ஐயுறவுகள் - சிறுகதை

iyuravugal-short-story
ஐயுறவுகள் - சிறுகதை

பயணம் என்றாலே பல சுவையான அனுபங்கள் நிறைந்ததுதான் அதிலும் ரயில் பயணங்கள் என்றால் சுவைக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது பலவகை மனிதர்கள் மொழிகள்  மொழி தெரியாமல்  முழிபிதுங்கும் அனுபவங்கள் என்று நிறையும் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுவங்களாக மாறிவிடும்

இந்த  முறை ஒரு பெரும் குழுவாக டெல்லி சென்று கொண்டி ருந்தோம். மொத்த உறுப்பினர்கள் 80 என்றாலும் நாங்கள் 5 பேர் தனிக்குழு.  ஒரே பெட்டியில் ஒரே இடத்தில் ஆறு இருக்கைகள்

அதனால் மிகவும் மகிழ்ச்சியாகப் பயணம் சென்று கொண்டி ருந்தது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுமாகப் போய்க்கொண்டிருந்தது. அது தமிழ்நாடு விரைவு வண்டி அதிலும் சாதரண படுக்கைவசதி கொண்ட  பெட்டி குளிரூட்டப்பட்ட பெட்டி அல்ல
இதுபோன்ற பெட்டிகளில் தமிழ்நாடு தாண்டி ஆந்திரா பகுதி தொடங்கி கடைசி வரை முன்பதிவு  செய்யாதவர்கள் ஏறித் தொந்தரவு செய்வார்கள் காலியாக இருக்கும் இடங்களில் அமர்ந்து கொள்வார்கள் நாம் படுத்து ஓய்வெடுக்க முடியாது அதில் சிலர் திருடராகவும் இருப்பார்கள். ஏறும் போது ஒன்றும் தெரியாதவர் போல ஏறி இறங்கும் போது நமது பொருள்களுடன் இறங்கிவிடுவார்கள்.  எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்
இரவில் திருடர்கள் வேலை மிகவும் சுலபம். கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

இந்தமுறை ரயிலில் கிடைத்த உணவுகள் வீட்டில் கிடைக்கும் உணவுக்காக ஏங்க வைத்தன. இட்லிகள் என்று கொடுக்கப்பட்டவை சாம்பாரில் ஊற அடம்பிடித்தன அத்தனை உறுதியாக இருந்தன. சாம்பாரோ உப்பிட்டவரை உள்ளவரை நினைக்க வேண்டும் என்று சமைப்பவர் கருதி தன்னுடைய தாராளத்தை உப்பில் காட்டியிருந்தார். இனி எப்போது பயணம் செய்தாலும் நினைவுக்கு வரும் வகையில்

இரவு 10 மணிக்கு புறப்பட்ட பயணம் மறுநாள் காலை ஆந்திராவில் சென்றுகொண்டிருந்தது விஜயவாடா தாண்டி கம்மம் வாராங்கல் பல்ஹார்ஸா என்று போய்க்கொண்டிருந்தது அதிசயிக்கும் விதமாக யாரும் ஏறித்தொந்தரவு செய்யவில்லை. நிம்மதியாக இருந்தோம்.  ஆனால் அது நீடிக்கவில்லை

மாலை 6 மணிக்கு இட்டார்சி வந்தபோது எங்களின் பெட்டியில் நான்கு பேர்கள் கனமான லக்கேஜ் உடன் ஏறினார்கள். நேராக வந்து எங்களிடம் எல்லோரும் எழுந்திருங்கள் இது எங்களுக்கான இடம்  நாங்கள் அமர வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்.

நாங்கள் எவ்வளவோ சொன்னோம் “ ஐயா இது எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுள்ள படுக்கைகள் பரிசீலனை செய்யும் பயணசீட்டு சோதனையாளரும் வந்து அதை உறுதிப்படுத்திச் சென்றுவிட்டார்” என்று சொன்னாலும்  அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.  அந்த நான்குபேரில் தலைவர் போல் இருந்தவர் கேட்டார் “ அப்படியென்றால் உங்கள் பயணச்சீட்டைக் காண்பியுங்கள் “ என்று

நாங்களும் பயணச்சீட்டை எடுத்துக்காண்பித்தோம். ஆனாலும் ஏற்கவில்லை. தகறாறு தொடர்ந்தது. அப்போது நாங்கள் கேட்டோம் ”உங்களின் பயணச்சீட்டை எடுத்துக்காண்பியுங்கள்” என்று உடனே அவர்களின் பயணச்சீட்டை எடுத்துக் காண்பித்தார்கள். அதில் நான்கு பேருக்கும் W/L லிஸ்ட் என்று இருந்தது
எங்களுக்குக் கோவமே வந்து விட்டது. எப்படி W/L லிஸ்ட் பயணச்சீட்டை வைத்துக்கொண்டு இந்த அதிகாரம் பண்ணலாம் என்று நாங்களும் சத்தம் போட்டோம். அப்பொழுது அவர்களில் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்துக் காண்பித்தார். அதில் நாங்கள் இருந்த S3 பெட்டி என்றும் அதே படுக்கைகளும்  உறுதிசெய்யப்பட்டதாகக் காட்டியது எங்களுக்குத் தலை சுற்றியது. எவ்வாறு ஒரே படுக்கையை இன்னொருவருக்கு வழங்க முடியும் என்ற குழப்பம் வந்தது  அவர்களோ தாங்கள் தான் அந்தப்படுக்கைகளுக்கு ச் சொந்தக்காரர்கள் என்று உறுதியாகச் சண்டையிட்டனர்.

