மத்யமர் கதைகள் - 7 - சிறுகதை

mathyamar-short-story
மத்யமர் கதைகள் - 7 - சிறுகதை

வேலைக்கிபோய்ட்டு சாயங்காலமா 5மணிக்கி வீட்டுக்குவந்தார் அவர். பொண்ணு ஹால்ல ஒக்காந்து டி வி பாத்துட்டு இருந்தா.. அவருக்கு கோவம் தலைக்கி ஏறிடுச்சு ஏற்கனவே ஆபீஸ்ல ஒரு பிரச்சனை அதுல மனசு சரியில்ல அங்கயும் சின்ன சண்டை மக படிக்காம டி வி பாக்குறதப்பாத்ததும் உச்சத்துக்கே போய்ட்டார்... 

"உனக்கெல்லாம் பொறுப்பே கெடையாதா அவனவன் கஸ்ட்டப்பட்டு ஒழைச்சிக் கொண்டாந்து கொட்டினா நீ படிக்காம டி வி பாப்பயா... ஒன்ன பெத்ததே வேஸ்ட் எதுத்த வீட்டு ஜனனி எப்புடிப்படிக்கிறா பாரு எல்லாத்துலயும் ஃப்ர்ஸ்ட்ரேங்க... ஆனா நீ ....உனக்கு என்ன கொறை வச்சேன்... ஏன் பொறுப்பில்லாம இருக்குற"ன்னு கொதிச்சார் அவ டிவிய ஆப் பண்ணிட்டு ரிமூட்டை தூக்கி சோபாவில எறிஞ்சிட்டு ரூமுக்குப்போனா...

அவர் அவளைக்கூப்புட்டு டீபோடச்சொன்னார் 
அவ எதோ மொணங்கிட்டே போய் டீ போட்டு எடுத்துட்டு வந்தா இவர் டிரஸ் மாத்திட்டு வந்து டீயை வாயில வைச்சா அது உப்பா இருந்துச்சு....கோவம் தலைக்கி ஏற "சனியனே டீ போடச்சொன்னா டீல உப்ப போட்டுக் குடுக்குற...பழிவாங்குறீயாமுண்டம்"ன்னு திட்டுனாரு..... 

அவ வேலமாப்போய் ரூமுக்குள்ள கதவைச்சாத்திக்கிட்டா...இவர் பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட் கெளம்பினாரு 
ஒரே மக அதுவும் செல்ல மக. படிப்புல மாத்திரம்தான் கொஞ்சம் கண்டிப்பா இருப்பாரு மீதி எல்லாம் சொதந்தி ரம்தான்... எல்லாம் அவ விருப்பம் தான்

ரொம்ப எல்லாம் கட்டுப்பாடு கெடையாது கேட்டெதெல்லாம் வாங்கிக்கொடுப்பாரு. அவர் சம்சாரமும் வேலைக்கிப்போறதால காசுபணத்துக்குத் தட்டுப்பாடு இல்ல.... மக காட் கேட்டான்னு கார் வாங்கிட்டார்.. அவளுக்கு கல்யாணம் பண்ணிபோறதுக்கு வீடுகூடகட்டிட்டார்... 

இத்தனைக்கிம் அவ +2 தான் படிச்சிட்டு இருந்தா...படிப்புல ஒகே ரகம் மொதல் பத்து ரேங்குக்குள்ள முன்னபின்ன வருவா... அவருக்கு அவ பள்ளிக்கொடத்துல இருந்து வந்தவன்ன டயத்த வீணாக்காமப் படிக்கனும்.... ஏன்னா +2 நல்ல மார்க் வரணும் அப்பத்தான் நல்ல காலேஜ் கிடைக்கும் பிளேஸ்மெண்ட் கெடைக்கும்...செட்டில் ஈசியா ஆகலாம்......

அவர் படிச்சது ஐ டி ஐ தான்..அதுனால பொண்ணு நல்லாப்படிக்கனும்ன்னு நெனைச்சார்...
மார்க்கெட்ல காய் கறி எல்லாம் வாங்கிட்டுத் திரும்புனப்ப அவருக்கு மககிட்ட கோவமா நடந்துக்கிட்டது நாவகம் வந்துச்சு...அவளுக்குப் புடிச்ச பப்ஸ் மூனு வாங்கிக் கிட்டாரு வீட்டுலமூனு பேரும் சாப்புடலாமுன்னு ... 

