விட்டிசலூன் - சிறுகதை

vitti-saloon-short-story
விட்டிசலூன் - சிறுகதை

முடிவெட்டப்போறதுனாலே புடிக்காது இவனுக்கு. ஆனா இவங்க அப்பா 
"என்னடா கரடிக்குட்டி மாதிரி முடிவளத்துருக்கே ஒழுங்காப்போய் முடிவெட்டிட்டுவா"ன்னு சொல்லுவாரு. 
"ஞாயத்துக்கெழம வெட்றேன் பா" ந்னு ஒருவாரம் அதிகபட்சமாத் தள்ளிப் போடலாம். அதுக்குமேல முடியாது. அந்தஞாயத்துக்கெழம வரை அப்புடித்தான் தள்ளிப்போட்டான். 

ஞாயத்துக்கெழம போறதும் எரிச்சல்தான் . அன்னிக்கி போனா வரிசைல ஒக்காரனும் ரெண்டு மூணுமணிநேரம் ஆயிடும். அடுத்து அவர்கிட்ட முடிவெட்டுறதே எரிச்சல்தான் என்னா மண்டையசுத்தமா கரும்பிப் புடுவாரு. அவனோட அப்பாவோட நிரந்தர ஆணை அங்க செயல் படுத்தப்படும்.

இவன் போனா ஒட்ட வெட்டச்சொல்லி ஆர்டர். அதுக்குமேல அந்தக்கடை நடத்துற முடிவெட்டுறவர் பேரு விட்டி. விட்டி புல்லு வெட்டுறமாதிரிதான் முடியே வெட்டுவாரு அதுலயும் அந்த மிசின் ஒண்ணு இருக்கும் அதுவே விட்டி மாதிரிதான் இருக்கும் . சனியன் முடிய வெட்டுறதுக்குப்பதிலா புடுங்கும். மண்டையில நாத்துப் புடுங்குறமாதிரி மசுற ஒவ்வொன்னா புடுங்கித்தொலையும் போது உசுறே போகும் . 

அதுக்குமேல எல்லாரையும் அந்த சுத்துற நாக்காளில ஒக்காரசொல்லுற விட்டி இவன் போனா அதுக்குமேல ஒரு பலகா மரத்தைப் போட்டு அதுல ஒக்காற சொல்லுவாரு அதுவேற அவமானமா இருக்கும் எல்லாருக்கும் துண்டு போத்துறவர இவனுக்கு துண்டு போத்தமாட்டாரு. முடியப் புட்டுங்கிட்டே சொல்லுவாரு

" ஒங்க அப்பாவ இந்தமாசமாவது காசக் குடுக் குடுக்கச்சொல்லுடா. பாக்கி அப்புடியே நிக்கிது"ம்பாரு 
கடனுக்கு முடிவெட்டுறதுன்றது முடியப் புடுங்கும் போதே தெரியும். அந்தவாரக் கடைசில அம்மாயி வீட்டுக்கு போறதா இருந்துச்சு. அங்க அவனோட மாமன் மகள் இருப்பா அவளப்பாக்கப்போறப்ப கரைச்சான் மண்டையோட போனா அவ சிரிப்பா "கரைச்சான் மண்டை"ன்னு கேலி பண்ணுவா

அதுக்காக விட்டிக்கிட்ட ஒரு பேரத்தப் பேசுறதுன்னு முடிவோடதான் போனான். அங்க வழக்கம்போல கொஞ்சம் கூட்டமாத்தான் இருந்துச்சு காத்துருக்கவங்க பேப்பர் படிச்சிட்டு இருந்தாக. இவனக்கூப்புடுறவரைக்கும் இவனும் பேப்பர் படிச்சான். தனியாசிறுவர் மலர் புத்தகம் கெடந்துச்சு. சலூன்ல விதம் விதமா முடி டிசைன் படமெல்லாம் இருந்துச்சு. நமக்கு அந்த பாக்கிய மில்லன்னு நெனச்சிக்கிட்டான் கடைசியா இவனக்கூப்புட்டு

விட்டி சேர்மேல வழக்கப்படி பலகாமரத்தை வைச்சவன்ன அவருகிட்டச்சொன்னான் 
”அப்பா இந்தத்தடவ முடிய க்கொஞ்சம் விட்டு வெட்டச்சொன்னாருன்னு”
ஒரு பொய்ய அவருகிட்ட அவுத்துவிட்டான்

