Breaking News :

Friday, October 11
.

வில்ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?


வில்ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது.
 உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார். ஜடா பிங்கெட்டின் குட்டையான முடி குறித்து கருத்து தெரிவித்து மேடையில் பேசினார். ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

 அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடாவின் கண்கள் திடீரென மாற்றம் அடைந்தது. அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பது போல உணர்த்தியது. இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.

 ஜிஐ ஜேன் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். இதில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை டெமி மூர் படத்திற்காக மொட்டையடித்துக்கொண்டு நடித்தார். இந்த நிலையில், வில் ஸ்மித்திடம் கன்னத்தில் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்கிக் கொள்ள முயன்ற கிறிஸ் ராக், "தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும்," என்று கூறினார். 50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரை வெளிப்படுத்தியிருந்தார். ஜடா பிங்கெட் பல நேர்காணல்களில் தமது முடி உதிர்தல் நோய் பாதிப்பு பற்றிய பிரச்னையை பேசியிருக்கிறார். அதன் காரணமாகவே தமது தலையை மொட்டையடிக்கும் கட்டாயம் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

  இந்த அசெளகரியமான சூழ்நிலைக்குப் பிறகு, கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதாக ஆஸ்கர் தேர்வுக்குழு அறிவித்தது. இதையடுத்து மேடை ஏறிய அவர், விருது பெற்றதும் கிறிஸ் ராக்கை அடித்ததற்காக கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார். அப்போது உணர்ச்சி பொங்கப் பேசிய அவர், "நான் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இங்கே உள்ள விருதுக்கு முன்மொழியப்பட்ட சக கலைஞர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார். இதன் பிறகே நிகழ்ச்சியில் சக கலைஞர்களிடம் நிலவிய இறுக்கம் குறைந்து ஆஸ்கர் விழா இயல்புநிலைக்குத் திரும்பியது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.