாம்பா அடங்கிடுவான். அதுனால ரெண்டு பானுவுக்கும் நெருக்கமதிகமாச்சு. எதுனாலும் டீச்சரைக்கேட்டுச்செய்யிறது பழக்கமாச்சு. ஒருநா பானுமதி சொல்லிட்டா நீ
தனியாச்சமைக்கவேணாம். உனக்குன்னு தனியாவா சமைக்கப்போறேன் கூடஒரு கைப்பிடி சேத்துப்போடுறேன். சாப்புட்டுக்கோன்னு சொன்னா. அதுவும்போக ஒத்த ஆளுக்கு தனியாசமைக்கிறதுன்றது ஒரு வேலை கெட்டவேலை.பானுடீச்சருக்கு. அதுவும் சரியாப்பட்டது.
பானுமதிவீட்டுலயே குடியேறிட்டா சாய்ராபானு. மாசாமாசம் காசு குடுத்துருவா.இந்தப்பானுவும் அங்கயே சாப்புட ஆரம்பிச்சா. இது அவளோட அண்ணன் மாருகளுக்குபுடிக்கல. நேரவந்துட்டாக. வேலைய எழுதிக்குடுத்துட்டு நம்ம ஊருக்கே வந்துடுன்னாக. அப்ப பானுசொல்லிச்சி என்னோட பொழப்ப நான் பாத்துக்கிறேன் உங்க சோலியப்பாத்துக்கிட்டு நீங்கபோங்கன்னுச்சு . அப்ப சொத்துபத்துக்கு அங்கதான வரணும் அப்பப்பாத்துக்கிறோம்ன்னாக.ஒங்கசொத்துஎனக்குவேணாம் நீங்களே வைச்சிக்கோங்க நான்வேண்ணா எழுதிக்குடுத்துடுறேன்னா. இனிமே உனக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லன்னு சொல்லிட்டுப்போயிட்டாக.
அதுக்கப்புறம் பானுமதி குடும்பத்தில ஒருத்தியாயிட்டா சாயிரா பானு. அந்தக்குடும்பத்துக்குதேவையான எல்லா உதவியும் செஞ்சா. பானுமதிக்கு மூணு மகளுக ஒருமகன் அவங்களையெல்லாம் படிக்கவைச்சா. சும்மாகெடந்த நெலத்தை ஆள்வைச்சி வெளையவச்சா. வேளாண்மை பேங்குலகொஞ்சவட்டிக்கு கடன் வாங்க்கிக்கொடுத்து அவுகள ஒரு நெலைக்கிக்கொண்டுவந்தா. வெள்ளைச்சேலைதான் உடுத்துவா இல்ல மஞ்சசேலை. ஒரு பெண்சாமியார் மாதிரியாயிட்டா.
அங்க பக்கத்துல இருக்கவுளுக்கெல்லாம் ஆலோசனை சொல்லுவா.எல்லாபுள்ளைகளையும் பள்ளிக்கொடத்துக்கு வரவச்சா. ஞாயத்துக்கெழமைகள் ல்ல பக்கத்துல உள்ளப்டவுனுக்கு ரெண்டுபானுவும் போவாக அங்க பலசரக்கு சாமான் எல்லாம் மொத்தவெலைக்கி வாங்கிட்டு சினிமா பாத்துட்டு நல்லா சாப்புட்டு வருவாக .
வீட்டுக்குவந்து அதுமாதிரி பானுமதி செஞ்சி குடுக்கனும். இப்பரெண்டுபேரையுமே ஊருல வாத்தியாரம்மான்னு கூப்புட ஆரம்பிச்சாக . மூணுமகளுகளுக்கும் அவுகசொந்தத்தில மாப்பிள்ளை களப்பாத்து கலியாணம் பண்ணிவைச்சா. ரெண்டுபானுவும் உயிர்த்தோழிகள் ஆனாங்க. பானுமதிவீட்டுக்கலியாணங்களை ஆம்பளைமாதிரி நின்னு சாயிராபானு நடத்துனா. பொண்ணுக அவகால்ல விழுந்து கும்புட்டாக. அப்பெல்லாம் பானுமதி சொந்தக்காரவுகெலெல்லாம் ஆறு இந்தம்மா நம்மாளுகமாதிரி இல்லையேம்பாக அதுக்கு அவசொல்லுவா நான் கும்புடுற பாதாளி அம்மன் தான் நேரவந்துருக்கும்பா.
