நெருக்கத்தின் இடைவெளி புத்தக விமர்சனம்!

nerukkathin-edaiveli-book-review
நெருக்கத்தின் இடைவெளி புத்தக விமர்சனம்!

இந்த வருடத்தின் வாசிப்பை கவிதை நூலிருந்து துவங்கியுள்ளேன். அடியேனின் ஆசான்களில் ஒருவரான முருகன் மந்திரம் சார் தோழர் ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூலை வாசிக்கப் பணித்தார். ஜெயஸ்ரீ அவர்கள் நேரில் வந்து புத்தகத்தை தந்தார். இந்தப் புத்தாண்டு வாசிப்பு இப்படித்தான் துவங்கியது.

எனக்கு கவிதை வாசிப்பதும் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸில் லட்டு (அங்கு லட்டு செம்மயா இருக்கும்) சாப்பிடுவதும் ஒன்று. லயித்துச் செய்வேன். ஒரே மூச்சில் கவிதைகளை வாசித்து முடித்தேன். மிகவும் எளிமையான சொற்களை வைத்து கவித்தேர் செய்துள்ளார். தேர் உலவும் பகுதியெல்லாம் அன்பு நிறைந்துள்ளது. தலைப்பிலுள்ள முரணை கவிதையால் நேர் செய்கிறார் தோழர் ஜெயஸ்ரீ.

அவரே குறிப்பிட்டுள்ளது போல இது அவரின் ஆரம்பம நடை. போகப்போக பெரும் படைகளோடு நம்மை நோக்கி வருவார். நிச்சயமாக என் நம்பிக்கையை அவரது முயற்சியும் பயிற்சியும் அனுபவங்களும் வாசிப்பும் நிரூபிக்கும்.
பிடிக்குள் இருப்பவர்களை விடுவிக்க எழுதுவதற்கும், பிடிக்குள் இருந்து தன்னை விடுவித்து வெளியேறிய பின் அதை விமர்சித்து எழுதுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஜெயஸ்ரீ இரண்டாம் வகை எழுத்துக்காரர்.
சார்ந்து இருத்தல் என்ற நிலையைத் தாண்டி தனித்து இயங்குதல் என்ற நிலைக்கு ஒரு பெண் வரவேண்டுமானால், கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் மிக மிக முக்கியம். பெரியார் குறித்த கவிதை ஒன்றால் அதைப் புரிய வைக்கிறார் ஜெயஸ்ரீ.

ஒரு ஆண் தன் சுயம் மறந்து எந்த எதிர்பார்ப்புமின்றி ஒரு பெண்ணின் காலில் மனதார விழுவான் என்றால், அந்தப் பெண் அவனின் மகளாகத் தான் இருக்க முடியும். ஜெயஸ்ரீ தன் அப்பா பற்றிய கவிதையில் இதைக்குறிப்பிட்டுள்ளார். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

நூலில் முத்தாய்ப்பாய் ஒரு கவிதை உண்டு. அதான் இது.

"எதற்கும் அடிமையாகிப் போகும் அளவிற்கு பழகாதீர்கள் என்பதில் பேரன்பும் கூட விதிவிலக்கல்ல"
ஜெயஸ்ரீ-யை விமர்சிக்க இன்னும் நிறைய அவர் எழுதுவார். அதனால் வாழ்த்துவதற்காக மட்டும் இந்த நூலை எடுத்துக்கொள்கிறேன்.