வாழ்க்கை படகு - சிறுகதை

vazhkai-padagu-short-story
வாழ்க்கை படகு - சிறுகதை

அன்னிக்கி அந்த அம்மா மார்க்கெட் போயிட்டு திரும்பிவார வழில பிளாட்பாரத்துல கூட்டமா இருந்துச்சு. முகத்த மூடியும் மூடாமலும் சனங்க நின்னுக்கிட்டு இருந்தாங்க. நடுவில யாரோ ஒக்காந்து இருக்குறமாதிரி தெரிஞ்சது. கூட்டத்தை வெலக்கிட்டுப்பாத்தப்போ அது ஒருபொண்ணு. பாத்தா பாவமா இருந்துச்சு . மூஞ்சிசரியாத்தெரியல முகக்கவசம் போட்டுருந்ததால . கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் நெனப்பு வந்துருக்கனும். அவளோட மூஞ்சில யாரோ தண்ணியால அடிச்சிருக்காங்கபோல. அவளுக்குப்பக்கத்துல ஒருத்தர் தண்ணிபாட்டிலோட நின்னுக்கிட்டு இருந்தாரு அவர்தான் சொன்னாரு அவரு வரும்போது அந்தப்பொண்ணு பாதையில மயங்கிக்கெடந்ததாகவும் அவருதான் தூக்கி பிளாட்பாரத்துல ஒக்காரவைச்சி தண்ணி தெளிச்சி சரிபண்ணுனதாகவும் சொன்னாரு. அந்தப்பொண்ணப்பாத்தாலே தெரிஞ்சது நடுத்தர வர்க்கத்தச்சேந்தபொண்ணுதான். அதோட ஒட்டிய வயிறப்பாக்கும்போது இது பசிமயக்கம்ன்னு நல்லாதெரிஞ்சது

அந்தம்மா பக்கத்துலபோயி என்னா வெவரமுன்னு கேட்டுச்சு. அந்தப்பொண்ணால பேசமுடியல சத்தம் வெளிய வரல பசி மயக்கமுன்னு தெரிஞ்சிபோச்சு. பக்கத்துல இருந்தவர்கிட்ட காசைக்குடுத்து டீ வாங்கியாரச்சொல்லிச்சு. டீ வந்தவன்ன அந்தப்பொண்ணு குடிக்க மாஸ்க்க கழட்டுச்சு. இந்தப்பொண்ண நாம எங்கயோ பாத்துருக்கமேன்னு யோசிச்சப்ப ஞாவகம் வந்துச்சு நம்ம கிட்ட படிச்ச மீனாட்சிதான்னு.

அப்ப அந்தம்மா கேட்டுச்சு நீ மீனாட்சிதானன்னு. அது சடக்குக்குன்னு நிமிந்துபாத்து நீங்க விஜயாடீச்சர்தானன்னு கேட்டுட்டு கண்ணீர்விட ஆரம்பிச்சிடுச்சு. உடனே அந்தம்மா எல்லாரும் கூட்டம் கூடாதீங்க எனக்குத்தெரிஞ்சபொண்ணுதான் நான் பாத்துக்கிறேன்னு சொன்ன வன்ன கூட்டம் கலைஞ்சது. சரி மீனாட்சி நீ எந்திரி போகலாமுன்னு கூப்புட்டவன்ன அந்தப்பொண்ணு மெதுவா எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சது. என்கூட வீட்டுக்கு நீ வரணும்ன்னு டீச்சரம்மா சொன்னவன்ன எதுக்கு வீண் சிரமம்ன்னு சொல்லிச்சி மீனாட்சி

அதெல்லாம் பேசப்புடாது என்கூடக்கெளம்புன்னு கையப்புடிச்சி இழுக்காதகொறையா கூட்டிட்டுப்போச்சு.வீட்ட்ல அவங்களோட மகன் இருந்தான். அவனைக்கூப்புட்டு அக்காவுக்கு பாத்ரூம் காமின்னு சொல்லிட்டு நீபோய் மொகத்தைகழுவிட்டு வாமா மீனாட்சின்னு சொல்லிச்சு

மீனாட்சி தயக்கத்தோட போக பாத்ரூமல எல்லாவசதியும் இருந்துச்சு மூஞ்சிகைகால் கழுவ சோப்பெல்லாம் புதுசா இருந்துச்சு தயக்கத்தோட கழுவிட்டு வந்தா துண்டுகுத்தாங்க டீச்சர்.

