ஒறுத்தல் - சிறுகதை
அந்தப்பையனுக்கு ஒரு 30 வயசிருக்கும் பாத்தாலே தெரியுது அவன் சென்னையில ஏதோ ஐ.டி கம்பெனில வேலையில இருக்கனும் பாக்க நல்ல பையனாத்தான் தெரிஞ்சது அவன் உள்ளாற வந்ததும் குடிக்கத் தண்ணி குடுத்தார் அவர். அதை பாதி காலி செய்துவிட்டு வைத்தான்
“இப்ப சொல்லுங்க தம்பி வந்த விசயம்”
“ வெளிய வீடு வாடகைக்குன்னு போட்டிருந்துச்சு அதான் பாக்கலாமுன்னு வந்தேன்”
“ நீங்க பாக்கவந்தது ஒங்களுக்கா இல்ல வேற யாருக்குமா நான் ஏன் கேக்குறேன்னு ஒங்களுக்குப் புரிஞ்சிருக்கும்”
“ எனக்குத்தான் பார்க்கவந்தேன் ஆனா நீ ஏன் அப்படிக்கேட்டீங்கனு புரியல”
” இங்க புரோக்கர்கள் அதிகம் அவங்க நடுவில வந்து உங்ககிட்டயும் கமிசன் வாங்குவாங்க என்கிட்டயும் கமிசன் கேப்பாங்க எவ்வளவு தெரியுமா? ஒரு மாச வாடகை வீடு என்னோடது குடியிருக்கப்போறவங்க நீங்க நடுவில அவனுக்கு எதுக்கு நாம காசு தரணும் அதான் கேட்டேன் நீங்க உங்களுக்குத்தான் பாக்க வந்தீங்களான்னு ?”
” எனக்குத்தான் வீடு வீட்டைப் பாக்கலா முங்களா? மாடிலதான வீடு ?”
“ ஆமா மாடில நாலு 2 BHK அப்பார்மெண்ட் கட்டிருக்கேன் ஒன்னு காலியிருக்கு மீதமெல்லாம் ஆளுக இருக்காங்க வாங்க பாக்கலாம் “ நு சொல்லிட்டு உள்ளபோய் சட்டை போட்டுக்கிட்டு சாவியும் எடுத்துக்கிட்டு வந்தாரு
”வாங்க லிஃப்ட்ல போயிறலாம் இப்பயெல்லாம் லிஃப்ட் இல்லைன்னா மாடிக்கு வாடகைக்கு யாரும் வரமாட்டீறாங்க” நு சொல்லிக்கிட்டு முன்னாடி போனார்
வந்தவனும் பின்னாடி போனான் மேலேபோய் வீட்டைத்திறந்து காமிச்சார். அருமையா இருந்துச்சு ஒரு ஹால் ஒரு மாடுலர் கிச்சன் ரெண்டு வெஸ்டெர்ன் டாய்லெட் அட்டாச்சுடு ரெண்டு பெட்ரூம்கள் பால்கணின்னு நல்லா இருந்துச்சுஃபேன் லைட் ஏ.சி எல்லாம் இருந்துச்சு
“ என்னப்பா எப்புடி இருக்கு வீடு புடிச்சிருக்குதா? நு கேட்டார் அவர்
“ நல்லாருக்குசார் எவ்வளவு வாடகை ?
“15000 ரூ மாசவாடகை செர்வீஸ்சார்ஜ் 2000 வரை வரும் கரண்டுபில் தனி மீட்டர் நீங்கதான் கட்டிக்கனும் 10 மாச அட்வான்ஸ் மொதல்லயே குடுத்துரனும் அப்புறம் உங்க ஆதார் கார்டு ரேசன் கார்டு ஜெராக்ஸ் வேணும் “
” இதெல்லாம் நார்மல்தானே வேற கண்டிசன் ஏதுமிருக்கா நான் வெஜ் சமைக்கலாமா?”
“ நீங்க என்ன வேணுமானாலும் சமைச்சிச் சாப்புடுங்க அது ஒங்க இஸ்டம் ”
” சரி என்ன வேலை செய்யிறீங்க ?”
“ நான் ஐடி கம்பெனில வேலைசெய்யிறேன் “ நு சொல்லி ஐடி கார்டு கொடுத்தான்
“ சொந்த ஊர் எது ?”
மதுரைக்குப் பக்கத்துல ஒரு ஊர் பெயர் சொன்னான்
அந்தப்பெயரைக்கேட்டதும் இவருக்குத் தூக்கி வாரிப்போட்டது” அப்படியா ஒங்க அப்பா பேரு?”
அவன் அவனோட அப்பா பேரைச் சொன்ன வன்ன இவர் அவனைக்கேட்டார்” நீங்க அந்த கொடைவீட்டுக்காரர் மகனா?