அதுக்குள்ள அவர் சம்சாரம் வேலைமுடிஞ்சி வர அவளையும் வண்டில ஏத்திக்கிட்டு வீடு திரும்புனாரு...ரெண்டுபேரும் வீட்டுக்கு வந்து காலிங்பெல் அடிச்சா மக கதவத்தொறக்கல திட்டிக்கிட்டே கதவைச்சாவி போட்டுத் தொறந்தார்...மகளுக்கு கோவம் இன்னும் சரியாகலை போலன்னு காய்கறிய அடுப்படில வைச்சிட்டு பப்ஸ் குடுக்க மக ரூம்கதைவத் தட்டுனாரு.....

கதவு தொறக்கல... அவ பேரைச் சொல்லி கூப்புட்டார்..ஒன்னும் சத்தத்தைக் காணோம் 
கதவை வேகமாத் தட்டினார்...ஒரு பிரயோசனம் இல்ல. சம்சாரத்தைக்கூப்புட்டு சொன்னார் அந்தம்மா கதவைத்தட்டுனாங்க பதில் இல்ல...  இவருக்கு லேசா சந்தேகம் வந்துச்சு... ஸ்டூலைப்போட்டு வெண்டிலேட்டர் வழியா எட்டிப்பாத்தார்....

அவர் கண்ட காட்சி அவர் உசிறு கலங்கிப் போச்சு.. அவரோட மக ஃபேன்ல தூக்குப் போட்டு தொங்கிட்டு இருந்தா.."அய்யோ அய்யோ"ன்னு கத்துனாரு அவர் சம்சாரம்" என்னங்க என்னங்க,?"ன்னு கேட்டா இவர் "போச்சுடி எல்லாம்போச்சு  மகதொங்கிட்டா அய்யோ என்ன பண்ணுவேன்"னு கத்துனாரு

சத்தம் கேட்டு எதிர்வீட்டுல இருந்து வந்து பாத்துட்டு போலீஸ் க்கு சொன்னாங்க... அவங்கவந்து கதவை ஒடைச்சி உள்ளாற  போனாங்க அங்க அந்தப்பொண்ண கீழ எறக்குனாங்க அவ ஏறி தள்ளிவிட்ட ஸ்டூல் கீழகெடந்தது
சத்தம் கேட்டு எதிர்வீட்டுல இருந்து வந்து பாத்துட்டு போலீஸ் க்கு சொன்னாங்க... அவங்கவந்து கதவை ஒடைச்சி உள்ளாற  போனாங்க அங்க அந்தப் பொண்ணக்  கீழ எறக்குனாங்க அவ ஏறி தள்ளிவிட்ட ஸ்டூல் கீழகெடந்தது ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல  கொண்டுபோனாங்க....

அவர் தன்னோட கோவமும் அவளைத் திட்டுனதும் தான் இதுக்குக்காரணம் "அய்யோ என் மகளை நான் கொன்னுட்டனே"ன்னு அழுதார்.  கோவப்பட்டுதிட்டுனதுனால அவ இந்த முடிவுக்குப்போய்ட்டான்னு நானே சாகடிச்சிட்டனேன்னு அழுதார்....

அவரோட சம்சாரத்துக்கு என்ன பண்ணு றதுன்னு தெரியல. அவளும் மகளே மகளேன்னு அழுதுகிட்டு இருந்தா...
அவர் "படின்னுசொல்லக்கூட எனக்கு உரிமை இல்லையா அதைக்கோவமாச்சொன்னா அதுக்காக இப்புடிபண்ணுறதா ஏன் மகளே இப்புடிச்செஞ்ச...என்ன மன்னிப்பாயா போய்ட்டியே" ந்னு பொலம்பிட்டு இருந்தார் நண்பர்கள்கிட்ட ""படின்னுசொன்னது தப்பா தப்பான்"னு அழுதுக்கிட்டே சொல்லிட்டு இருந்தாரு...பாக்கறவங்க கண்ணெல்லாம் கலங்கிப்போய் இருந்துச்சு

போஸ்ட்மார்டம் முடிஞ்சி பாடி வந்துச்சு அடக்கம்பண்ணிட்டு வந்து அழுதுக்கிட்டே இருந்தாங்க அவரும் அவர் சம்சாரமும்... அன்னிக்கிச்சாயங்காலம்  அவருக்கு ஒரு போன் வந்துச்சு... அதுல போஸ்ட்மார்டம் செஞ்ச டாக்டர் பேசுனாரு..." உங்க மக 3மாசம் கர்பமா இருந்தா... கரு இருந்துச்சு வயத்துல.... அதை நான் ரிப்போர்ட்ல எழுதல...ஏன்னா ஸ்கூல் படிக்கிற பொண்ணு அதான்... நானும் ரெண்டு பொண்ணுகளுக்குத் தகப்பன்..... மனசு கேக்கல அதான் உங்களுக்குச்சொன்னேன்".....னாரு