தயாரா அம்மாகிட்ட நோட்டுவாங்கன்னு சொல்லி வாங்கிவைச்சிருந்த காசையும் குடுத்தான் விட்டிக்கு காசப்பாத்தவன்ன ஒரு சந்தோசம். சரிடா அதுமாதிரி செஞ்சுடுவோம்முன்னு வெட்ட ஆரம்பிச்சாரு. . வழக்கம்போல விட்டி தலையில தண்ணியத்தொளிச்சி வெட்ட மண்டையில கையவைச்சவன்ன தூக்கம் சொக்குச்சு. முளிச்சுப்பாக்கையில பின் மண்டையில முடியக்கரும்பிட்டாரு. 

இவனுக்கு தூக்கிவாரிப்போட்டச்சு. விட்டி மாமா என்ன கரும்பிட்டீங்கன்னு கண் கலங்கச் சொன்னான். 
"அட மறந்துட்டேன் முன்னாடி சரிபண்ணி டலாம்” ன்னு சொல்லி முன்னாடி வெட்டினாரு . பரவால்லாம முடி இருந்துச்சு. ”இதுபோதுமாடா”ன்னு கேட்டாரு 

இவனுக்கு சந்தோசம் முன்னாடியாவது தப்பிச்சதேன்னு . ஓகே சொல்லிட்டு அங்க இருந்த சீப்புல இருந்த முடிய எடுத்துட்டு பாலும் பழமும் சிவாஜி ஸ்டைல்ல சீவிப்பாத்தான். அந்த முடி முட்டமாதிரி முன்னந்தலையில நின்னுச்சு. ஒரேசந்தோசம். சரி வாறேன்னு விட்டிக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குப்போனான். 

அங்க வாசல்ல அவனோட அப்பா ஒக்காந் திருந்தாரு. இவனப்பாத்துட்டு
“ என்னடா முடிவெட்டப் போகலையா?”ன்னு கேட்டாரு இவனுக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 
”வெட்டீட்டேன்பா”ன்னான். 

“என்னத்த வெட்டின முடி அப்புடியே இருக்கு விட்டி தொழில் போட்டுட்டானா. இப்புடி
வெட்டுனாத்தான் சீக்கிரம் முடிவளந்து திரும்ப வருவ சீக்கிரமாக்காசு வாங்கலாமுன்னு செஞ்சிருப்பான் நீ வாடா என்கூட””ன்னு இவனகையப்புடிச்சி இழுத்துக்கிட்டுக் கடைக்கிப்போனாரு கடையில விட்டிக்கிட்ட சத்தம்போட்டாரு 
“என்னா முடிவெட்டுற நீ முடி அப்புடியே இருக்கு. ஒழுங்கா ஒட்ட வெட்டு இல்லாட்டினா காசு தரமாட்டேன்”னாரு.
விட்டி 

“குடுத்துட்டாலும்”ன்னு மொணங்குனாரு. இவன் பார்வையால கெஞ்சுனான். 
“போட்டுக்குடுத்துராத மாமா”ன்னு. அவரு ”சரின்னே வெட்டிடு வோம் ”ன்னு ஒக்காரவைச்சி சுத்தமா மொட்டையடிச்சமாதிரி கடுப்புல வெட்டிபுட்டாரு. 

கண்ணாடில இவனப்பாக்க இவனுக்கே அழுக அழுகயா வந்துச்சு. சகிக்கல. மாமாமகவேற கிண்டல் பண்ணு வாளேன்னு கண்ணீர்வழிய ஆரம்பிச்சிச்சு. அப்பாஅதைப்பாத்துட்டு

“ யோவ் விட்டி மிசின மாத்துயா. புள்ளைக்கி வலிக்குதுபோல அழுகுறானுல்ல”ன்னு சொல்லிட்டு வழக்கம்போல பாசிங்சோ சிகிரெட்டப்பத்தவைச்சாரு

இவனோட அழுக நிக்கவேயில்ல. அப்ப அப்பா சொன்னாரு வெறுப்பேத்துற மாதிரி
“” ம்ம்ம் இப்பத்தான் மொகம் லட்சணமா இருக்கு”ன்னு. இவன் சுவத்துல முட்டிக்கிட்டான் வெறுப்புல. 
“பாத்துவாடா”ன்னாரு அப்பா 