ஆம்பளையில்லாத வீடுண்ணு ஒருநா களவாணிக உள்ள புகுந்துட்டாக . அந்த ஊருல அது சகஜம். ஊரே களவாணிப்பயலுக இருக்குற ஊருதான், பானுமதி பயந்துட்டா. அழுகவே ஆரம்பிச் சிட்டா. ஆனா பானு டீச்சர் பயப்படலை. தைரியமாப் பேசுனா களவாணிகளை எதுத்து அவ தைரியமாபேசுனதுபாத்துபானு அசந்துபோயிட்டா..
அப்ப சாயிராபானு சொன்னா சாப்பாட்டுக்கு இல்லாமத்தான களவான வந்துருக்கீக . வேணுங்கறத எடுத்துட்டுப்போங்க ஆனா ஒண்ண மனசுல வைச்சிக்கங்க ஒங்க சகோதரி வீட்டுல இருந்துதான் எடுத்திட்டுபோறீங்க. அவ கஸ்ட்டப்பட்டு சம்பாரிச்சதத்தான் எடுத்துட்டுபோறீங்க அது எவ்வளவு அசிங்கம்ன்னு புரிஞ்சிக்கோங்க. அப்புறம் இந்தாங்க பீரோசாவி வேணுங்குறத எடுத்துக்கோங்க எப்பயாவது கஸ்ட்டம்னா பகல்லவாங்க நான் முடிஞ்சதத்தாறேன்னா.
நீங்க களவாண்டு உன் பிள்ளைகளுக்குக்குடுக்குற காசு வெளங்காது
நான் மனசோடகுடுக்குறேன். அது ஒதவும்ன்னா
வந்தவனுகளுக்கு ஒருமாதிரியாயிடுச்சு. அதுல ஒருத்தன் பானுடீச்சர் வகுப்புல படிக்கிறவனோட அப்பன்.. அஅவனுக்கு பொட்டுல அடிச்சமாதிரி இருந்துச்சு. அவன் மத்தவங்ககிட்ட என்னமோ பேசினான் எல்லாரும் தலையத்தொங்கபோட்டுட்டானுக, அப்ப அவன் சொன்னான் இது என் தங்கச்சி வீடு இனிமே நாமதாண்டா இந்த வீட்டுக்குப்பாதுகாப்பு. இனிமே உள்ளூர் வெளியூர் ஆரும் இங்க அண்டப்புடாது.......நாமதான் காவல்ன்னான்பானுமதிக்கு கண்ணு கலங்கிடுச்சு. பானுடீச்சரைப்பாக்கப் பெருமையா இருந்துச்சு
இது தெரிஞ்சி ஊருக்காரவுக ரொம்ப மரியாத குடுக்க ஆரம்பிச்சாக. பானுமதி மகனுக்கும் பானு கலியாணம் சொந்தத்திலே பண்ணிவைச்சா. நல்ல மருமக கெடைச்சா. ஆனா அவுகளுக்கு எடைஞ்சலா இருக்கக்கூடாதுண்ணு சாயிரா தனிவீட்டுக்குப்போயிட்டா.
இங்க இருந்து சாப்பாடு மட்டும் போகும். ரெண்டுபேருக்கும் ரொம்பவயசாடிச்சு. இப்ப சாயிராசொன்னா என்னோட காசுபணம் எல்லாம் உன் பேருக்கே எழுதிவைச்சிடுறேன் ஏன்னா நான் போனப்புறம் ஒனக்கு எங்காளுகிட்ட இருந்து பிரச்சனை வரக்கூடாதுன்னா. அப்ப பானுமதி கண்ணு கலங்கச்சொன்னா அம்மா நீங்க இதுவரைக்கும் செஞ்சதுக்கே ஏழு பெறவி எடுத்துக்கடனடைக்கனும் இத எப்புடித்திருப்பித்தாரதுன்னு தெரியல வேற எதுவும் வேணாம் ஒங்க சொந்தங்களுக்கே குடுத்துருங்கன்னா.
