பொம்பள - சிறுகதை

pombala-short-story
பொம்பள - சிறுகதை

இடுப்புல கைப் புள்ளயத் தூக்கிக்கிட்டு காய்கறி வாங்கவந்தவளப்பாத்து கடைக்காரர் "ஆரு இது ஒம்பிள்ளையா"ன்னு கேட்டாரு. அதுக்கு அவசொன்னா "அந்தப் பாக்கிய மிருந்தா ஏன் நான் அரசமரத்தையும் புள்ளையாரையும் சுத்திட்டுக்கெடக்கேன் வாச்சது அம்புட்டும் சாவியாக்கெடக்கு நானே சீவனத்துப்போய் செவனேன்னு கெடக்கேன் நீ வேற வகுத்தெரிச்சலக்கெளப்பாதய்யா அப்புறம் வாய்க்கு வந்தத சொல்லி ஏசிப்புடுவேன்"னா.

"அப்ப புள்ள யாருன்னு சொல்லி கதைய முடிக்கவேண்டியதுதான அதைச்சொல்லாம ஏன் இழுத்துட்டுக்கெடக்குறவ."..ன்னார்

"இந்தாபாருய்யா ஈயத்தப்பாத்து இளிச்சதாம் எதுத்தாப்புல வந்த பித்தளைன்ற கதையா வுல்ல இருக்கு. அங்கயும் அதே கதைதான பாவம் நீயும்தான் கடையில மிஞ்சிற பாதாமும் பிஸ்த்தாவும் ஊறவைச்சித்தின்னுற. ஆனா அம்புட்டும் வெடிக்காத புஸ்வானமாத்தான கெடக்கு இதுல என்ன வெசாரிக்க வந்துட்ட அடுத்தவுக கதைன்னா ஆளாப்பறக்குறது தான் கதை எறவாரத்துல நாறிக்கெடக்கையில" நுசொன்னா..

"அப்பவும் புள்ள யாருன்னு சொல்லமாட்ட ஒன்னப் பூவந்தில கட்டிக்குத்து அஞ்சு வருசமாச்சு புள்ளகுட்டின்னு பேச்சக்காணோம் இப்ப பொறந்த ஊருக்கு வந்துருக்க அதான் நமக்குத்தெரியாம ஏதாச்சும் புள்ள கிள்ள பெத்துகித்துபோட்டியாக்கும்"னு கேட்டேன்னார்

"ஏன்யா இது என்ன ரகசியமா . வயிறு நெறையாம வாரிசு எப்புடிவரும். ஆனா வாரிசு இப்ப வந்துருச்சு ஆனா எனக்கில்ல .இது என் கொழுந்தன்"னா சலிப்போட.

அவர் அதிர்ச்சியாயி " என்னாது இது ஒன் கொழுந்தனா என்னாம்மா சொல்ற உன்புருசனுக்கு முப்பது வயசாகுது அவரோட ஆத்தாவுக்கு எப்புடியும் 50 இருக்கும் ஒன்னும் புரியலயே"ன்னார்
"புரிஞ்சி என்னா பண்ணப்போற. நடக்க வேண்டியது நடந்து பொறக்க வேண்டியது பொறந்தாச்சு . சொத்தும் பத்தும் சோரம் போகாம ஒன்னுக்குள்ள ஒன்னா முடிஞ்சிபோச்சு"ன்னா

"என்னாமா வெளக்கமாசொல்லிதொலைய வேண்டியதுதான. நான் தலைன்னா நீ வாலுங்குற நான் யாருன்னா வாரிசுங்குற ஆனா உன் புள்ளயான்னா இல்லங்குற மண்ட கொளம்பிப்போகுது சீக்கிரமா சொல்லு இல்ல நடையக்கட்டு என் யாவாரம் பாதிக்குது"ன்னு காட்டமா சொன்னார் கடுப்புல.