“ ஆமாம் சார் அவரோட மூனாவது மகன் நான் அண்ணன் கள் எல்லாம் இப்ப இல்ல அப்பா இருக்காரு ரொம்ப வயசாயிடுச்சு வீட்டோட இருக்காரு மகனுக இழப்புனால ஒடைஞ்சு போயிட்டார் சொத்துபத்து எல்லாம் போச்சு நான் சிரமப்பட்டு படிச்சி இங்க வேலைக்கி வந்துருக்கேன் அடுத்தமாசம் கல்யாணம் அதான் வீடு பாக்குறேன்”
பெரிய வீடுன்னு சொன்னவன்ன இவருக்குப் பழைய நெனப்பு வந்துருச்சு. அந்த வீட்டுக்காரவுங்கதான் ஊருக்குப் பெரிய தலக்கட்டு எல்லாம் அவங்கதான். அவங்களை மீறி அங்க எதுவும் நடக்காது
இவருக்கும் அதே ஊருதான் அங்கதான் பொறந்து வளந்தது எல்லாம். இவங்க வீடு ஊருக்கு ஒதுக்குப்புறம் , ஊருக்குள்ள வாரதுன்னா அது வழியாத்தான் வரனும் அதுக்குப்பக்கத்துல எல்லாம் பெரிய வீட்டு நெலங்கள் தான் அவங்க சொத்துதான் ஊரில பாதி ஊரிலே பெரிய வீடுதான் எங்க இருந்துபாத்தாலும் தெரியும் அதுல அவங்களுக்குப் பெருமை
அந்த வீட்டை விடப்பெருசா யாரும் வீடு கட்டிவிட முடியாது கட்ட யாருக்கும் வசதியும் இல்ல
அதுமாதிரி நேரத்துலதான் இவருக்கு வளைகுடாவில வேலை கெடச்சது டிப்ளோமா வரைக்கும் படிச்சிருந்ததுனால நல்ல சம்பளம்வேற
இவருக்கு ஒரு ஆசை எப்படியாவது அந்தப்பெரிய வீட்டைவிடப்பெருசா வீடு கட்டிரனும் நு இவர் நல்ல நேரம் இவரோட திறமைனால பதவி உயர்வு சம்பளஉயர்வு எல்லாம் கெடைச்சது.
அதுனால பொங்கலுக்கு ஊருக்கு வந்தப்ப லோனும் அப்ளைபண்ணி அவரோட ஆசைப்படி பெரிய வீடா அதுவும் உயரத்துல கொடைவீட்டை விடப்பெருசா கட்ட ஏற்பாடு செஞ்சு பூமி பூஜை போட்டு வேலை தொடங்கினாரு
ஆனா மறுநாளே பிரச்சனை இவரோட எடத்துல பெரிய வீட்டுக்காரவங்க வந்து கல்ல ஊண்டினாங்க இது எங்க எடம் நு சொல்லி
இவர் தாலுகா ஆபீஸ் எல்லாம் போய் பணம் கட்டி ஆளக்கூட்டிவந்து அளக்க ஏற்பாடு செஞ்சாரு ஆனா அவங்க உள்ளாற எறங்கவே விடல
அப்ப அவங்க சொன்னாங்க” சேரில ஒரு வீடு எங்க வீட்டவிடப்பெருசா கட்ட விட்டுருவோமா அது எவ்வளவு அவமானம் வேணுமான ஒங்க சேரிக்குத்தக்கன சின்னதா நானே கட்டித்தாறேன் இந்த பெரிய வீட்டுக்கன வெல்லம் விட்டுருன்னு “ மெரட்டுனாங்க
” எங்க எடத்துல எங்ககாசுல கட்டுறதுக்கு நான் யாரைக்கேக்கனும் ?”