அப்ப சாயிரா சொன்னா அன்னிக்கி அனாதையா நான் வந்து நின்னப்போ என்ன ஒங்க குடும்பத்துல ஒரு ஆளா சேத்துக்கிட்ட. பாசத்த எல்லாரும் பொழிஞ்சீங்க எல்லாரும் என்ன ஏத்துக்கிட்டீங்க காசுபணம் யாருவேணாலும் குடுக்கலாம் ஆனா அந்த பாசத்த அன்ப எல்லாராலயும் குடுக்கமுடியாது எங்கம்மாவ நான் பாத்ததில்ல உன்கிட்டதான் அதைப்பாத்தேன் அதுதான் என்ன உன்கிட்ட கட்டிப்போட்டிடுச்சு.
அடுத்தபொறப்புன்னு ஒண்ணு இருந்தா உனக்கு மகளாப்பொறக்கனும் அதான் என்னோட ஆசைன்னா கண்ணீர் மல்க. ராத்திரிபூராம் தூங்கல என்னமோ நடக்கபோகுதுன்னு தோணிச்சி. பானுமதிய கூப்புட்டா. நான் உன் மடில படுத்துக்கட்டுமான்னா. தாராளமாப்படும்மான்னா . மடிலபடுத்தவன்ன ரெண்டுபேருக்கும் கண்ணீர் ஊத்துச்சு. நம்மல ஏன் ஆண்டவன் பிரிக்கணும் உன் மடில என்னுசுறுபோகனும் அதான் கடைசி ஆசன்னா சாய்ரா...
பானுமதியால தாங்கமுடியல . என்ன இந்த மண்ணுலயே பொதச்சிருங்க நான் செடியாவோ மரமாவோ வளந்து ஒங்களைப்பாத்துட்டே இருப்பேன்னா. பானுமதியால தாங்கமுடியல வாயப்பொத்தி அழுதா. திடீருண்ணு சிரிச்சா சாயிராபானு அப்புடியே உயிர் பிரிஞ்சிடிச்சு. பானுமதி கட்டிப்புடிச்சி அழுதா. மறுநாளு அவுக சொந்தக்காரவுக எல்லாம் வந்தாக அவுககிட்ட சாயிராபானு சொன்னதச்சொன்னா. அவங்க மறுக்கல அவங்க ஆசைப்படியே நடக்கட்டும்ன்னாங்க அவங்க சாயிராபானு வை அவங்க மொறப்படி தூக்கிட்டுப்போனப்போனப்பத்தான் பாத்தா சாய்ராபானு கைல பானுமதின்னு பச்சகுத்தியிருந்துச்சு. அதைப்பாத்து பானுமதி கதறிட்டா அவள ஆராலும் தேத்தமுடியல பாக்குறவுக கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அவளை அந்ததெருக்கோடிலதான் பொதைச்சாக. அதுல ஒரு வேப்பமரம் மொளைச்சிச்சி
அதைப்பாக்குறப்ப எல்லாம் பானுமதிக்கு பானுடீச்சர் ஞாவகம் வரும். அதுகூடப்போய் பேசிட்டு இருப்பா பானுமதி பாக்குறவுகளுக்கு அவ பானுடீச்சர் கூடப்பெசுறது புரியாது... அவளை லூசும்பாக....... ஆனாபானுமதி யாரைப்பத்தியும் கவலைப்படாம சிரிச்சிக்கிட்டேபேசிட்டு இருப்பா....தீம்பண்டம் எல்லாம் கொண்டுபோய் வைப்பா. அவங்க பிள்ளைகளுக்குத்தெரியும் அதோட அருமை...அவங்க கண்ணு கலங்கும்.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்.