சிகிரெட் பொகைய வளையம் வளையமா ஊதிக்கிட்டே.........
அது நடந்து பலவருசமாச்சு, அந்தப்பக்கம் போய் நாளாச்சு.
சமீபத்துல ஊருக்குப்போனப்ப விட்டிசலூன் பக்கமாப்  போனான் இவன்  கடை யெல்லாம் மாறி இருந்துச்சு.... ஏதோ பார்லர் மாதிரி... வெளியே டிஜிட்டலில் ஸ்பா ந்னு போர்டு இருந்துச்சு... உள்ள சின்ன வயசுல  ஒருத்தர்  அவரே டிசைனா முடி வைச்சிக்கிட்டு  வாலிபப்பையனுக்கு.... முடி வெட்டிக்கிட்டு  இருந்தாரு...

நான் உள்ள போனவன்ன
“  என்ன பண்ணனும் கட்டிங்க கலரிங்கா’’ந்னாரு
நான் கேட்டேன் 
‘”விட்டி அய்யா கடையா இது”ன்னு 
அவர்
“ ஆமா நான் அவர் மகன் தான்.”.. ந்னாரு 
”விட்டி அய்யா எப்படி இருக்காரு”ன்னேன்..
“அவருக்கு வயசாயிடுச்சு... கடைக்கி வாறதில்லை நான் தான் இந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி மாத்தி  கடை நடத்துகிறேன்” ந்னாரு

“அவரைப்பாக்கமுடியுமா”ன்னு கேட்டேன் . ”இருங்க அவரைக்கூட்டிட்டு வாறேன்”ன்னு  போன்ல பேசுனாரு.... பேசிட்டு 
“கொஞ்சம் இருங்க அவரே வார்றாறாம்... இருங்க டீ சொல்றேன்  சாப்புடுங்க சர்க்கரை நார்மலா இல்ல”,,,ன்னு இழுத்தார்
”நார்மல்”தான் ந்னு சொன்னேன்.. டீ வந்தது சாப்பிடுக்கிட்டு இருக்கும் போது  அவர் அவர் வந்தாரு....  
“தம்பி வாங்க நல்லா இருக்கீங்களா”ன்னு கேட்டாரு. 
“ஆமா நீங்க?”ன்னு கேட்டேன் 

”மகன் பாத்துக்கிறான்..... உங்க அப்பா தவறி ரெண்டு வருசம் ஆச்சுல்ல”ன்னாரு 
ஆமா....ன்னேன். 
நான் சொன்னேன் 
“இப்பவும் உங்ககிட்ட முடிவெட்டிக்க ஆசை”ன்னேன்....
 அவர் சந்தோசமா வெட்டுறேன்

“.. நீங்க சின்னப்புள்ளயா இருக்குறப்ப நீங்க ஆசைப்பட்டமாதிரி வெட்டி விட முடியல...  இப்ப சொல்லுங்க நீங்க எப்புடி சொல்றீங்களோ அப்படி வெட்டி விடுறேன்..”..  ந்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு......
 நான் சொன்னேன்

  ”எனக்கு எங்க அப்பா சொன்ன மாதிரியே இப்பவும் வெட்டிவிடுங்க”ன்னு சொன்னேன்......
“ஏன்  இப்ப வாவது  உங்க  விருப்பப்படி வெட்டுறேனே”ன்னாரு...
நான் சொன்னேன்..... 

“அவர் அப்ப சொன்னது எதுக்குன்னு அவர் வயசு வரும்போதுதான் தெரிஞ்சது.... இப்ப அதுமாதிரி முடி வெட்டிக்கும்போது  எங்க அப்பாவா நான் நான் மாறிட்டதா நெனைக்கிறேன்”னு சொல்லும்போது அப்பா நினைவில் கண்கள் கலங்குச்சு...
விட்டி சொன்னார்....

“ ஆமா உங்க அப்பாவைப் பாக்குறமாதிரியே இருக்கு... எப்பேர்பட்ட மனுசன் அவர்”ன்னு கண்ணதொடச்சிக்கிட்டே சொன்னார்...... 

அ.முத்துவிஜயன்