" அங்க அவுகளுக்கு சொத்துபத்து எக்க சக்கம்அம்புட்டையும் ஆளுறதுக்கு வாரிசு வேணுமுன்னு அவரோட மகவழிப் பேத்திய மகனுக்குக்கு கட்டிவைச்சாரு பூவந்தி கிராமத்துல. ஆனா அவனுக்கு வெண் குஸ்டம். ஒடம்பெல்லாம் அங்க அங்க வெள்ளையா இருந்துச்சு. வருசம் அஞ்சு ஆச்சு. ஆனா ஒன்னும் வாரிசு உருவாகுற வழியக்காணோம் . எல்லாரும் சாடமாடயா பேச ஆரம்பிச்சாக

இவமேல தப்புசொல்லி. மலடின்னு பட்டத்தைக்கட்டி வம்பு பேசுனாக. இவளும் பொறுத்துப்பாத்து ஒரு கட்டத்துல கடுப்பாயி சொல்லிப்புட்டா. அது ஆகுறகாரியமில்ல. அதுக்கு வாய்ப்புமில்லன்னு.
அப்ப இவளோட மாமனாரு ஒரு முடி வெடுத் தாரு. அவரோட மகனுக்கு இவளோட தங்கச் சிய ரெண்டாம் தாரமா கட்டிவைக்கிறதுன்னு. இவ குய்யோ மொறயோன்னு ஒப்பாறி வைச்சா".அப்ப அவரோட மாமனார் சொன்னாரு "இது என்ன ஊர் ஒலகத்துல நடக்காத ஒன்னா. அக்கா தங்கச்சிய வாரிசுக்காகக் கட்டிக்கிறது நம்ம வழக்கத்துல இருக்குறது தான"ன்னு...

அதுக்கு இவசொன்னா "அதுக்கு நான் ஒத்துக்கனுமே எனக்கு இஸ்ட்டமில்லாத போது எப்புடி அவருக்கு ரெண்டாம் கலியாணம் பண்ணுவீகன்னா.

அதுக்கு அவர் சொன்னாரு "கெடாய கேட்டுக் கிட்டு ஆரும் வெட்டுறதில்ல மாட்டக் கேட்டுக்குக் கிட்டு பாலு கறக்குறதுமில்ல. பொட்டப்புள்ளன்னா அடங்கிக்கெடக்கனும் அதுதான் குடும்பப்பொண்ணுக்கு அழகு அத விட்டுப்புட்டு பெரியவுக பேசுறப்ப குதிக்கி றதுல ஒன்னும் புரயோசன மில்ல"ன் னார்.

அப்பத்தான் அவ அந்த குண்டத் தூக்கிப் போட்டா . "நான் இவருக்கு வாக்கப்பட்டதே வெட்டிக்கித்தான். நான் பொம்பளையா இருக்கேன் ஆனா அவர ஆம்பளையா இருக்கச்சொல்லமுடியுமா. முடியாது ஏன்னா அவர் அம்புட்டுத்தான். சாவிபோன கருது இதுக்கு மேல வெளக்கமா என்னால சொல்ல எயலாது. இம்புட்டு நாள் நான் பொறுத் துருந்ததே அதிகம். இன்னேறம் வேறவன்னா எவனையாவது இழுத்துக்கிட்டுப்போயிடுவா.
நானின்றதுனால பொறுத்துக்கிட்டுக் கெடக்கேன் . இதுல என் தங்கச்சிய வேற இந்த படுகுழில தள்ளனுமா.என் உசிறு போனாலும் நான் சம்மதிக்க மாட்டேன்"னு தீர்மானமா சொன்னா....

அதுக்கு அவளோட மாமனார் சொன்னார் "அப்ப சொத்துப் பத்தெல்லாம் வாரிசு இல்லாம எவனுக்கோ போறதா. இதுக்கு ஒரு வழி பண்ணுறேன்னு மீசைய முறுக்கிக்கிட்டார்.

அடுத்தவாரம் திடீருன்னு மகனுக்குப்பாத்த பொண்ண அவரே கலியாணம் பண்ணி வீட்டுக்குக்கூட்டிட்டு வந்துட்டார். அன்னிக்கிப் பூராம் வீடேஎழவு விழுந்தமாதிரி இருந்துச்சு. இவ அழுக புதுசா வந்தவ அழுக ஊரு சனங்க எல்லாம் மூக்கு மேல வெரல வைக்க அது நடந்துபோச்சு. வந்தவளும் அழுது அடம்புடிச்சிப் பாத்தா.
ஆனா என்ன பண்ணி என்ன பிரயோசனம். அது ஆம்பளைக ராஜ்ஜியம். அங்க பொம்பளைக பேச்சு எடுபடாது. மொரட்டுத் தனமா நடக்கவேண்டியது எல்லாம் நடந்துபோச்சு. ஆமா வந்தபொண்ணு அவளோட மாமனாரால புள்ளத்தாச்சியானா. ஆனா அவமொகத்துல ஒரு நா கூட அந்த சந்தோசம் தெரியல. என்னத்தையோ பறிகொடுத்தமாதிரி இருந்தா...