இவரு ஆடிப்போயிட்டாரு... +2 படிக்கிற பொண்ணு கர்ப்பமா அய்யோஎன்ன கொடுமை இதுன்னுன்னு நெனச்ச அதே சமயம் அப்ப அவ செத்ததுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தமிருக்குன்னு தோணிச்சு...
அவளோட நோட்டு டைரி எல்லாம் தேடினாரு ஏதாவது க்ளூ கெடைக்குமான்னு... யார் அவன் ந்னு எனக்குத் தெரிஞ்சாகனும் னு ரூம்பூராம் தேடினாரு... அவ கூட படிச்ச பிள்ளைகள்ட்ட விசாரிச்சாரு... அவங்களுக்கும் ஒண்ணும்தெரியல மர்மமா இருந்துச்சு

அவளோட செல்போன எடுத்து பாத்தாரு அதுல கால்ஸ் ஹிஸ்ட்டரி எல்லாம் டெலிட் ஆகியிருந்துச்சு... 
நண்பர் ஒருத்தர் அட்வைஸ் பண்ணாரு சர்வீஸ் குடுக்குற கம்பெனில இருந்து ஒருமாசத்துக்குகால்ஹிஸ்ட்டரிவாங்கலாமுன்னு ...இவர் அதை  கஸ்ட்டப்பட்டு வாங்கிப் பாத்தப்ப குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு நெறையாக்காலும் ரொம்பநேரம் பேசினதாகவும் தெரிஞ்சது....

அந்த நம்பருக்கு இவர் கால் பண்ணிப் பாத்தாரு  சுவிச் ஆப்புன்னு மெஸ்ஸேஜ் வந்துச்சு...அந்த நம்பரோட பெயர் அட்ரெஸ் சர்வீஸ் கம்பெனிக்கிட்ட இருந்து வாங்குனாரு
அது ஒரு பையனோட நம்பர் அட்ரெஸ் பக்கத்து ஊர்ல இருந்துச்சு... அவன கண்டதுண்டமா வெட்டிப்போடுற ஆத்திரத்துல  அங்கபோனார் அந்தப்பையனோட வீட்டுக்குபோய் விசாரிச்சார்... அவங்க எல்லாம் ஒரு மாதிரியா இருந்தாங்க.... வீட்டுல அந்தப்பையனோட போட்டோவில மாலை போட்டுருந்துச்சு... தோற்றம் மறைவுன்னு தேதி போட்டுருந்துச்சு 

அந்த மறைவு தேதி இவரோட மக இறந்த தேதி.. இவருக்குத்தூக்கி வாரிப்போட்டுச்சு... அவங்க கிட்ட ,"எப்புடிப்பையன் இறந்தான்?" னு கேட்டப்ப "அந்தத்தேதில காலையில பைக் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டதா" சொன்னாங்க அவங்க "என்ன விசயமா வந்தீங்க?" ன்னு விசாரிச்சப்ப  "பையன் கொஞ்சம் மார்கெட்ல பழக்கம் அதான் துக்கம்விசாரிக்கவந்தேன்"னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தார்.....

அவரோட ரூமுக்குள்ள போய் அழுதார்... அப்ப தற்செயலா அவரோட டைரியப் பாத்தார்.. .அதுல.. ஒரு  லெட்டர் இருந்துச்சு... அது அவரோட மக எழுதுனது....

"அப்பா என்னை மன்னிச்சிடுங்க...நான் தப்புப்பண்ணிட்டேன்... அவனும் செத்துட்டான் அவன்போன எடத்துக்கே நானும்போறேன்  . நீங்க கோவக்கார் அதை உங்ககிட்ட சொல்ற தைரியம் எனக்கில்ல......உங்களோட அன்புக்கு தூசி அளவுக்குக்கூட சந்தோசம் குடுக்கல நான் என்னைப்பத்தி எவ்வளவுகனவுகண்டிருப்பீங்க  அதையெல்லாம் மண்ணாக்கிட்டேன் என்னை தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்க  அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா திரும்பவும் உங்க மகளாப்பொறந்து  நீங்க சந்தோசப்படுற 

 மாதிரி வாழனும் அதான் என் ஆசை
என்ன மன்னிச்சிடுங்க அப்பா"....

அவரால      கண்ணீர அடக்க முடியல அவர் சம்சாரமும் வந்து பாத்துட்டு கதறி அழுதாங்க அதை மேல மாட்டிருந்த போட்டாவில் இருந்த அவங்க மக மெளனமாப் பாத்திட்டு இருந்தா...

அ.முத்துவிஜயன்