அப்பொழுது எங்களுக்கு பயணச்சீட்டைப் பதிவு செய்தவர் மேல் ஐயம் வந்தது. அதில் ஏதாவது குழப்பம் இருக்குகோ என்ற ஐயம் வந்தது ஒன்றும் புரியவில்லை. அவரிடம் போன் செய்து 

கோவித்துக்கொண்டோம் அவர் தவறிழைத்துவிட்டதாக. ஆனால் அவர் உறுதியாகச்சொன்னார் தன்னிடம் தவறு ஏதுமில்லை என

அப்போது எங்களுக்கு இதில் ஏதோ தவறுள்ளது அதைக் கண்டு பிடிக்காமல் பிரச்சனை ஓயாது என்று தோன்றியதால் அவர்களின் பயணச்சீட்டு தகவலறிக்கையை வாங்கி முதலில் படுக்கை எண்ணைப் பரிசோதித்தோம். அது எங்களின் படுக்கைக் கான எண்கள் தான். அடுத்து பயணத்தேதியைப் பரிசோதித்தோம் (ஏனென்றால் சில சமயம் பதிவு செய்யும் போது தவறு நிகழ வாய்ப்புள்ளது தேதி மாற்றிப் பதிந்துவிடுவார்கள். ) பார்த்தால் அதுவும் மிகச்சரியாக இருந்தது எங்களுக்கோ தலை சுற்றியது

அப்போது ஒரு ஐயம் வந்து (டிரெயின் நம்பர்) வண்டி எண்ணைப் பார்த்தால் அது வேறு வண்டி. அதாவது அது ஆந்திரா விரைவு வண்டி. நாங்கள் இருப்பதோ தமிழ்நாடு விரைவு வண்டி. அதை அவர்களிடம் சுட்டிக்காட்டி நீங்கள் ஏறவேண்டிய ரயில் இது வல்ல அது ஆந்திரா விரைவு வண்டி என்று சுட்டிக் காண்பித்தபின் அவர்கள் தங்களுக்குள் ஒரியா மொழியில் பேசிக்கொண்டார்கள் அவர்கள் அந்தக்குழுவுக்குத் தலைவன் போலிருந்தவரைத் திட்டித்தீர்த்தார்கள் அது எங்களுக்குப் புரிந்த வரையில் ” ஏன் இப்படி நீயும் தவறாகப்புரிந்து எங்களையும் தவறாக வழிநடத்தி இப்போது சிக்கலில் மாட்டிவிட்டாய்” என்பதாக இருக்கலாம்

அப்போது அவர்களுக்குள் பேசிகொண்டு அந்தத் தலைவர் போலிருந்தவர் சொன்னார்.

 “ ஐயா மன்னிக்கவும் நாங்கள் இட்டார்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற 4 வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது ஒரே நேரத்தில்  5 வது நடைமேடையில் இந்த வண்டியும் 4 வது நடைமேடையில் ஆந்திரா விரைவு வண்டியும் வந்தன அங்கு இருந்த கூட்டதில்  நாங்கள் வந்த வழி மறந்து அந்த வண்டி என நினைத்து இந்த வண்டியில் ஏறி உங்களிடமும் தவறாக நடந்து கொண்டோம் மன்னிக்கவும் நாங்கள் இறங்க வேண்டிய போபால் ரயில் நிலையம் இப்போது வந்துவிடும் இறங்கிவிடுகின்றோம் அது வரைப் பொறுத்துக்கொள்ளுங்கள் “ என்றார்

நாங்களும் அவர்கள் வேண்டுமென்று வந்து அடாவடித் தனம் செய்யவில்லை. சரியான புரிதல் இல்லாமல்  நேர்ந்த தவறுதான் என்று புரிந்துகொண்டு   அவர்களிடம் சிரித்துக் கை கொடுத்து அனுப்பி வைத்தோம்அப்போது ஐயன் திருவள்ளுவரின் குறள் நினைவுக்கு வந்தது
"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்."

சரியான தெளிவில்லாமல் அவர்கள் ஏறியதும்  சரியாகப் பயணச்சீட்டைப் பதிந்து கொடுத்தவர் மேல் ஐயம் கொண்டதும் மனக்கஸ்ட்டத்தைத் தந்தது

அ.முத்துவிஜயன்