மாசம் பத்தாச்சு ஆம்பளைப்புள்ள பொறந்துச்சு. அதுதான் இவளுக்குக் கொழுந்தன் பொறந்தான். இவளுக்கே அது அசிங்கமா இருந்துச்சு.பாவம் அந்தப் பொண்ணு ஒரு நா வீட்டுல ஆருமில்லாதப்ப தூக்குல தொங்கிடுச்சு. ஆனா அது பெருசா வீட்டுல இருந்தவுகளை பாதிக்கல. அந்த பிள்ளைய மொத்த சொத்துக்கும் வாரிசுன்னு கொண்டாடுனாக. வந்தவளோட துக்கம் காத்துல போயிடுச்சு.

இவளுக்கு அந்தக்கொழந்தைய வளக்குற பொறுப்பு வந்து சேந்துடுச்சு. ஆனா இவ அந்தக்கொழந்தைய வஞ்சகமில்லாம வளத்தா அவளுக்குள்ள இருந்த தாய்மை உணர்வு சொல்லிச்சி யாரோ செஞ்ச தப்புக்கு பாவம் இந்த பச்சப்புள்ள என்ன பண்ணும்.

ஆனா என்ன கேக்குறவுகளுக்குத்தான் பதில் சொல்லி மாளல.
வெளிய சொல்ல வெக்கம் உள்ளுக்குள்ள துக்கம்ன்ற கதையாப்போச்சு இவ பொழப்பு. ஆனா என்ன தனக்கு கெடைக்காத ஒரு பாக்கியம் இந்தக்கொழந்த மூலமா அவளுக்குக் கெடைச்சது. கொழுந்தன புள்ளையா வளக்குற பாக்கியம்.

அந்தப்புள்ள பொறந்து வருசம் திரும்புறதுக் குள்ள இவளோட மாமனாருக்குக் ஒரு கையும் காலும் விழுந்துபோச்சு. அவரும் படுத்துட்டாரு. ஆனா அவரகவனிக்க அவளோட புருசன் சொன்னப்ப அவ சொன்ன வார்த்தை "அம்புட்டுதிமிறோட ஒரு பொண்ணு வாழக்கையக் கெடுத்தாரில்ல. அனுபவிக்கட்டும் நீங்களும் பாத்துட்டுத் தடுக்கத்துப்பில்லாமத்தான இருந்தீங்க . நீங்களே உங்க அப்பாவப்பாத்துக்கங்க. என்னால அந்த கருமத்த தொடமாட்டேன்...

உங்க சொத்துக்கு வாரிசு வேணுமின்ன என்ன வேணுமானாலும் செய்யலாமுன்னு செஞ்சீக. அதோட பலன இப்ப அனுபவிங்க. உங்க மேல யாராவது எறக்கப்பட்டா அது மகா பாவம்"னு தீர்மானமா சொல்லிட்டா...
அப்ப அவளோட புருசன் கேட்டான் "நீயெல்லாம் ஒரு பொம்பளையா"ன்னு. அவ சொன்னா" அதத் திருப்பிக்கேக்க எம்புட்டு நேரமாகும் ஆனா நான் கேக்கமாட்டேன். என்கிட்ட நீங்க வாழந்த வாழக்கையக்கூட கொற சொல்லமாட்டேன் ஆனா உங்க அப்பா செஞ்சததட்டிக்கேக்கத்துப்பில்லாம நீங்க நின்னீங்களே அப்பத்தான் கேட்டுருக்கனும் நீங்க ஆம்பளையான்னு

என்ன ஜடம் மாதிரி வைச்சிருந்தபோது ஒங்களுக்குத்தோணலையா நான் ஒரு பொண்ணுன்னு அப்பத்தோணாத கேள்வி இப்ப ஏன் வருது நான் ஒரு பொம்பளையான்னு இப்ப சொல்றேன் ஆமா நான் ஒரு பொம்பளைதான் அதுனாலதான் யாரோ பெத்த புள்ளையானாலும் என் பிள்ள போல வளக்குறேன். ஒரு பொண்ணுக்கு ஆக்கத்தான் தெரியும் அன்பு கொடுக்கத்தான் தெரியும் தாயாக. அதைத்தான் நான் இப்ப செய்யிறேன்.. போங்கய்யா ஒங்க ராஜ்ஜியமும்

பொழப்பும்"னு சொல்லிட்டு கொழுந்தனத்தூக்கிட்டு போனா சாதரணமா தன்னோடஆறாத ரணத்த மறந்து....
அ.முத்துவிஜயன்