“ அதெல்லாம் தெரியாது இங்க நாங்க வைக்கிறதுதான் சட்டம் நு பெரியவீட்டுக்காரர்” மெரட்டுனாரு
“ஒங்க மெரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்னு” இவர் சொல்ல
“ அப்ப அதுக்கு உண்டானத நீ அனுபவிப்ப ஒழுங்குமரியாதையாச் சொன்னா கேக்கமாட்ட போ நீ ரொம்ப வருத்தப்படுவ”
அவங்க சொன்னமாதிரியே இவரோட அப்பாவை வயல்ல இருந்து வேலைசெஞ்சிட்டு வரும்போது கைய வெட்டிட்டாங்க
இவர்போய் போலீசில கம்ளெயிண்ட் பண்ணப்போனா அவங்க அதை எடுத்துக்கல அங்க இவரோட அப்பாமேல ஏற்கனவே கம்ப்ளெயிண்ட் குடுத்துருந்தாங்க இவரோட அப்பா ஒருத்தரை வெட்டினதா
ஊரில இருக்குற நாலுபேரு வந்து பஞ்சாயத்துப் பண்ணுனாங்க ”நீங்க கம்ளெயிண்ட் குடுக்கலைன்னா நாங்க குடுத்த கம்ளெயிண்டை வாபஸ் வாங்கிக்கிறோம்”னு
மறுநாள் இவங்க வீட்டுல கட்டிருந்த பசுமாடுகள் வாயில நொரை தள்ளிக் கெடந்துச்சு அதைப்பாத்துட்டு இவங்க அப்பா சொன்னாரு “ நமக்கு இந்த ஊரு வேணாமுடா நம்மல வாழ விடமாட்டானுகனு சொல்லி அழுதாரு. அப்புறம் வந்தவெலைக்கு எடம் எல்லாத்தையும் வித்துட்டு ஊரைக்காலி பண்ணிட்டு இங்க வந்துட்டாங்க
இப்ப இவர் சொன்னாரு அவன்கிட்ட
” நானும் ஒங்க ஊருதான் சேரில வீடுகட்டபோய் நடந்த விசயம் ஒனக்குத்தெரியுமா?”
”கேள்விப்பட்டுருக்கிறேன் சார் நான் அப்ப சின்னப்பையன் எங்க அப்பா பன்னாத அட்டூழியம் இல்ல அதுக்கெல்லாம் சேத்துத்தான் இப்ப அனுபவிக்கிறாரு
என்னோட அண்ணன் மாருக சொத்தெல்லாம் காலி பண்ணுனானுக. எல்லாம் போச்சு அத்தோட திடீர் திடீருன்னு ரெண்டுபேரும் செத்துப்போனாங்க அம்மா அதுல பைத்தியம் ஆயிட்டாங்க அதைப்பாத்துட்டு அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து காப்பாத்தப்பட்டது பெரிய விசயம் ஆயிப்போச்சு அதுல அவருக்கு ஒரு கையும் காலும் வெளங்கல சரி சார் நான் வறேன் உங்க நெலையில நான் இருந்தாலும் எனக்கு நானே வீடுகுடுக்கமாட்டேன் நான் வறேன் சார் “ நு சொல்லிட்டு வெளிய போகக்கிளம்பினான்
அப்ப இவர் சொன்னார் ”அவங்க எதுக்கு அப்படிப்பண்ணுனாங்கன்னு தெரியல ஆனா அதுனால எனக்கு நல்லது நடந்துருச்சு அந்தக்காசை எடுத்துட்டு வந்து இங்க 15 செண்ட் நெலம் வாங்கிப் போட்டுட்டு வாடகைவீட்டுல குடியிருந்தோம் நான் திரும்ப வளைகுடாவுக்கு வேலைக்கிப்போனேன் பத்து வருசம் கழிச்சி 5 செண்ட் வித்தகாசுல இந்த பில்டிங்கக் கட்டினேன் ஏன்னா வெலை அவ்வளவு ஏறிருந்துருச்சு கோயாம்பேடு பஸ்டாண்டு வந்தவன்ன இடம் இங்க கெடைக்கல
ஒரு வேளை நான் அந்த ஊரிலேயே பெரிய வீட்டக்கட்டிருந்தன்னா பெருசா ரேட்டு ஒன்னும் ஏறிருக்காது வீட்டுல காசு முடங்கிருக்கும் ஆனா இன்னிக்கி கோடிக்கணக்குல ஏறிப்போச்சு மதிப்பு அதுக்கு ஒரு விதத்துல நான் நன்றி சொல்லனும் ஒங்க அப்பாவுக்கு “
“ நீ தாரளமா வா உனக்கு வாடகை கம்மிபண்ணித்தாறேன் எங்க ஊர்க்காரவர்ன்றதுல எனக்கு மகிழ்ச்சிதான் ஏன்னா வளைகுடாவில நான் பாத்துருக்கேன் உள்ளூர்ல இருக்குறவரைக்கும்தான் ஜாதி எல்லாம் வெளியேறிட்டா நம்ம ஊர்ன்ற பாசம் வந்துடும் வெளி மாநிலம் போனா நம்ம மாநிலம்ன்னாலே சந்தோசம் வரும் வெளிநாடு போனா நம்ம நாடுன்னாலே ஒரு சந்தோசம் வரும் அதுல நம்ம தமிழ் பேசினாலே சந்தோசமாயிடும் வா தாரளமா”ன்னார்
அப்ப சொவத்துல மாட்டிருந்த காலண்டர்ல பெருசாஎழுதியிருந்ததப் பாத்தான் அதுல
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"
நு எழுதியிருந்துச்சு.
அ.முத்துவிஜயன்