அப்ப அவங்க சொன்னாங்க மொதல்ல சாப்புடு அப்புறம் பேசலாமுன்னு சொல்லி தயாரா இருந்த சாப்பாட பரிமாறுனாங்க அப்ப மீனாட்சி மெதுவா சாப்புட ஆரம்பிச்சா.

விஜயா டீச்சருக்கு அவ பள்ளிக்கொடத்துல படிச்சப்ப நடந்ததெல்லாம் ஞாவகம் வந்துச்சு. அவங்க தமிழம்மாவா வேலைபாத்தாங்க அந்த அரசுப்பள்ளிக்கொடத்துல இந்தப்புள்ளஎட்டாவதுல இருந்து அவங்க கிட்டத்தான் படிச்சாங்க.

 படிப்பு நல்லா வரும் அதைவிட கவிதை அருமையா எழுதுவா, ஒரு நாள் வகுப்புல இருந்த புள்ளைங்க எதையோ பாத்துட்டு இருந்தாங்க . என்னா சத்தமுன்னு கேட்டப்ப டீச்சர் இந்தப்புள்ள எழுதுன கவிதை பிரபல வாரப்பத்திரிக்கைல வந்துருக்கு இவபேரோடன்னு காமிச்சாங்க. இவங்க வாங்கிப்பாத்தப்ப தெரிஞ்சது அது சிறப்பான கவிதைன்னு. இவங்களுக்கும் கவிதைல ஆர்வம் இருந்ததால அவளை ரொம்பப்புடிச்சிப்போச்சு. மாவட்ட அளவில நடந்த கவிதைப்போட்டிக்கு இவங்க அவகவிதய அனுப்பிவைச்சாங்க முதல் பரிசு கெடைச்சது. பரிசளிப்பு விழாவுக்கு அவ அவளோட அப்பாவோட வந்துருந்தா. அவர் ஒல்லியா கருப்பா இருந்தாரு அவரும் ரொம்பபடிச்சமாதிரி தெரியல ஆனா மக பரிசுவாங்குறதுல அவருக்கு அம்புட்டு சந்தோசம். அவரை இவங்களுக்கு அறிமுகம் பண்ணிவைச்சா மீனாட்சி. இவங்கதான் நான் பரிசுவாங்கக்காரணம்ன்னு. அவரு கும்புடுறேம்மான்னு கையெடுத்துக்கும்புட்டாரு . அப்ப மீனாட்சி சொன்னா எங்க அப்பாவும் நானும் பிரண்டுமாதிரி பழகுவோம் எனக்கு எல்லாமே எங்கப்பாதான்னு சொன்னா. அவரும் வெக்கப்பட்டாரு.அதுக்கபுறம் +2 வரை மீனாட்சியும் டீச்சரும் ரொம்ப நெருக்கம். பல கவிதைகளை எழுதிகாமிப்பா. அற்புதமா இருக்கும்

அப்புறம் நாளைஞ்சி வருசம் கழிஞ்சி அப்பாவோட தன் கலியாணப்பத்தைரிக்கை வைக்க வந்தா மீனாட்சி. நீங்க கட்டாயம் வரனும்ன்னு சொன்னா. இவங்களும் போயிருந்தாங்க. அந்தமாப்பிள்ளையப்பாத்தாலே இவங்களுக்குப்புடிக்கல. மீனாட்சியும் சொன்னா இந்த கலியாணத்துக்கே அப்பா சிரமப்பட்டுப் போயிட்டாருன்னு அதுக்கபுறம் இப்பத்தான்பாக்குறாங்க அவளை

மீனாட்சி சாப்புட்டு முடிச்சிருந்தா. தட்டகையில் எடுத்துட்டு கைகழுவிட்டு வரச்சொன்னாங்க. வந்தவன்ன கேட்டாங்க ஏன் இப்படின்னு.

மீனாட்சி அழுதுட்டா. அந்த மாப்பிள்ளை கெடச்சதே பெரிய விசயம் அப்பாவால முடிஞ்சது அவ்வளவுதான் பொண்ணு பாக்கவந்தவங்கவங்கள்ள கம்மியா கேட்டது இவருதான் அதுனால ஒத்துக்கிட்டாரு. நானும் அப்பாவுக்காக ஒத்துக்கிட்டேன் ஆனா பின்னாடிதான் தெரிஞ்சது அவர் ஒரு ஊதாறின்னு. வீட்டுச்செலவுக்கே காசுகுடுக்காம கண்டபடி செலவுபண்ணுவாரு. வீட்டுல ஒருத்தி இருக்குறதப்பத்திக்கவலைப்படாமத்திரிவாரு அதுனால பசியும் பட்டிணியுமா இருக்கவேண்டியதாயிடுச்சு,நடுவில இவளுக்கு ஒடம்பு சரியில்லாமபோனதால அவரும் கவனிக்காததால அம்மாவீட்டுக்கு வந்துருக்கு. இங்க வந்தவன்ன லாக்டவுன் ஆகிப்போச்சு. அப்பா வுக்குவேலையில்ல. சாப்பாட்டுக்கே வழியில்லாமப்போச்சு அவர்கிட்ட பணம் கேட்டப்ப அவர் அதை வழக்கம்போல காதுல வாங்கிக்கல

சாப்புட்டு ரெண்டுநாளாச்சு. முந்தாநாளு பக்கத்துல இருக்கவங்க ரெண்டுதோசை குடுத்தாங்க. அதுக்கபுறம் கைல காசு இல்ல வழக்கமா கடன் குடுக்குற கடைக்கி வந்தேன் அந்தக்கடை மூடி மூணு நாளாச்சு போயிட்டு வார வழில தலைசுத்துச்சு மயங்கிட்டேன் அப்புறம் நடந்தது ஒங்களுக்குத்தெரியும்ன்னு சொன்னா கண்ணீரோட.**
**அவளைப்பாக்கப்பாவமா இருந்துச்சு சரிவா ஒன்ன வீட்டுல கொண்டுபோய்விடுறேன்னு சொல்லி அவ வீட்டுக்கு கூட்டிட்டுப்போனாங்க போற வழில பழங்கள் பிஸ்கெட் கொஞ்சம் சாப்பாடுபார்சல் எல்லாம் வாங்கிட்டுப்போனாங்க. அவளோட அட்ரஸ் வாங்கிக்கிட்டாங்க

அவளைக்கொண்டுபோய் வீட்டுல விடும்போது அவளோட அப்பா அடையாளம் தெரியாம மாறிப்போயிருந்தாரு அவர்க்குஒடம்பு சரியில்லபோல மகளை நெனைச்சி கவலைப்பட்டே இப்புடி ஆகிட்டாரு.**
**அவரைப்பாத்து விசாரிச்சிட்டுபழங்களையும் வாங்கிட்டுப் போனதைக்குடுத்தாங்க. அவரு கையெடுத்துக்கும்புட்டாரு பேச்சு வரல கண்ணுல தண்னிதான் வந்துச்சு. அப்ப இவங்க சொன்னாங்க கவலைப்படாதீங்க சீக்கிரம் எல்லாம் சரியாகும்ன்னு

அவங்கபோயி ரெண்டுமணிநேரத்துல ஒருத்தர் பைக்கில வந்து மீனாட்சிக்கிட்ட அரிசி மளிகை அப்புறம் கைல 1000 ரூவாயும் குடுத்தாரு தமிழம்மா குடுக்கச்சொன்னதா. மீனாட்சிக்கி கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு. என்ன சொலறதுன்னு தெரியல போன்ல அவங்க நம்பரைத்தேடி பேசினப்ப அவளால பேசமுடியல அழுகதான் வந்துச்சு

அப்ப அவங்க சொன்னாங்க இது ஒண்ணும் பெரியவிசயமில்ல பென்சன்ல மாசாமாசம் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு பணம் கொடுப்பேன். இனி அடைப்பு திறக்குறவரைக்கும் அது உனக்குத்தான் குடுக்கப்போறேன்.  வாழ்க்கைப்படகு திசைதெரியாம நிக்கிறப்ப எங்கயோ இருந்து வரும் காத்து கரைசேக்கும் அதுக்கப்புறம் அவங்க பொழைச்சுக்கிவாங்க நான் ஒரு காத்துமாதிரி. என் மாணவி என் பழைய நட்புக்கும் உன்னோட தமிழ்க்கவிதைக்கும் இது என்னாலான காணிக்கைன்னு சொன்னதை கேட்டப்ப ஒடஞ்சி அழுக ஆரம்பிச்சா மீனாட்சி.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்